தமிழகத்தில் தாலிக்கு தங்கம் திட்டம் கைவிடப்படுகிறதா? பட்ஜெட் அறிவிப்பால் பரபரப்பு
சென்னை: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மக்களை கவர்ந்துள்ள கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம், தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டு இருப்பது பட்ஜெட் குறிப்பின் மூலம் தெரியவந்து உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் முழு நீள பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார்.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை வளாகத்தில் காகிதமின்றி டிஜிட்டல் முறையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறைகளுக்கான நிதியை பிடிஆர் அறிவித்தார்.

கல்லூரி மாணவிகளுக்கு ரூ.1,000 உதவித் தொகை
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளும் அதற்கான நிதி ஒதுக்கீடுகளும் இடம்பெற்று இருந்தாலும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி வழங்கும் திட்டம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று பட்டப்படிப்போ அல்லது பட்டயப் படிப்போ படிக்கும் மாணவிகள் இடைநிற்றல் இன்று படித்து முடிக்கும் வரை மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வங்கிக் கணக்கிற்கு நேரடியாக செலுத்தப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறுத்தப்படுகிறதா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம்?
இதனிடையே தாலிக்கு வழங்கும் திட்டத்தை நிறுத்திவிட்டுதான் அதே பெயரில் மாணவிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு பட்ஜெட்டில் அறிவித்து இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம் என்ற பெயரில் பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் படித்த பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டம்
பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்த மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித் திட்டத்தின் மூலம், பட்டப்படிப்பு முடிந்த பெண்கள் திருமணம் செய்யும்போது ரூ.50 ஆயிரம் நிதியுதவியும், ஒரு சவரன் தங்க காசும் வழங்கப்பட்டு வந்தது. பத்தாம் வகுப்பு படித்த பெண்கள் திருமணம் செய்யும்போது ரூ.25 ஆயிரம் ரூபாய் உதவியும், ஒரு சவரன் தங்க காசும் வழங்கப்பட்டது. இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக 10 ஆம் வகுப்பு வரை படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும், உயர்கல்வி படிக்கும் பெண்களின் எண்ணிக்கையும் தமிழ்நாட்டில் அதிகரித்தது.

தமிழ்நாடு பட்ஜெட்டில் கூறி இருப்பது என்ன?
இதுகுறித்து இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு பட்ஜெட்டில், "தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித்திட்டம் என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக்கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவி பெறலாம். இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது. இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறியநிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித்திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்." என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ராமதாஸ் கோரிக்கை
இந்த நிலையில்தான், பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், பெண்கள் குறைந்தபட்சம் பட்டப்படிப்பு படிப்பதை உறுதி செய்யும் வகையில், கல்லூரிகளில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1000 உதவி வழங்கப்படும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கையில் அறிவித்திருந்தோம். அதே திட்டம் தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையிலும் இடம் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மூவலூர் இராமாமிர்தம்மாள் திருமண உதவி திட்டத்தை ரத்து செய்தது ஏற்கத்தக்கதல்ல. ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு நிதி மற்றும் தங்கம் வழங்கும் அந்தத் திட்டமும் தொடர்ந்து செயல்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.