சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

EXCLUSIVE: இது ஒரு ஆரம்பம்.. தொடக்க புள்ளி.. அதிர்வலை ஏற்படுத்தும்.. சாதியை துறந்த சிநேகா

சாதி மதம் இல்லாதவர் என்ற அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர் சிநேகாவின் பேட்டி.

Google Oneindia Tamil News

Recommended Video

    இது ஒரு தொடக்க புள்ளி தான்- சாதி மதத்தை துறந்த சிநேகா பேட்டி- வீடியோ

    சென்னை: "மனிதனை மனிதனாக மதிக்காத இந்த சமுதாயத்தை பற்றியே நாம் ஆய்வு செய்யவில்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் 2 ஆயிரம் ஆண்டு கால அநீதியை யோசித்து பார்க்கவில்லை என்றால், சாதி ஒழிப்பு என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும்" என்று ஆணித்தரமாக எடுத்துரைக்கிறார் சிநேகா!!

    திருப்பத்தூரைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிநேகா. சாதி மதம் இல்லாதவர் என்ற அரசு சான்றிதழ் பெற்ற முதல் இந்தியர். சாதி இல்லை மதம் இல்லை என சொல்ல அதிகாரம் இல்லை என பல முறை மறுப்பு தெரிவிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டவர் சிநேகா.

    Thirupattur Snehas Exclusive

    சாதிய அமைப்பிற்கு அடையாளமாக இருக்கும் சாதி சான்றிதழ் போல், சாதி மதம் அற்றவர் என்ற தங்கள் வாழ்விற்கு ஒரு அடையாளமாக ஒரு சான்று வேண்டும் என முடிவு செய்து அதற்காக இறுதிவரை முயற்சித்து வெற்றி பெற்றவர் சிநேகா. அரசு சான்றிதழை பெற்று, பலரின் பாராட்டுக்களை இந்த நொடி வரை பெற்றுவரும் சிநேகாவை "ஒன் இந்தியா" தமிழ் சார்பாக சந்தித்தோம். அப்போது அவர் சொன்ன கருத்துக்கள்தான் இவை:

    கேள்வி: வாழ்த்துக்கள் மேடம். சாதி, மதம் இல்லைன்றது பெரும்பாலானோரின் கருத்துதான். ஆனால் இதை அரசு சர்ட்டிபிகேட்டுடன் அதிகாரப்பூர்வமா வாங்கணும் என்ற எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?

    எனக்கு சின்ன வயசிலிருந்தே இந்த எண்ணம் வந்தது. என்னுடைய அப்பா-அம்மா எங்களை இப்படித்தான் வளர்த்தாங்கள். என்னை ஸ்கூல்ல சேர்க்கும்போதே "சாதி, மதம் இல்லை"ன்னு சொல்லிதான் சேர்த்தாங்க. அதனால படிக்கும்போதே எனக்கு இந்த எண்ணம் வந்துடுச்சு. எனக்கு மட்டும் இல்லை, என்னுடைய தங்கைகளுக்கும் இப்படித்தான் சாதி, மதம் இல்லைன்னு குறிப்பிட்டுதான் ஸ்கூல்ல சேர்த்தாங்க. என் கல்யாணமும் சாதி, மத சடங்குகளுக்கு அப்பாற்பட்டு தாலியற்ற ஒரு திருமணமாகத்தான் இருந்தது. என்னுடைய 3 மகள்களுக்கும் சாதி இல்லை, மதம் இல்லைன்னு சொல்லிதான் பள்ளியில் சேர்த்திருக்கிறேன். அதனால பிறந்ததிலிருந்தே சாதி, மதம், சடங்குகளற்ற ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்துட்டிருக்கேன். இதுக்கு ஒரு அடையாளம், இதுக்கு ஒரு அங்கீகாரம், அதுவும் அரசு அங்கீகாரமா இருந்ததுன்னா பல பேருக்கு அது உதாரணமாக இருக்கும்னு நினைச்சேன்.

    Thirupattur Snehas Exclusive

    கேள்வி: அரசின் அனைத்துவிதமான படிவங்களிலும் சாதி, மதம் குறிப்பிட வேண்டிய கட்டாயம் இருக்குமே.. இது எப்படி உங்களுக்கு சாத்தியமாயிற்று?

    அப்படி எல்லாம் ஒரு கட்டாயமும் இல்லை. என்ன சாதி என்று கேட்கப்படுவது வெறும் இட இதுக்கீடுக்கு மட்டும்தான். அந்த இடஒதுக்கீடு எனக்கு வேண்டாம்னு துறக்கும்போது நம்மை ஓ.சி. பிரிவில் சேர்த்துவிடுவார்கள். அவ்வளவுதான். சாதியை குறிப்பிடணும்னு கட்டாயப்படுத்தக்கூடாது என்கிற பள்ளிக்கல்வித்துறையின் உத்தரவே ஒன்று இருக்கிறது. அதனால பள்ளியிலயும் சாதியை கேட்க முடியாது. மற்ற துறைகளிலும் இதற்கு ஆப்ஷன்கள் இருப்பதால் எங்கேயும் சாதியை கட்டாயமாக குறிப்பிடணும்னு அவசியம் இல்லை. இப்படித்தான் நான் ஸ்கூல் முடிச்சேன், காலேஜ் முடிச்சேன், இப்போ வழக்கறிஞராகவும் இருக்கேன்.

    கேள்வி: அப்படின்னா இட ஒதுக்கீட்டுக்கு எதிரான விஷயமா இது பிரதிபலிக்கிற மாதிரி ஆகாதா?

    நிச்சயமா இது இட ஒதுக்கீட்டுக்கு எதிரான விஷயம் கிடையாது. ஆதிக்க சாதியாக இருக்க கூடியவர்கள், இந்த சாதியை துறப்பது என்பது சரி என்றும், ஒடுக்கப்பட்ட மக்களாக இருப்பவர்கள் அந்த சான்றிதழை பயன்படுத்துவதில் தவறு இல்லை என்றும் நான் நினைக்கிறேன்.

    Thirupattur Snehas Exclusive

    கேள்வி: "சாதி மற்றும் மதம் அற்றவர்" என்று சர்ட்டிபிகேட் வழங்க மாவட்ட வட்டாட்சியருக்கு அதிகாரம் இருக்கிறதா?

    பொதுவா சாதி சான்றிதழை நாம எங்கே வாங்குவோம். தாலுகா ஆபீஸ்லதான் வாங்குவோம். அப்படி இருக்கும்போது அது செல்லும்னா இந்த சர்ட்டிபிகேட்டும்தான் செல்லும்.

    கேள்வி: இப்படி ஒரு சர்ட்டிபிகேட் வாங்கி முன்னுதாரணமா இன்னைக்கு நாடு முழுக்க பிரபலமாகி இருக்கீங்க. இதுக்கு உங்களுக்கு வரவேற்பு எப்படி இருக்கு?

    சோஷியல் மீடியாக்களில் நல்ல வரவேற்பு இருக்கு. கமலஹாசன் என்னை வாழ்த்தி ட்வீட் போட்டுருக்காரு. நடிகர் சங்க தலைவர் விஷால் வாழ்த்தியிருக்காரு. நாசர், சத்யராஜ், ரோகிணி, விஜயசேதுபதி எல்லாரும் வாழ்த்தினாங்க. அரசியல் தரப்பிலிருந்து திக தலைவர் கி.வீரமணி, திருமாவளவன் உள்ளிட்ட இன்னும் பல தலைவர்கள் என்னை எனக்கு வாழ்த்து சொன்னாங்க. பொதுமக்கள் கிட்ட இருந்தும் நல்ல வரவேற்பு எனக்கு இருக்கு.

    கேள்வி: இப்படி ஒரு சர்ட்டிபிகேட் வாங்கிட்டதால சாதி ஒழிந்திடும்னு நினைக்கறீங்களா? இன்றைய மாணவர்கள், இளைஞர்களுக்கு நீங்க இதன் மூலமா என்ன சொல்ல வர்றீங்க?

    இல்லை.. சர்ட்டிகேட் வாங்கிட்டதால சாதி ஒழியாது. இது ஒரு அடையாளம்தான். ஒரு தொடக்கப்புள்ளி. ஒரு அதிர்வை ஏற்படுத்தக்கூடிய ஒருவிஷயமாக மட்டும் இதை பார்க்கலாம். ஆனா சாதி ஒழியணும்னா சாதியன் தோற்றமும், அது யாருடைய நலனுக்காக இன்னும் போற்றி பாதுகாக்கப்படுகிறது, சாதியை ஒழிக்க என்ன வழிமுறைகள் என்பது உட்பட எல்லாவற்றையும் ஆய்வு வேண்டும். இதற்காக நாம உழைக்க வேண்டும், இதற்காக நாம போராட வேண்டும்.

    இல்லையென்றால், மனிதனை மனிதனாக மதிக்காத இந்த சமுதாயத்தை பற்றியே நாம் ஆய்வு செய்யவில்லை என்றால், ஒடுக்கப்பட்ட மக்களின் 2 ஆயிரம் ஆண்டு கால அநீதியை யோசித்து பார்க்கவில்லை என்றால், சாதி ஒழிப்பு என்பதே சாத்தியம் இல்லாமல் போய்விடும். அந்த சாதி ஒழிப்பு பற்றி இளைஞர்கள் சிந்திப்பதற்கு என்னுடைய முயற்சி ஒரு தூண்டுகோலாக இருக்கும்னு நான் நம்பறேன். இளைஞர்கள் சாதி ஒழிப்பிற்கான வழியை தேடி, அதற்கு காரணமாக இருக்கக்கூடிய காரணிகளை வேரோடு அழிக்கணும்னு நான் கேட்டுக்கறேன்" என்று சொல்லி முடித்தார் சிநேகா.

    லட்சியங்கள் வெறும் கனவுகளல்ல... போராடினால் சமூக மாற்றம் சட்டங்களாகும்... என்பதை நிரூபித்து காட்டிய வழக்கறிஞர் சிநேகாவுக்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்களை கூறி விடைபெற்றோம்.

    English summary
    "I dont have any caste and religion" Thirupattur Sneha's Exclusive
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X