நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: முதல்வர் ஸ்டாலினை சந்தித்து இடப்பங்கீடு கோரிக்கை வைத்த திருமாவளவன்!
சென்னை: கவுன்சிலர் தேர்தல் முடிந்த பின்னர் மாநகராட்சி, நகராட்சி பதவிகளில் தேவையான இடங்களை வழங்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன்.
தமிழகம் முழுவதும் நகர் புற உள்ளாட்சித் தேர்தல் களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி வார்டு பங்கீடு தொடர்பாக அதிகாரப்பூர்வமாக பேச்சை தொடங்கியுள்ளது.
அண்ணா அறிவாலயத்திற்கு வந்த திருமாவளவன் முதல்வரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தங்களுக்கு சாதகமான வெற்றி வாய்ப்புள்ள வார்டுகளையும் கூறியுள்ளார்.
நாங்க வர்றோம் தனியா..! நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் “மெர்சல் ” காட்ட தயாராகும் விஜய் ”சர்க்கார்”

பிப்ரவரி 19 வாக்குப்பதிவு
சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் 649 நகர் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிப்ரவரி 19ஆம் தேதியன்று ஒரே கட்டமாக நகர்புற உள்ளாட்சித்தேர்தல் நடைபெற உள்ளது. 22ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். மார்ச் 4ஆம் தேதி, மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், துணைத்தலைவர்களுக்கான மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.

திமுக விசிக பேச்சுவார்த்தை
நகர் புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக உடன் கூட்டணியில் உள்ள கட்சியினர் வார்டு பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் வேல்முருகன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த நிலையில் இன்றைய தினம் விசிகவின் தொல். திருமாவளவன் அண்ணா அறிவாலயம் வந்து மு.க ஸ்டாலினை சந்தித்து பேசினார்.

பதவிகள் பற்றி பேச்சு
மு.க ஸ்டாலினுடன் பேச்சு வார்த்தை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தொல். திருமாவளவன், பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்றதாக கூறினார். மாவட்ட நிர்வாகத்தின் முன்னணி பொறுப்பாளர்களிடம் இடங்களை பட்டியலிட்டு அளித்துள்ளோம். இது பற்றி திமுக தலைவர் ஸ்டாலினுடன் பேசியுள்ளேன்.

விசிகவிற்கு வாய்ப்பு
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு போதிய இடங்களை வழங்க வேண்டும். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை நியமிக்கும் போது விசிகவிற்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம் என்று கூறினார். பெண்களுக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு தருவது வரவேற்புக்கு உரியது. அனைவரிடத்திலும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியை அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

குறிப்பாக கேட்கவில்லை
சென்னை மேயர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அது பற்றி பேசினீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த தொல். திருமாவளவன், பொதுவாக சொல்லியிருக்கிறோம். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கவுன்சிலர் தேர்தல் முடிந்த பிறகு பதவிகளை நியமனம் செய்யும் போது விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டிருப்பதாகவும் குறிப்பாக மேயர் பதவி பற்றி குறிப்பிட்டு கேட்கவில்லை என்றும் தெரிவித்தார் திருமாவளவன். தேர்தல் முடியட்டும் கவனத்தில் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளதாகவும் திருமாவளவன் கூறினார்.

கூட்டணி கட்சியினருக்கு பதவி
நடக்க உள்ளது கவுன்சிலர் தேர்தல் மட்டும்தான், அதில் அதிக இடங்களில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் மட்டுமே மேயர், தலைவர்களை தேர்வு செய்ய முடியும். எனவே மார்ச் 4ஆம் தேதிதான் குறிப்பிட்டு கேட்க முடியும். ஏற்கனவே கருணாநிதி தலைவராக இருந்த போது உள்ளாட்சித் தேர்தலின் போது நெல்லிக்குப்பம், பாப்பிரெட்டி பட்டியில் தலைவர், துணைத்தலைவர் பதவிகளை அளித்ததாகவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

11 மேயர் பதவி பெண்களுக்கு
தமிழகத்தில் உள்ள 21மாநகராட்சிகளில் 11 மாநகராட்சிகளை மகளிருக்கு ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தாம்பரம் மாநகராட்சியும் ஆவடி மாநகராட்சியும் பட்டியலின பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சி, திண்டுக்கல் மாநகராட்சி, வேலூர் மாநகராட்சி, கரூர் மாநகராட்சி, சிவகாசி மாநகராட்சி, காஞ்சிபுரம் மாநகராட்சி, மதுரை மாநகராட்சி, கோயம்புத்தூர் மாநகராட்சி, ஈரோடு மாநகராட்சி பொதுப் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வரலாற்றில் முதன் முறை
சென்னை மாநகராட்சி மேயர் பதவி பட்டியலின பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தமிழ்நாடு அரசுக்கு ஏற்கனவே பாராட்டு தெரிவித்திருந்தார். பஞ்சாயத் ராஜ் சட்டப்படி சென்னை ஆவடி தாம்பரம் ஆகிய மாநகராட்சிகளைத் தனித்தொகுதிகளாக அறிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி ஆதிதிராவிடப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டு இருப்பதால் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன் முறையாக பெண் ஒருவர் சென்னையின் மேயராக வரக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. திமுக மனது வைத்தால் கூட்டணி கட்சியில் இருந்தும் மேயராக வர முடியும் என்று திருமாவளவன் ஏற்கனவே கூறியிருந்தார். இந்த நிலையில் தேர்தலுக்குப் பிறகு தேர்வு செய்யப்பட்டும் பதவிகளில் விசிகவிற்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று நேரடியாக கேட்டிருக்கிறார் திருமாவளவன். மேயர் பதவி விசிகவிற்கு கிடைக்குமா? ஸ்டாலின் கொடுப்பாரா விட்டுக்கொடுப்பாரா பார்க்கலாம்.