தலைமை செயலகத்தில் சோதனை நடப்பது இது முதல் முறை அல்ல.. எங்கும் நடக்காத அவலம்.. அண்ணாமலை காட்டம்
சென்னை: தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
தமிழக மின்சார துறை அமைச்சராக இருக்கும் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது ஓட்டுநர் மற்றும் நடத்துனர் வேலை பெற்றுத் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. செந்தில் பாலாஜி மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பதிவு செய்த மூன்று வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வருகின்றன.

இது தொடர்பான வழக்கில் அமலாக்கத் துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. இந்த தடையை உச்சநீதிமன்றம் அண்மையில் நீக்கி உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மீண்டும் விசாரணை தீவிரம் அடைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் இன்று சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் துறை அலுவலகத்திலும் இன்று அமலாக்கத்துறை சோதனை சுமார் 4 மணி நேரம் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை சோதனை, அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுகவினர் விமர்சித்துள்ளனர்.

இந்த நிலையில், அமலாக்கத்துறை சோதனை குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக தலைவர் அண்ணாமலை இது தமிழகத்திற்கு புதிது அல்ல என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:- இன்றைய தினம், தமிழக அரசு தலைமைச் செயலகத்தில், பதவியில் உள்ள அமைச்சர் ஒருவரின் அறையில் அமலாக்கத் துறை சோதனை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில், மத்திய புலனாய்வு அமைப்புகளின் சோதனை நடைபெறுவது இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு கூட தலைமைச் செயலகத்தில் சோதனை நடைபெற்றிருக்கிறது. தமிழக அரசியலில் மலிந்திருக்கும் ஊழல், தமிழகத்திற்குக் கொண்டு வந்த மாபெரும் இழிவு, வேறு எந்த மாநிலத்திலும் நடக்காத அவல நிலை இது. அடிமட்டம் வரை ஊழலில் ஊறிப்போய் இருக்கும் இந்த அரசியல் போக்கைத்தான் மாற்ற விரும்புகிறேன்.

எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்ற போக்கினால், அரசியல் மேல் தமிழக மக்கள் நம்பிக்கை இழந்து இருந்தனர். நேர்மையான அரசியலை, நல்லதொரு மாற்றத்தை எதிர்பார்த்து வெகுகாலம் காத்துக் கொண்டிருந்த நம் மக்களுக்கு, மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களது நல்லாட்சி, அரசியல் மேல் நம்பிக்கையை மீட்டுக் கொடுத்திருக்கிறது.
ஊழலற்ற அரசு சாத்தியம் என்பதை உணரத் தொடங்கியிருக்கிறார்கள். அவர்கள் நம்பிக்கை வீண் போகாது, தமிழகத்தில் ஊழலற்ற, மக்கள் நலன் ஒன்றே சார்ந்த அரசு அமையும். அதை நோக்கியே எங்கள் அரசியல் பயணமும் தொடரும். ஏழை எளிய மக்களின் குரலாக என் குரல் என்றும் ஒலிக்கும்! இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications