மாணவிகளுக்கு ரூ1000 வழங்கும் திட்டத்துக்காக இன்று முதல் முகாம்-உயர் கல்வி வழிகாட்டி திட்டம் தொடக்கம்
சென்னை: தமிழகத்தில் மாணவியருக்கு ரூ1,000 வழங்கும் திட்டத்துக்கான முகாம்கள் இன்று முதல் நடைபெற உள்ளன. மேலும் தமிழக அரசின் உயர்கல்வி வழிகாட்டித் திட்டமும் இன்று தொடங்கி வைக்கப்படுகிறது.
தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை மாற்றி இத்திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.\

இத்திட்டத்தில் தகுதி பெறும் மாணவிகளை சேர்க்க இன்று முதல் வரும் 30-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இது தொடர்பாக மாநில உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து கலை, அறிவியல் கல்லூரிகளில் இளங்கலை பட்டப்படிப்பில் சேரும் மாணவிகளுக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
இத்திட்டத்தை செயல்படுத்த https://penkalvi.tn.gov.in என்ற தனி இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
தகுதி வாய்ந்த மாணவிகள் தங்கள் பெயர்களை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
இதற்கு மாணவிகளின் விவரங்கள், வங்கிக் கணக்கு, ஆதார் எண், 10,12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள், பள்ளி மாற்று சான்றிதழ்கள் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி திட்டம்
இதனிடையே 12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்விக்கு வழிகாட்டும் கல்லூரி கனவு நிகழ்ச்சியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் இன்று தொடங்கி வைத்தார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடைபெற்றது.