"ஒழிந்தது எதிரி.." தமிழகம் முழுக்க 700 ஹெக்டேரில் சீமை கருவேல மரங்களை வெட்டும் பணி ஸ்டார்ட்!
சென்னை: தமிழ்நாட்டில் வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களில் 700 ஹெக்டேர் பரப்பளவு அடையாளம் காணப்பட்டு வெட்டும் பணி தொடங்கிவிட்டதாக உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதிப்பதுடன் நிலத்தடி நீரையும் அதிகளவில் உறிஞ்சும் சீமை கருவேல மரங்களை அகற்றக் கோரி மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை கடந்த 2017 ஆம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை அகற்ற உத்தரவிட்டது.
என்ன பண்ணிட்டு இருந்தீங்க..சீமை கருவேல மரங்கள் மண்ணை மலடாக்கும்.. அதிருப்தி தெரிவித்த உயர்நீதிமன்றம்

சிறப்பு சட்டம் இயற்ற ஆணை
இதனை தொடர்ந்து சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி நடைபெற்ற நிலையில், பணிகள் மெத்தமனமாக நடைபெறுவதாக அதை ஆய்வு செய்த நீதிபதிகள் குழு தெரிவித்தது. இதனை அடுத்து சீமை கருவேலங்களை அகற்றுவது தொடர்பாக சிறப்பு சட்டம் இயற்ற அப்போதைய அதிமுக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

சீமை கருவேல மரங்களை வெட்ட தடை
இந்த நிலையில் சீமை கருவேல மரங்களால் சுற்றுச்சூழலுக்கு ஆபத்து என அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என கடந்த 2017 ஆம் ஆண்டு மேகநாதன் என்ற வழக்கறிஞர் மனுத்தாக்கல் செய்தார். அதை விசாரித்த உயர்நீதிமன்றம் சீமை கருவேல மரங்களை வெட்ட இடைக்கால தடை விதித்ததோடு, அதுகுறித்து ஆய்வு செய்ய ஐஐடி நிபுணர் குழுவை அமைத்தது. அந்த குழு அளித்த அறிக்கையை தொடர்ந்து 2018 ஆம் ஆண்டு தடையை உயர்நீதிமன்றம் நீக்கியது.

அவகாசம் கோரிய அரசு
இந்தநிலையில் இந்த வழக்குகள் தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதிகள் சதீஷ்குமார், பரதசக்கரவர்த்தி அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பான அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதுதொடர்பாக கொள்கையை வகுக்க அவகாசம் வழங்குமாறும் கோரி இருந்தது.

700 ஹெக்டேர் கருவேல மரங்களை அகற்றும் பணி
இந்த நிலையில் இந்த வழக்குகள், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, ஆஜரான தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞர், தற்போதும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்பட்டு வருவதாகவும், 700 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சீமை கருவேல மரக்காடுகள் அடையாளம் காணப்பட்டு, மரங்கள் அகற்றும் பணி துவங்கி விட்டதாக தெரிவித்தார்.

8 வாரம் அவகாசம்
சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக வரைவு கொள்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டு பொதுமக்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும், இறுதி கொள்கை முடிவை அறிவிக்க 8 வார கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.