சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சங்க பரிவாரங்களால் அவமானம்- அமெரிக்க ஆணைய விமர்சனம்- இனியாவது மத்திய அரசு மாற வேண்டும்: திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்கா ஆணையத்தின் விமர்சனத்தைத் தொடர்ந்து மத்திய அரசு இனியாவது தமது அணுகுமுறையை மாற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் லோக்சபா எம்.பி.யுமான தொல். திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை:

சர்வதேச மத சுதந்திரத்துக்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) இந்தியாவில் சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்களுக்குப் பாதுகாப்பு இல்லை; எனவே, அந்நாட்டைக் கவனத்துக்குரிய நாடுகளின் பட்டியலில் வைக்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது உலக அளவில் இந்தியாவுக்குத் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது. சிறுபான்மையினர் மீதான தாக்குதலைக் கண்டும் காணாமல் ஊக்குவித்துக் கொண்டிருக்கும் மத்திய பாஜக அரசு இனிமேலாவது தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்களையும் அனுமதிக்க வேண்டும்- ப. சிதம்பரம்புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப ரயில்களையும் அனுமதிக்க வேண்டும்- ப. சிதம்பரம்

பட்டியலில் இந்தியா

பட்டியலில் இந்தியா

சர்வதேச மத சுதந்திர சட்டம் என்று ஒரு சட்டம் அமெரிக்காவில் இருக்கிறது. அதன் அடிப்படையில் உலக அளவில் ஒவ்வொரு நாட்டிலும் சிறுபான்மையினர் எவ்வாறு நடத்தப்படுகின்றனர் என்பதைப்பற்றி ஆராய்ந்து அது குறித்த அறிக்கையை அமெரிக்க உள்துறை அமைச்சகத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் அந்த ஆணையம் சமர்ப்பிக்கிறது. இந்த ஆண்டு சமர்ப்பித்துள்ள அறிக்கையில் இந்தியாவை கவனிக்க வேண்டிய நாடுகளின் பட்டியலில் அது வைத்திருக்கிறது.

பட்டியலிட்ட ஆணையம்

பட்டியலிட்ட ஆணையம்

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள மத சிறுபான்மையினரான முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல்களையும், மத்தியில் ஆளும் பாஜக அரசு சட்ட ரீதியில் அவர்களுக்கு எதிராக எடுத்து வரும் நடவடிக்கைகளையும் அட்டவணைப்படுத்தியுள்ள அந்த ஆணையம், இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அவர்கள் சிறுபான்மையினருக்கு எதிராகப் பேசியவற்றையும் மேற்கோள் காட்டி இருக்கிறது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது; குடியுரிமைத் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது; உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது; டெல்லி கலவரத்தில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது எனப் பல்வேறு சம்பவங்களைப் பட்டியலிட்டுள்ள அந்த ஆணையம், மதமாற்றம் செய்வதாகப் பொய் புகார்கூறி கிறிஸ்தவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளதாகவும் சுட்டிக் காட்டியிருக்கிறது.

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை

சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு இல்லை

இந்தியாவில் மத சிறுபான்மையினர் பாதுகாப்பற்ற சூழலில் உள்ளனர் என்றும் அதுகுறித்து அமெரிக்க உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த ஆணையம் பரிந்துரை செய்துள்ளது. மத சுதந்திரத்துக்கு எதிராக செயல்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களின் சொத்துக்களை முடக்கி வைக்கவும், அவர்கள் அமெரிக்காவுக்கு வருவதை தடை செய்யவும் அமெரிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த ஆணையம் கூறியுள்ளது.

பொருளாதார ரீதியாக சிக்கல்

பொருளாதார ரீதியாக சிக்கல்

சர்வதேச மத சுதந்திரத்துக்கான ஆணையத்தின் அறிக்கை அரசியல் ரீதியாக மட்டுமின்றி பொருளாதார ரீதியாகவும் இந்தியாவுக்குப் பல்வேறு இடையூறுகளைக் கொண்டு வரக்கூடும். இந்த அறிக்கையின் அடிப்படையில் அமெரிக்க அரசு பொருளாதார தடைகளைக் கூட இந்திய அரசுக்கு எதிராக விதிக்க வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே கொரோனா நோய்த் தொற்று காரணமாக வீழ்ச்சி அடைந்துள்ள இந்திய பொருளாதாரம் மேலும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகும். அண்மைக்காலமாக அரபுநாடுகள் இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டித்து வருவது மட்டுமின்றி தமது நாடுகளில் இருந்தபடி இத்தகைய வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்களை வெளியேற்றவும், அவர்களது வர்த்தக நடவடிக்கைகளை முடக்கிடபோவதாகவும் எச்சரித்து வருவதையும் இத்துடன் இணைத்துப் பார்க்கலாம்.

சங்க பரிவாரங்களால் அவமானம்

சங்க பரிவாரங்களால் அவமானம்

பாஜக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு அரசு ஆதரவோடு சங்கப் பரிவாரங்களின் வெறுப்பு பிரச்சாரமும் தாக்குதல்களும் ஒவ்வொரு நாளும் கூடிக்கொண்டே போகின்றன. சங்கப் பரிவாரங்களுடைய நடவடிக்கையால் பாதிக்கப்படுவது ஒட்டுமொத்த இந்திய மக்களும் தான். எனவே, இதை அவர்களுடைய தனிப்பட்ட பிரச்சினை என்று நாம் எண்ணிவிட முடியாது. மத்திய அரசு இனியும் இத்தகைய வெறுப்புப் பிரச்சார நடவடிக்கைகளை வேடிக்கை பார்க்காமல் ஏற்கனவே உச்ச நீதிமன்றம் ஆணையிட்டுள்ளதுபோல ' கும்பல் கொலைக்கு' எதிராகவும் வெறுப்புப் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காகவும் அவசர சட்டம் ஒன்றைப் பிறப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அதன் மூலம்தான் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள அவப் பெயரையும் அடுத்து வரப்போகிற பொருளாதார நெருக்கடிகளையும் எதிர்கொள்ள முடியும் என்று சுட்டிக்காட்டுகிறோம். இவ்வாறு திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

English summary
VCK President and Loksabha MP Thol. Thirumavalavan has urged that Centre on to take acton based on the Religious Freedom report.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X