திருமாவளவனை சீண்டிய பாஜக.. கோயம்பேட்டில் நடந்த மோதல்.. கோர்ட்டில் முன்ஜாமீன் வாங்கிய காயத்ரி ரகுராம்
சென்னை: டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விடுதலைசிறுத்தைகள் கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக - விசிக இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது.. இதில், விசிகவினர் குறித்து அடிக்கடி பாஜகவின் கலை மற்றும் கலாச்சார பிரிவு தலைவர் காயத்ரி ரகுராம் விமர்சித்தும், கண்டனங்களையும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த ஏப்ரல் 14ம் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா சென்னை கோயம்பேட்டில் கொண்டாடப்பட்டது... அப்போது விசிகவினர் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சென்னையில் பாஜக - விசிக மோதலால் மண்டை உடைப்பு.. காயத்ரி ரகுராம் உள்பட 150 பேர் மீது வழக்குப் பதிவு

திருமாவளவன்
அப்போது அங்குவந்த பாஜக சேர்ந்தவர்கள், விசிக தலைவர் திருமாவளவன் குறித்து விமர்சித்ததாக இரு கட்சியினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது... அதில் பாஜகவினர் 3 பேருக்கு மண்டை உடைந்தது.. அதேபோல விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 3 பேரும் காயமடைந்தனர். இதுதொடர்பாக இரண்டு தரப்பிலும் கோயம்பேடு போலீஸ் ஸ்டேஷனில் மாறி மாறி புகாரும் அளிக்கப்பட்டன.. அந்த புகாரின் பேரில் வழக்கும் பதிவு செய்யப்பட்டது..

புதிய குமார்
இந்த வழக்கில், தனக்கு முன்ஜாமீன் வழங்க கோரி சென்னை ஹைகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். அப்போது அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், "2 தரப்பிற்கும் ஏற்பட்ட தகராறில் கட்சி கொடிகளை கீழே போட்டு மிதித்தனர்.. கல்வீசி தாக்கினர்.. விசிக சார்பில் புதிய குமார் என்பவர் அளித்த புகாரில், தன்மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.. ஆளும் கட்சியுடன் கூட்டணியில் உள்ள காரணத்தினால் விசிக தரப்பில் கொடுக்கப்பட்ட புகாரை முதலில் எடுத்து கொண்டனர்.

திருமாவளவன்
இந்த தகராறு குறித்து முதல் தகவல் அறிக்கையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கூறப்பட்டுள்ள அனைத்தும் உண்மைக்கு புறம்பானது. விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் முதலில் தாக்குதலில் ஈடுபட்டனர்" என்று காயத்ரி ரகுராம் அந்த மனுவில் கூறியிருந்தார்... மேலும், சமூக வலைத்தளங்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுடன் கட்சி சார்ந்த சண்டைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் 30 நாட்களுக்குள் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினருடன் தகராறில் ஈடுபட்டதாக பதிவான வழக்கில் பாஜகவை சேர்ந்த காயத்ரி ரகுராமனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை, விசிகவும் உற்றுநோக்கி வருகிறது.