சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை லாக்டவுன்- எதற்கு எல்லாம் தடை?- முழு விவரம்!

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் தமிழகத்தில் வரும் 10-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை முழு லாக்டவுன் அமல்படுத்தப்படுகிறது. முழு லாக்டவுனின் போது மதுபான கடைகள் அனைத்தும் மூடப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Recommended Video

    Tamil Nadu CM MK Stalin முதல் உரை | Tamil Nadu CM MK Stalin First Speech | Oneindia Tamil

    இது தொடர்பாக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கை:

    தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில், 10.05.2021 காலை 4.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.

    இந்த முழு ஊரடங்கின் போது, பின்வரும் செயல்பாடுகளுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

    TN Govt announces complete lockdown for two weeks from May 10

    - மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதற்கான தடை தொடரும்.

    - வெளிநாடுகள் மற்றும் இதர மாநிலங்களிலிருந்து விமானம் மற்றும் இரயில் போக்குவரத்து மூலம் வரும் பயணியர்களை தொடர்ந்து கண்காணிக்க இ-பதிவு முறை தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    - இரயில் மற்றும் விமான நிலையங்களுக்கு பயணிகள் சென்று வர, பயணச் சீட்டுடன் அனுமதிக்கப்படும்.

    - 3000 சதுர அடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பு கொண்ட பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்க 26.04.2021 முதல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இவை தவிர, தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் மட்டும் குளிர்சாதன வசதி இன்றி நண்பகல் 12.00 மணி வரை இயங்க அனுமதிக்கப்படுகிறது. இவற்றில், ஒரே சமயத்தில் 50 சதவிகிதம் வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும்.

    - மின் வணிக நிறுவனங்கள் மூலம் மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்ய நண்பகல் 12.00 மணி வரை அனுமதிக்கப்படும். மேற்கூறிய மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி, மீன் கடைகள் தவிர, இதர கடைகள் அனைத்தும் திறக்க தடை விதிக்கப்படுகிறது.

    - முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட மாட்டாது.

    - அனைத்து உணவகங்களிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தேநீர் கடைகள் நண்பகல் 12 மணி வரை மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். உணவகங்கள் மற்றும் தேநீர்கடைகளில் உட்கார்ந்து உண்பதற்கு அனுமதியில்லை. விடுதிகளில் தங்கியுள்ள வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் தங்கியுள்ள அறைகளிலேயே உணவு வழங்க வேண்டும். உணவுக் கூடங்களில் அமர்ந்து உண்பதற்கு அனுமதி இல்லை.

    - தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதி இல்லை. எனினும், வணிக காரணங்களுக்காக தங்கும் வாடிக்கையாளர்களுக்காகவும், மருத்துவம் சார்ந்த பணிகளுக்கு மட்டும் தங்கும் விடுதிகள் செயல்பட அனுமதிக்கப்படும்.

    - உள் அரங்கங்கள் மற்றும் திறந்த வெளியில், சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    - ஏற்கனவே அறிவித்தபடி, இறப்பு சார்ந்த நிகழ்வுகளில், இறுதி ஊர்வலங்கள் மற்றும் அதைச் சார்ந்த சடங்குகளில் 20 நபர்களுக்கு மேல் அனுமதி இல்லை.

    -மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அழகு நிலையங்கள், முடிதிருத்தும் கடைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது.

    - அனைத்து திரையரங்குகள், உடற்பயிற்சிக் கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள், கேளிக்கைக் கூடங்கள் அனைத்து மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பொருட்காட்சி அரங்குகள், பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள் கூட்ட அரங்குகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி இல்லை.

    - கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியாபார காய்கனி அங்காடிகள் செயல்பட தடை தொடர்கிறது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியாபார கடைகளுக்கு தடையும் தொடர்கிறது.

    - அத்தியாவசிய துறைகளான, தலைமைச் செயலகம், மருத்துவத்துறை, வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை, காவல் துறை, ஊர்க்காவல் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள்துறை, சிறைத்துறை, மாவட்ட நிருவாகம், மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர், உள்ளாட்சி துறைகள், வனத்துறை அலுவலகங்கள், கருவூலங்கள், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அலுவலகங்கள் தவிர, மாநில அரசு அலுவலகங்கள் எதுவும் இயங்காது. துறைத் தலைவர்கள் பணியாளர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதி செய்து
    தர வேண்டும். இந்தக் கட்டுப்பாடுகள் மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொருந்தும்.

    - அனைத்து தனியார் அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில் நுட்ப சேவை நிறுவனங்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. விதி விலக்கு அளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. வீட்டில் இருந்தபடி பணியாற்றும் முறையை அவை பின்பற்றலாம்

    - அனைத்து வழிபாட்டுத் தலங்களிலும் பொது மக்கள் வழிபாட்டிற்கு அனுமதி இல்லை. எனினும், தினமும் நடைபெறும் பூஜைகள் / பிரார்த்தனைகள் / சடங்குகளை, வழிபாட்டுத் தல ஊழியர்கள் மூலம் நடத்துவதற்கு தடையில்லை. குடமுழுக்கு மற்றும் திருவிழா நடத்த அனுமதி இல்லை.

    - நீலகிரி மாவட்டம், கொடைக்கானல், ஏற்காடு போன்ற அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கு, உள்ளூர் மற்றும் வெளியூர் சுற்றுலா பயணிகள் செல்ல அனைத்து நாட்களிலும் தடை விதிக்கப்படுகிறது.

    - தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும், அனைத்து நாட்களிலும், பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    - பூங்காக்கள், உயிரியல் பூங்காக்கள் மற்றும் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னங்கள், அகழ்வைப்பகங்கள் மற்றும் அருங்காட்சியகங்களுக்கு அனைத்து நாட்களிலும் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை.

    - பள்ளிகள், கல்லுhரிகள், பல்கலைக்கழகங்கள், அரசு மற்றும் தனியார் பயிற்சி நிறுவனங்கள், கோடைக்கால முகாம்கள் ஆகியவை இயங்க அனுமதி இல்லை.

    - நீச்சல் குளங்கள், விளையாட்டு பயிற்சி சங்கம் / குழுமங்கள் செயல்பட அனுமதி இல்லை.

    - மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயான தனியார், அரசு பேருந்து போக்குவரத்து மற்றும் வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்படுகிறது.

    -அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, நேர்முகத் தேர்வு/வேலைவாய்ப்பு போன்றவற்றிற்கும், மருத்துவமனை செல்வதற்கும் உரிய ஆவணங்களுடன் பயணிப்பவர்கள் அனுமதிக்கப்படுவர்.

    - முழு ஊரடங்கின் போது உணவு விநியோகம், மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விநியோகம் செய்யும் மின் வணிக நிறுவனங்கள் தவிர மற்ற மின் வணிக நிறுவனங்களின் சேவைகளுக்கு அனுமதி இல்லை.

    இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    English summary
    Tamil Nadu government has announced complete lockdown for two weeks starting May 10 to control the spread of COVID-19.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X