தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தேர்வு ரிசல்ட் நாளை வெளியீடு - மதிப்பெண்கள் தெரிந்து கொள்வது எப்படி?
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் நாளை காலை 10 மணிக்கு பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பிளஸ் 1 பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது.
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக 2 ஆண்டுகளாக நடத்த முடியாமல் போன பொதுத்தேர்வுகள், 2021-22ஆம் ஆண்டில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் நடத்தப்பட்டன. எனினும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டன. அதே வேளையில் 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத் தேர்வுகள் திட்டமிட்டபடி நடத்தி முடிக்கப்பட்டன.

11ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு மே 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்றது. 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற்றன. தேர்வை சுமார் 8.83 லட்சம் மாணவர்கள் எழுதினர்.
இதனிடையே 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களைத் திருத்தும் பணி ஜூன் 1ஆம் தேதி தொடங்கியது. இந்த விடைத்தாள்களைத் திருத்தி முடிக்கும் பணி ஜூன் 9ஆம் தேதி நிறைவடைந்தது. கடந்த ஜூன் 20ஆம் தேதி 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின.
பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் ஜூன் 27ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாளை காலை 10 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
மாணவர்கள் முதலில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்துகொள்ள வேண்டும். பின்பு, தேர்வு முடிவுகளை http://tnresults.nic.in/
https://dge.tn.nic.in/, https://dge1.tn.nic.in/,https://dge2.tn.nic.in/ ஆகிய இணைய தளங்களில் காணலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.