வடகிழக்கு பருவமழை புண்ணியம்... செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் 403 ஏரிகள் ஃபுல்!
சென்னை: வட கிழக்கு பருவமழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள 403 ஏரிகள் முழுவதுமாக நிரம்பியுள்ளன. பல ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
நிவர் புயல் அச்சுறுத்தி சென்ற நிலையில் ஏரிகள் நிரம்பி வருவதால் விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இங்கு இருந்து சென்னைக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் சமயத்தில் குடிநீர் தட்டுப்பாட்டையும் பூர்த்தி செய்ய முடியும் என்பதால் சென்னை மக்களுக்கும் இது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நல்ல மழை
வடகிழக்கு பருவமழை காரணமாகவும், நிவர் புயலின் தாக்கத்தினாலும் தமிழகத்தின் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னைக்கு அருகில் உள்ள மாவட்டங்களான செங்கல்பட்டு, காஞசிபுரத்தில் சில நாட்களாக பலத்த மழை கொட்டியது.

ஏரிகள் மாவட்டம்
இதனால் அந்த மாவட்டங்களின் ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்தனர். தமிழகத்தில் ஏரிகள் அதிகம் நிறைந்த செங்கல்பட்டு மாவட்டத்திலும், காஞ்சிபுரம் மாவட்டத்திலும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 909 ஏரிகளில் 403 ஏரிகள் 100% கொள்ளளவை எட்டியுள்ளது.

வேகமாக நிரம்புகின்றன
335 ஏரிகள் 75%, 140 ஏரிகள் 50% , 31 ஏரிகள் 25% கொள்ளளவை எட்டியுள்ளதாக பொதுப்பணி துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.1 ஏரி 25 சதவீதத்திற்கும் குறைவாக கொள்ளளவை எட்டியுள்ளது எனவும் அவர்கள் கூறினர்.
நிவர் புயல் அச்சுறுத்தலால் பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்கு திறக்கப்பட்ட தண்ணீர் மூன்று நாட்களுக்கு முன்னர் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் அங்கு இருந்து மீண்டும் இன்று காலை முதல் பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

2,47,000 நிலங்கள் பயன்
கீழ்பவானி வாய்க்காலில் வினாடிக்கு 1700 கனஅடி தண்ணீரும், பவானி ஆற்றில் வினாடிக்கு 900 கனஅடி தண்ணீரும் என மொத்தம் 2600 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.இதன் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். காலை நிலவரப்படி அந்த அணையின் நீர்மட்டம் 95.43 அடியாகவும், நீர் இருப்பு 25.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 649 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மக்களுக்கு எச்சரிக்கை
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு ஆற்றில் உள்ள தண்டரை அணைக்கட்டில் இருந்து 6 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இந்த ஆற்றின் கரையோரம் உள்ள இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது.