“மோசமா செயல்படுற நீங்க எங்களுக்கு அறிவுரை சொல்லலாமா?” - மத்திய அரசை வெளுத்த அமைச்சர் பிடிஆர்!
சென்னை: தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டில் உள்ள வேறு எந்த மாநில அரசையும் விட மேம்பட்ட நிலையிலேயே உள்ளது என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு சமீபத்தில் பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை குறைத்த நிலையில், மாநில அரசுகளும் வரியை குறைக்க வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.
“அடுத்த 3 மாசத்துக்கான ஸ்கெட்ச் அண்ணாமலை கையில இருக்கு”- அடேயப்பா.. அவங்களை இறக்குறது இதுக்குத்தானா?
இந்நிலையில், எங்களை விட மிகவும் மோசமாகச் செயல்படுவோர் தரும் அறிவுரை எங்களுக்குத் தேவை இல்லை என தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கடுமையாகச் சாடியுள்ளார்.

மாநில அரசும் குறைக்க வேண்டும்
அண்மையில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியைக் குறைத்தது. இதன் மூலம் பெட்ரோல் விலை ரூ.9.50, டீசல் விலை ரூ.7 குறைந்தது. கலால் வரியைக் குறைத்த மத்திய அரசு, மாநில அரசுகளும் வரியைக் குறைக்க வேண்டுமென மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தினார். கேரளா உள்ளிட்ட சில மாநிலங்கள் இதனை ஏற்றுக்கொண்டு வரியைக் குறைத்த நிலையில் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்கள் இதற்கு கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றன.

உங்களை விட பெட்டர்
இந்நிலையில், தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டியில், "இந்தியாவில் உள்ள எந்தவொரு அரசையும் விட தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நாங்கள் வருவாய் பற்றாக்குறையை 60,000 கோடி ரூபாயில் இருந்து 40,000 கோடி ரூபாயாக குறைத்துள்ளோம். எங்களின் நிதிப் பற்றாக்குறை மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறையில் பாதிதான் உள்ளது.

உங்க அறிவுரை தேவையில்லை
எங்கள் தனிநபர் வருமானம் தேசிய சராசரியை விட இருமடங்கு அதிகமாக உள்ளது. தமிழ்நாட்டில் பணவீக்கம் 5% மட்டுமே. ஆனால் தேசிய அளவில் பணவீக்கம் 8%. நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என வேறு யாரும் கூறத் தேவையில்லை. எங்களை விட மோசமாக செயல்படுவோர் தரும் அறிவுரை எங்களுக்குத் தேவையில்லை. அரசியல் சட்டத்துக்கு மாறாக எங்களை கட்டாயப்படுத்துவோரை நாங்கள் விரும்புவதில்லை எனத் தெரிவித்துள்ளார்.

மோசமான வரிக்கொள்கை
மத்திய அரசு கலால் வரியை பெட்ரோல் மீது மூன்று மடங்கும், டீசல் மீது 10 மடங்கும் உயர்த்தியபோதும், கலால் வரிக்கு பதில் செஸ் வரி விதித்த போதும் மாநிலங்களுடன் கலந்தாலோசிக்கவில்லை. எங்களுக்கு கிடைக்க வேண்டிய பங்கையும் குறைத்துவிட்டனர். கடந்த 7 - 8 ஆண்டுகளாக மோசமான வரிக் கொள்கையை வைத்திருந்தது மத்திய அரசு. இப்போது எங்களை வில்லனாக சித்தரித்து பழிபோட முயற்சிக்கின்றனர். இது வெட்கம்கெட்ட இரட்டை வேட நடவடிக்கை.

அதிகம் தான்
பெட்ரோல் மீதான வரியை 9.4 ரூபாயில் இருந்து 32.5 ரூபாயாக உயர்த்தியது மத்திய அரசு. பின்னர் ஒரு முறை 5 ரூபாய், இப்போது 8 ரூபாய் குறைத்துள்ளது. அந்த 13 ரூபாயை எடுத்துவிட்டால் இன்னும் 19 ரூபாய் இருக்கிறது. ஆக முன்பிருந்ததை விட இன்னும் இருமடங்காகவே வரி உள்ளது. டீசலை பொறுத்தவரை கலால் வரி சுமார் 3.4 ரூபாயில் இருந்து 32 ரூபாயாக உயர்த்தப்பட்டது. பின்னர் ஒரு முறை 10 ரூபாயும், இப்போது 8 ரூபாயும் குறைத்துள்ளனர். ஆக, முன்பிருந்ததை விட இப்போது நான்கு அல்லது ஐந்து மடங்கு அதிக வரியே உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.