ஆளுநர் ரவியின் மூவ்! எப்படிங்க போகலாம்.. நாமதானே கண்ட்ரோல்.. சீறிய திமுக! குறி வைக்கப்பட்ட "தலைகள்"
சென்னை: ஊட்டியில் துணை வேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட துணை வேந்தர்கள் மீது ஆளும் திமுக தரப்பு கோபத்தில் இருப்பதாக அரசு தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஊட்டியில் ஆளுநர் ரவி தலைமையில் துணை வேந்தர்கள் ஆலோசனை கூட்டம் கடந்த வாரம் 2 நாட்கள் நடந்தது. மத்திய, மாநில, தனியார் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 33 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. மாநாட்டில் கலந்து கொண்டவர்களுடன் ஆளுநர் ரவி எடுத்துக்கொண்ட புகைப்படமும் வைரலானது
லிஸ்டில் உதயநிதி பெயர்.. தேதியே கொடுக்காமல் ஓரம்கட்டிய ஆளுனர் மாளிகை? ரவி அப்படி செய்தாரே? குழப்பம்! .

துணை வேந்தர்கள் மாநாடு
இந்த நிலையில் மாநாட்டில் கலந்து கொண்ட துணைவேந்தர்கள் மீது கடும் கோபத்தில் இருக்கிறது திமுக அரசு என்று ஆளும் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கலாம். அவருக்கு வேந்தராக இருக்கும் உரிமையை கொடுத்தது அரசியலமைப்பு சட்டம் அல்ல.. மாநில அரசு. ஆனால், இப்போதும் பல்கலைக்கழகங்கள் அனைத்தும் தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

யார் கட்டுப்பாடு?
அதாவது, அரசு மற்றும் கலைக்கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் தொடர்புடைய பல்கலைக்கழகங்கள் உயர்கல்வித்துறையின் கட்டுப்பாட்டிலும், எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் மக்கள்நல்வாழ்வு துறையின் கட்டுப்பாட்டிலும், சட்டப்பல்கலைகழகம் சட்டத்துறையின் கட்டுப்பாட்டிலும், வேளாண்மை பல்கலைக்கழகம் வேளாண்மைத்துறையிடமும், கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் கால்நடை துறையின் கட்டுப்பாட்டிலும் இருக்கின்றன.

அரசு அனுமதி
அதனால் அரசின் அனுமதியை பெறாமல் கவர்னர் கூட்டிய மாநாட்டில் எப்படி கலந்து கொள்ளலாம் ? நாம் தானே இப்போதும் பல்கலைக்கழகங்களை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கிறோம்.. மாநாட்டில் கலந்து கொள்வதாக குறைந்தபட்சம் அரசின் கவனத்துக்கு கொண்டு வந்திருக்கலாமே,ஏன் செய்யவில்லை? என்றெல்லாம் அலசப்படுகிறது. அதனால், இது குறித்து பல்வேறு கேள்விகளுடன் துணைவேந்தர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப அரசு தரப்பில் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக ஏற்கனவே ஒன் இந்தியா தரப்பிலும் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

லிஸ்ட் கேட்டார்
அதன்படி இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் யார் என்ற லிஸ்டை ஆளும் திமுக தரப்பு எடுத்து வருகிறதாம். அவர்கள் எப்படி மீட்டிங்கில் கலந்து கொண்டார்கள் என்பது குறித்த விசாரணையை மேற்கொண்டு வருகிறதாம். இணை வேந்தராக பொன் முடி இருக்கிறார். அவரிடம் கூட சொல்லாமல் எப்படி இவர்கள் கலந்து கொண்டார்கள் என்று விளக்கம் கேட்க ஆளும் திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.

பதிலடி
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்குக்கு பதிலடி கொடுக்கும் விதமாகவே ஆளும் திமுக தரப்பு துணை வேந்தர்கள் நியமன மசோதாவை நிறைவேற்றி உள்ளது. சரியாக ஆளுனர் ஊட்டியில் துணை வேந்தர் மாநாடு நடத்தும் அதே சமயத்தில் தமிழ்நாடு அரசு அவருக்கு எதிராக முக்கிய மசோதாவை நிறைவேற்றியது. துணை வேந்தர்களை ஆளுநர் நியமிக்கும் அதிகாரத்தை பறித்து அரசே நியமிக்கும் வகையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநரின் பயணத்தை குறி வைத்து அரசு சார்பாக இந்த பதிலடி கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.