முருகன் "தமிழ்க் கடவுள்" என்றால்.. விநாயகர் யார்.. "இந்தி கடவுளா"... திருமாவளவன் பேச்சால் சலசலப்பு
சென்னை: "முருகனுக்கும், விநாயகருக்கும் தாய் தந்தை ஒன்றுதான். ஆனால் முருகன் தமிழ்க் கடவுள் என்றால், விநாயகரும் தமிழ்க் கடவுள்தானே.. அவரை ஏன் யாரும் தமிழ்க் கடவுள் என்று சொல்லவில்லை. ஒருவர் தமிழ்க் கடவுள், மற்றொருவர் இந்தி கடவுளா? என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.

முருகனுக்கு சிறந்த நாளான தைப்பூசத்தை அரசு விடுமுறையாக சமீபத்தில் தமிழக அரசு அறிவித்தது. இதற்கு பாஜக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் தங்களின் கோரிக்கையை ஏற்று விடுமுறை அறிவித்ததாக நன்றி தெரிவித்திருந்தன.

இந்நிலையில், திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற விருதுவழங்கும் விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.. அப்போது அவர் பேசியதன் சுருக்கம் இதுதான்:
"முருகனை நம் கடவுள் என்று ஏற்றுக் கொண்டால், சனாதனம் என்ற வழுக்கு பாறையில் வைத்து விழுந்து விடுவோம்... இதன் காரணத்தினாலேயே தான் இதிலிருந்து திராவிடர் கழகம் முழுமையாக ஒதுங்கி நிற்கிறது.. முருகனை எப்படி தனியா பிரிச்சு எடுக்க முடியும் சொல்லுங்க?
ஒருகாலத்தில் தமிழ்கடவுள் இருந்திருக்கலாம்.. வரலாறும் இருந்திருக்கலாம்.. ஆனால், தமிழ்கடவுள் முருகனை எப்படி தனித்து பிரித்து விடுவிக்க முடியும்? முருகனுக்கு அண்ணன் விநாயகர் என்றால், நிச்சயமாக அவரும் தமிழ் கடவுளாகத்தானே இருக்க முடியும்? இதுவரையில் ஏன் விநாயகரை தமிழ்க்கடவுள் என்று சொல்லவில்லை? ஏதோ இதில் கட்டுக்கதை இருக்கிறது..
2 பேரும் அண்ணன் - தம்பிங்க.... 2 பேரும் மாம்பழத்துக்கு சண்டை போட்டுக்கிட்டாங்க.... ஒரு அப்பனுக்கும், ஒரு அம்மாவுக்கும்தான் இவர்கள் பிறந்திருக்கிறார்கள்.. அவருக்கு 3 மனைவிகள் இருந்தாலும்கூட, இந்த 2 பிள்ளைகள் பிறந்திருக்கிறார்கள். ஒருவர் தமிழ் கடவுள், இன்னொருவர் இந்தி கடவுளா? எப்படி இருக்க முடியும்? முருகனை மட்டும் தமிழ்க்கடவுள் என்று சொல்லி தைப்பூசத்திற்கு விடுமுறையும் விட்டுவிட்டால், நாம் எல்லோரும் தமிழர்களாக தலைநிமிர்ந்து விடுவோமா? இதெல்லாம் ஓட்டுக்காக..!" என்றார்.
திருமாவளவனின் இந்த பேச்சு வழக்கம்போல் சர்ச்சையை உண்டு பண்ணி விட்டதாக, எதிர்ப்புக்குரல்கள் கிளம்ப தொடங்கி விட்டன.