அதிகரிக்கும் கடன் சுமை... அடுத்த ஓர் ஆண்டில்... ரூ. 5.70 லட்சம் கோடியாக உயரும்
சென்னை: தமிழக அரசின் கடன் சுமை அடுத்த ஓர் ஆண்டில் ரூ. 5.70 லட்சம் கோடியாக உயரும் என்று துணை முதல்வர் ஒ பன்னீர்செல்வம் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
தற்போதுள்ள தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் வரும் மே மாதத்துடன் நிறைவடைகிறது. இதன் காரணமாக விரைவில் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இன்று கலைவானர் அரங்கில் துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம், தமிழக அரசின் 2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். எதிர்க்கட்சிகளின் வெளிநடப்பைத் தொடர்ந்து தனது பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய தொடங்கிய அவர், பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அப்போது தமிழக அரசின் தற்போதைய கடன்சுமை ரூ. 4.85 லட்சம் கோடியாக உள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்தக் கடன் சுமை அடுத்த ஓராண்டில் ரூ5.7 லட்சம் கோடியாக உயரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அதேபோல 2020-21ஆம் ஆண்டில் தமிழக அரசின் மூலதன செலவினம் 14.41% உயர்ந்து 43,170.61 ரூபாய் கோடியாக இருக்கும் என்று குறிப்பிட்ட அவர், வருவாய் பற்றாக்குறை 41,417.30 கோடியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கொரோனா தடுப்பில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருந்து வருகிறது என்றும் கொரோனா காலத்திலும் கூட தமிழ்நாடு அதிகளவிலான முதலீடுகளை ஈர்த்துள்ளது என்றும் அவர் கூறினார்