சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வங்கி கடன் வசூலிப்பு பிரிவில் குண்டர்கள்...? அத்துமீறுகிறதா தனியார் வங்கிகள்..?

Google Oneindia Tamil News

சென்னை: கடன் பெற்ற நபர்களிடம் தவணையை திருப்பி வசூலிக்க ரிசர்வ் வங்கி விதித்துள்ள விதிமுறைகளை சில தனியார் வங்கிகளும், ஊழியர்களும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு மனம்போன போக்கில் நடந்துகொள்ளும் விதம் அதிகரித்துள்ளது.

சாமானியர்கள், விவசாயிகள் என்றால் அவர்களிடம் ஒரு விதமாகவும், தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் என்றால் அவர்களிடம் ஒரு விதமாகவும் வங்கிகளின் அணுகுமுறை அமைந்துள்ளது.

அதற்கு உதாரணமாக அண்மையில் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாயி ஒருவரை, தனியார் வங்கி கடன் வசூலிப்பு ஊழியர்கள் மிகவும் கீழ்தரமாக பேசி அந்த நபரை தற்கொலைக்கு தள்ளியதை கூறலாம்.

விவசாயத்தில் நஷ்டம்

விவசாயத்தில் நஷ்டம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மாணுர்பாளையத்தை சேர்ந்த ராஜாமணி என்ற விவசாயி கடந்த வாரம் தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு காரணம் தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளை தான் எனக் கூறி விவசாயிகளும் அவரது உறவினர்களும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயி ராஜாமணி கடந்த 2012-ல் விவசாய கடன் பெற்று அதற்கான தவணைகளை முறையாக திருப்பிச் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் விவசாயத்தில் ஏற்பட்ட திடீர் நஷ்டம், கொரோனா பொதுமுடக்கம் காரணமாகவும் கடந்த சில மாதங்களாக தவணையை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தகாத வார்த்தைகள்

தகாத வார்த்தைகள்

வங்கிக் கடன் தவணைகளை செலுத்த ஆகஸ்ட் 31-ம் தேதி வரை கால அவகாசம் அளித்துள்ளது ரிசர்வ் வங்கி. ஆனால் அதற்குள் அவசரக்குடுக்கையாக செயல்பட்ட தாராபுரம் ஆக்சிஸ் வங்கி கிளை மேலாளர், வங்கி ஊழியர்கள் என்ற பெயரில் தனியார் ஏஜென்ஸி ஊழியர்களை ராஜாமணி இல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளார். அங்கு சென்ற அவர்கள், 'கடன் கட்ட முடியாத உனக்கு எதுக்குடா காடு, தோட்டம்' என்று மிகவும் கேவலமாகவும், தரக்குறைவாகவும் வசைபாடியுள்ளனர். தனது உறவினர்கள், ஊர்மக்கள் மத்தியில் நிகழ்ந்த இந்த அவமானத்தால் மனமுடைந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டார்.

வரைமுறை உள்ளது

வரைமுறை உள்ளது

கடன் கொடுத்த வங்கிகள் கடனாளிகளிடம் கடன் தொகையை திருப்பிக்கேட்க முழு உரிமை உண்டு. அதனை யாரும் மறுக்கவுமில்லை, எதிர்க்கவுமில்லை. ஆனால் வரைமுறை என்று ஒன்று உள்ளதே, அதை குறைந்தபட்சமாவது வங்கி அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. விவசாய பெருங்குடி மக்களிடமும், நடுத்தர வர்க்கத்தினரிடமும் வங்கி ஊழியர்கள் தங்கள் வீர தீர பராக்கிரமங்களை காட்டுவது போல் ஒரு தொழிலதிபரிடமோ, கோடிகளில் கடன் பெற்று கம்பி நீட்டியவர்களிடமோ காட்டுவதில்லை என்பது கவனிக்கத்தக்கது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி கடனாளியிடம் கடன் தொகையை வசூலிக்க வரும் அதிகாரிகள் கண்ணியத்தையும், நாகரீகத்தையும் பேண வேண்டும். பகல் பொழுதில் தான் கடனாளிகளை வங்கி தரப்பில் இருந்து அணுக வேண்டுமே தவிர, மாலை 7 மணிக்கு மேல் கடன் தொகையை கேட்டு அணுகினால், அதற்கான ஆதாரங்களை சமர்பித்து வங்கி ஊழியர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வழி வகை உண்டு. அதேபோல் வட்டி குளறுபடிகள் தொடர்பான புகார்களையும் கடனாளிகள் ரிசர்வ் வங்கி புகார் பிரிவில் வங்கி கிளை விவரங்களுடன் தெரிவிக்கலாம்.

நீதிமன்றம் மூலம்

நீதிமன்றம் மூலம்

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரியதர்ஷனி கூறியதாவது, ''கடனை திருப்பிச்செலுத்த வங்கிகள் அளிக்கும் கடும் நெருக்கடிக்கும், அழுத்தத்திற்கும் காரணம், நீதிமன்றம் மூலம் ஜப்தி, சட்டப்பூர்வ நடவடிக்கை எனச் சென்றால் சொத்தை ஏலம் விட்டு பணத்தை பெறுவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். அதற்காகத்தான் அது போன்ற நீண்ட நெடிய புராஸசை விரும்பாமல் கடனாளிகளிடம் முடிந்தவரை அழுத்தம் கொடுத்து பணத்தை பெற வங்கிகள் முயற்சிக்கின்றன. ஆனால் அதற்கென்று ஒருமையில் பேசுவது, குண்டர்கள் படை கடனாளிகள் வீட்டுக்கு சென்று தரக்குறைவாக பேசுவது போன்ற வில்லத்தனமான நடவடிக்கைகளுக்கு சட்டத்தில் இடமில்லை'' என்கிறார்.

குடியரசுத் தலைவர்

குடியரசுத் தலைவர்

இதனிடையே காவிரி விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் இந்த விவகாரம் தொடர்பாக தெரிவித்ததாவது, ''விவசாயிகளிடம் ஒரு சில வங்கிகள் இது போன்று நடப்பது குறித்து ரிசர்வ் வங்கிக்கு புகார் அனுப்பியிருக்கிறேன். கொரோனா பதற்றம் தணிந்த பின்னர், விவசாய கடன் விவகாரத்தில் வங்கிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பாக விரைவில் குடியரசுத் தலைவரை சந்தித்து எங்கள் சங்கத்தின் சார்பாக முறையிட உள்ளோம். மத்திய மாநில அரசுகள் வங்கி உயர் அதிகாரிகளுக்கு உரிய முறையில் அறிவுறுத்த வேண்டும்.'' எனக் கூறினார்.

English summary
Thugs in private bank debt collection ...?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X