திருமாவுக்கு வந்துச்சே ஆத்திரம்.. "சாதி பித்தர்கள், சாதி வெறியர்கள்".. அரசுக்கு கோரிக்கை.. என்னாச்சு
சென்னை: "ஊராட்சிமன்றத் தலைவரின் காரில் விசிக கொடியைக் கண்டதும் பாமக சாதிப் பித்தர்கள் வெறிக் கூச்சலிட்டவாறு காட்டுத்தனமாகத் தாக்கி கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர்... தமிழக அரசே சாதி வெறியர்களை கைதுசெய்" என்று திருமாவளவன் காட்டமாக பதிவிட்டுள்ளார்.
வழக்கம்போல் மீண்டும் பாமகவுக்கும் - விசிகவுக்கும் மோதல் ஏற்பட்டுள்ளது.. கடலூர் மாவட்டம், மஞ்சக்குப்பம் பகுதியில் நடந்த சம்பவம்தான் தற்போது காரணமாக அமைந்துள்ளது.
கங்கை அமரனை விடுங்க.. அந்த கையெழுத்து இளையராஜாவுடையதே இல்லை.. அடித்து சொல்லும் விசிக: Exclusive

என்ன நடந்தது?
மஞ்சக்குப்பம் தனியார் திருமண மண்டபத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடந்தது.. இந்த கூட்டத்திற்கு வருகை தந்த பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாசுக்கு ஆலப்பாக்கம் பகுதியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

செல்லங்குப்பம்
இந்த நிகழ்ச்சியின்போது அன்புமணி வந்த வாகனத்திற்கு பின்னாடி, ஏராளமான கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கார்கள் திரண்டு வந்தன.. அப்போது விசிகவின் பூவனிகுப்பம் ஊராட்சி மன்ற தலைவர் அருள்ஜோதி, அவரின் குடும்பத்தினரும் செல்லங்குப்பம் அருகே காரில் சென்றுகொண்டிருந்தனர்.. அப்போது, எதிரே வந்த பாமக தொண்டர்கள், விசிக கட்சியின் கொடியினை பார்த்ததுமே, அந்த காரின் கண்ணாடி மற்றும் கதவுகளை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

கார் கண்ணாடி
இந்த தாக்குதலில் இருந்து, காரில் பயணித்த, விசிக நிர்வாகியின் குடும்பத்தினர் அங்கிருந்து உயிர்தப்பி சென்றனர்... இந்த தகவல் அதற்குள் விசிக தொண்டர்களுக்கு தெரிந்துவிட்டது.. ஆத்திரமடைந்த அவர்கள் சிதம்பரம் செல்லும் சாலை பூவனிகுப்பம் பகுதி மற்றும் செல்லங்குப்பம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது... தகவலறிந்த போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தி, போராட்டத்தையும் கைவிட செய்தனர்.. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதி சொன்னார்கள்.

பொதுக்குழு கூட்டம்
ஆனால், அதற்குள் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஊராட்சி மன்ற தலைவர் கார் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த பல்வேறு பகுதிகளை சேர்ந்த கட்சி தொடர்ந்து சாலைகளில் திரண்டுவிட்டனர்.. மேலும், பொதுக்குழு கூட்டத்தை முடித்துக் கொண்டு ஊர் திரும்பும் பாமக நிர்வாகிகள், தொண்டர்களும் அந்த வழியாக வந்துவிட்டனர்.. உடனே இரு தரப்பிலும் மேலும் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டது.. இதனால் போலீசார் உடனடியாக பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டதால், மிகப்பெரும் கலவரம் தடுக்கப்பட்டது.

திருமாவளவன்
எனினும், விசிக ஊராட்சி மன்ற தலைவரின் கார் கண்ணாடியை பாமகவினர் உடைத்த நிலையில், திருமாவளவன் அதற்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளார்.. இதுகுறித்தும் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார்.. அதில், "கடலூர் மாவட்டம், ஆலப்பாக்கம் ஊராட்சிமன்றத் தலைவரின் காரில் விசிக கொடியைக் கண்டதும் பாமக சாதிப் பித்தர்கள் வெறிக் கூச்சலிட்டவாறு காட்டுத் தனமாகத் தாக்கி கண்ணாடிகளை உடைத்து நொறுக்கியுள்ளனர். வண்டியிலிருந்தவர்கள் காயமின்றித் தப்பியுள்ளனர். தமிழக அரசே சாதி வெறியர்களை கைதுசெய்" என்று பதிவிட்டுள்ளார்.