சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

உச்சநீதிமன்ற தீர்ப்பு நியாயத்தின் முள் நடுநிலையாக இல்லை என்பதை வெளிப்படுத்துகிறது: ஜவாஹிருல்லா

Google Oneindia Tamil News

Recommended Video

    அயோத்தி வழக்கில் தீர்ப்பு... அரசியல் தலைவர்கள் கருத்து

    சென்னை: அயோத்தி நில உரிமை வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு நியாயத்தின் முள் நடுநிலையாக இல்லை என்பதை வெளிப்படுத்துவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பேராசிரியர் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கை:

    தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை நிர்வாகக்குழு அவசர கூட்டம் இன்று பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுச் செயலாளர் பேரா.ஹாஜாகனி, பொருளாளர் பொறியாளர் ஷபியுல்லா கான் உள்ளிட்ட தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    TMMK disappoints SC Verdict in Ayodhya Land dispute case

    "450 ஆண்டு காலம் முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலமாக இருந்த பாபர் பள்ளிவாசல் இடம் யாருக்குச் சொந்தம் என்ற வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு மதச்சார்பின்மையின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் சட்டத்தின் ஆட்சியின் மீதும் நம்பிக்கையுள்ள அனைவருக்கும் பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் அளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு முரண்பாடுகளின் மொத்த வடிவமாகவும், தவறான முன்னுதாரணமாகவும் அமைந்துள்ளது.

    அலஹாபத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு 2010ல் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவை விசாரித்து ஐந்து நீதிபதிகள் சார்பாக தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வாசித்த தீர்ப்பில் இதுவரை சங் பரிவார் அமைப்புகள் மக்களை அணிதிரட்ட பயன்படுத்தி வந்த "ராமர்கோயிலை இடித்து விட்டுத் தான் பாபர் பள்ளிவாசல் கட்டப்பட்டது என்பதைத் தவறு" என்று குறிப்பிட்டுள்ளார். இடம் யாருக்குச் சொந்தம் என்பது குறித்து சட்ட ரீதியான ஆவணங்கள் அடிப்படையில் தான் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் தலைமை நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

    1949 டிசம்பர் 22&23 இரவில் பாபர் பள்ளிவாசலுக்குள்ளே சிலைகள் வைக்கப்பட்டது சட்டவிரோதமான செயல் என்றும் தலைமை நீதீபதி தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளார். 1992 டிசம்பர் 6 அன்று பாஜக தலைவர் அத்வானி தலைமையில் அயோத்தியில் குழுமியிருந்த வன்முறைக் கும்பல் பள்ளிவாசலை இடித்த செயலையும் சட்ட விரோதமானது என்று இந்தத் தீர்ப்பில் தலைமை நீதிபதி தனது தீர்ப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

    இவ்வளவு நியாயங்களைக் குறிப்பிடும் உச்சநீதீமன்ற நீதிபதிகள், பாபர் பள்ளிவாசல் அமைந்திருந்த 2.77 ஏக்கர் நிலம் நம்பிக்கையின் அடிப்படையில் ராமர் கோவில் கட்டுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளது நியாயத்தின் முள் நடுநிலையாக இல்லை என்பதை எடுத்துக் காட்டுகிறது.

    பள்ளிவாசலில் மட்டும் தான் முஸ்லிம்கள் தொழுக வேண்டும் என்பது நம்பிக்கை இல்லை என்று குறிப்பிடும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஒருமுறை பள்ளிவாசலாக அமைந்த இடம் எப்போதுமே பள்ளிவாசல் என்பது முஸ்லிம்களின் நம்பிக்கை என்பதை இத்தீர்ப்பில் புறந்தள்ளியிருப்பது எப்படி நியாயமாகும்.

    உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள இந்த தீர்ப்பு மிகவும் தவறான முன்னுதாரணமாக அமைந்து தீமைகளின் கதவை திறந்து விடக் கூடியதாகும். இனி இந்த தீர்ப்பை முன்னுதாரணமாகக் காட்டி நாடு முழுவதும் வழிப்பாட்டுத் தலங்களுக்கு பாதுகாப்பில்லாத சூழலை இத்தீர்ப்பு ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் இந்தியாவின் சட்ட பரிபாலன அமைப்பின் கண்ணியத்தைப் பெரிதும் குலைத்துள்ளது.

    சட்டத்தின் மீதும் ஜனநாயகத்தின் மீதும் நம்பிக்கையுள்ள சிறுபான்மை மக்களுக்கு மிகப்பெரும் ஏமாற்றத்தை இந்த தீர்ப்பு அளித்துள்ளது. இந்த தீர்ப்பு மறு ஆய்வு செய்யப்பட வேண்டும் என்பதே சரியானது.

    1992ல் பாபர் பள்ளிவாசல் இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது. இந்த நிலையில் பாபர் பள்ளிவாசல் இடிப்பு வழக்கில் சிபிஐயினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அத்வானி உள்ளிட்ட குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்ட இதர மதச்சார்ப்பற்ற சக்திகளுடன் ஒருங்கிணைந்து தொடர்ந்து ஜனநாயக ரீதியில் பாடுபட உறுதி எடுப்போம் இவ்வாறு ஜவாஹிருல்லா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    Tamilnadu Muslim Munnetra Kazhagam showed disappointed over the Supreme Courts Verdict in the Ayodhya Land Dispute Case.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X