• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

தலைமைச்செயலாளர் சொன்னதால்.. ஆளுநர் தலையீடு இல்லை என நினைத்தோம்.. ஆனால்.. வெடித்த திருமாவளவன்!

Google Oneindia Tamil News

சென்னை: மாநில அரசின் உரிமைகளில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: "தமிழக ஆளுநர் அவர்கள் கேட்கும்போது துறைசார்ந்த விவரங்களை வழங்குவதற்கு அரசு செயலாளர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் செய்திருந்த அறிவிப்பு அரசியல் சர்ச்சையாக மாறியது.

உடனே தலைமைச்செயலாளர் , 'இது வழக்கமான நடைமுறைதான்; ஆனால், தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு விட்டது" என்று விளக்கம் அளித்தார். எனவே, ஆட்சிநிர்வாகத்தில் ஆளுநர் தலையீடு ஏதுமில்லை என்று கருதினோம்.

பாலியல் புகார்.. சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி, வழக்கை 3 மாதத்தில் முடிக்க கோர்ட் உத்தரவுபாலியல் புகார்.. சஸ்பெண்ட் ஆன சிறப்பு டிஜிபி மனு தள்ளுபடி, வழக்கை 3 மாதத்தில் முடிக்க கோர்ட் உத்தரவு

30ம்தேதி பேசுகிறார்

30ம்தேதி பேசுகிறார்

ஆனால், தற்போது பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மற்றும் அரசுத்துறை செயலாளர்கள் ஆகியோரை ஆளுநர் எதிர்வரும் அக்-30ஆம் தேதி அழைத்துப் பேச இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இதன்மூலம் ஆட்சி நிர்வாகத்தில் ஆளுநர் தலையிடுவதாகவே தெரிகிறது.

முதல்வர் கொடுப்பார்

முதல்வர் கொடுப்பார்

அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்பு எண் 167-இல், ஆளுநர் சில விவரங்களை மாநில அரசிடம் கேட்கலாம் என்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர் கேட்கும் விவரங்களை அளிக்க வேண்டிய பொறுப்பு அம்மாநிலத்தின் முதலமைச்சருக்குத்தான் உள்ளது.

நேரடியாக முடியாது

நேரடியாக முடியாது

நேரடியாக அரசு செயலாளர்களை ஆளுநர் அழைத்துப் பேசுவது மாநில அரசின் செயல்பாடுகளில் தலையிடுவதாகவே பொருள்படும். இதற்கு அரசியலமைப்புச் சட்டம் எந்த அனுமதியும் வழங்கவில்லை.

அரசியல் உள்நோக்கம்

அரசியல் உள்நோக்கம்

இவருக்கு முன்பிருந்த ஆளுநர் புரோகித் அவர்கள் மாவட்டங்களில் நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் கண்டனத்தைத் தெரிவித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின்னரே அவர் அந்த நடைமுறையை நிறுத்திக்கொண்டார். புதிதாக வந்திருக்கும் ஆளுநர் ஆர். என்.ரவி அவர்கள் அதே வழியைப் பின்பற்றுவது அரசியல் உள்நோக்கத்தோடு அவர் செயல்படுகிறாரோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. இந்த நடைமுறையை மேதகு ஆளுநர் அவர்கள் கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

அரசுடன் பேசணும்

அரசுடன் பேசணும்

பல்கலைக்கழகத் துணைவேந்தர்களை நியமனம் செய்வது தொடர்பாக முடிவெடுப்பதற்கு என வரையறுக்கப்பட்ட சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றி அரசுடன் கலந்துபேசி அதில் அவர் முடிவெடுப்பது வழக்கமானது. மாறாக, நியமிக்கப்பட்ட துணைவேந்தர்களைச் சந்திப்பது ஏன்? தேர்தெடுக்கப்பட்ட அரசு, முதல்வர் மற்றும் அமைச்சரவை ஆகியோரைத் தாண்டி ஆளுநரே நேரடியாக சந்திப்பது வழக்கத்திற்கும் சட்டத்திற்கும் மாறானது.

நம்பகத்தன்மை

நம்பகத்தன்மை

முதல்வரோடும் தொடர்புடைய அமைச்சர்களோடும் நிர்வாகம் குறித்து கலந்தாய்வு செய்வதற்கு தேவையான விவரங்களைக் கேட்பதற்கு ஆளுநர் அதிகாரம் பெற்றவர். எனினும், நேரடியாக அதிகாரிகளைச் சந்திப்பது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குவதாக அமையும்.

ஆர்எஸ்எஸ் பின்புலம்

ஆர்எஸ்எஸ் பின்புலம்

கடந்த அதிமுக ஆட்சியின் போது பல்கலைக்கழகங்களில் ஆர்எஸ்எஸ் பின்புலம் கொண்டவர்கள் திட்டமிட்டு உள்ளே நுழைக்கப்பட்டனர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக ஆட்சியில் உயர் கல்வி நிலையங்கள் யாவும் சனாதனக் கருத்தியல் பிடிக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த நடைமுறையைப் புதிய ஆளுநரும் பின்பற்றினால் தமிழ்நாட்டில் உள்ள உயர்கல்வி வளாகங்களில் அமைதி கெடுவதோடு கல்வியும் பாழாகும். எனவே அத்தகைய போக்கை ஆளுநர் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

திருமாவளவன் நம்பிக்கை

திருமாவளவன் நம்பிக்கை

கடந்தகால அதிமுக அரசு போல ஆளுநரின் அத்துமீறல்களுக்கெல்லாம் இடமளிக்காமல், மாநில உரிமைகளைப் பாதுகாப்பதற்கு திமுக அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று நம்புகிறோம்" இவ்வாறு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியும் கண்டனம் தெரிவித்து இருந்தது.

English summary
TN governor RN Ravi's interference in the rights of the state government is politically motivated, condemned by Viduthalai seruthakal katchi leader Thirumalavan.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X