தேங்காய் விலை வீழ்ச்சி! நடுரோட்டில் ஆயிரம் தேங்காய்கள் உடைப்பு! விவசாயிகள் விரக்தி!
சென்னை: தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருவதால், நடுரோட்டில் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து தென்னை விவசாயிகள் தங்கள் விரக்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பகுதியில் தான் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
தென்னை மரத்தை பிள்ளையை வளர்ப்பது போல் பல ஆண்டுகள் பாதுகாத்து வளர்த்தால், அதன் மூலம் கிடைக்கும் வருவாய் பரமாரிப்பு செலவுக்கு கூட போதவில்லை என வேதனை தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.
தேங்காய் விலை வீழ்ச்சி! ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய் தர வேண்டும்! கொங்கு ஈஸ்வரன் புது ஐடியா!

தேங்காய் விலை
எப்போதும் இல்லாத அளவிற்கு தேங்காய் விலை கடுமையான வீழ்ச்சியை சந்தித்து இருக்கிறது. தென்னை விவசாயிகள் விவசாயத்திற்கு செய்கின்ற முதலீட்டிற்கு கூட கட்டுப்படி ஆவதில்லை. விவசாயிகளிடம் 15 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விலை கொடுத்து தேங்காய் வாங்கிய வியாபாரிகள் தற்போது 8 ரூபாய் முதல் 14 ரூபாய் வரை மட்டுமே கொடுக்கிறார்கள். இதேபோல் கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு 105 ரூபாயாக அரசு ஆதார விலை நிர்ணயித்து இருந்தாலும் கூட வெளிச்சந்தையில் 85 ரூபாய்க்கு தான் வாங்குகிறார்கள்.

கொப்பரை கொள்முதல்
கொப்பரை கொள்முதலுக்கு அரசு விதித்திருக்கின்ற கட்டுப்பாடுகள் சிறு விவசாயிகளுக்கு உகந்ததாக இல்லை. அதனால் சிறு விவசாயிகள் 85 ரூபாய்க்கு வெளிச்சந்தையில் விற்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப் படுகிறார்கள். தென்னை விவசாயிகள் சங்க பிரதிநிதிகளை அழைத்து அமரவைத்து கருத்துகளை கேட்டு விலை வீழ்ச்சியிலிருந்து ஏழை விவசாயிகளை காப்பாற்ற உடனடி நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.

விவசாயிகள் விரக்தி
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதி தேங்காய்களுக்கு ஓரளவு நியாயமான விலை கிடைக்கிறது. ஆனால் அதே வேளையில் பொள்ளாச்சிக்கு அடுத்தப்படியாக தேங்காய்க்கு பெயர் பெற்ற பட்டுக்கோட்டை பகுதிகளில் உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற தென்னை விவசாயிகள் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேங்காய்களை நடுரோட்டில் உடைத்து அரசின் கவனத்தை ஈர்த்துள்ளனர்.

150 ரூபாய்
கொப்பரை தேங்காய் கிலோ ஒன்றுக்கு ரூ.150 குறைந்தபட்ச ஆதார விலையாக அரசு நிர்ணயிக்க வேண்டும் என போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். இதனிடையே விவசாயிகளிடம் இப்படி குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அதனை பொதுமக்களுக்கு விற்பனை செய்யும் போது விலையை குறைப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.