என்னதான் அங்க நடக்குது? ஒரே நாளில் 2 சம்பவம்.. கொந்தளித்த மா.சு.. விசாரணையில் குதிக்கும் அதிகாரிகள்
சென்னை: சென்னை ஐஐடியில் ஒரே நாளில் அடுத்தடுத்து நடந்த இரண்டு சம்பவங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. இது தொடர்பான விசாரணையில் தமிழ்நாடு அரசு குதித்துள்ளது.
சென்னை ஐஐடியில் அடுத்தடுத்து நிகழும் ஜாதி கொடுமைகள், பாகுபாடுகள், மரணங்கள் நாட்டையே உலுக்கி உள்ளது. உலகமே எங்கேயோ சென்று கொண்டு இருக்கும் போது, வளர்ந்த ஒரு கல்வி நிறுவனமாக பார்க்கப்படும் ஐஐடியில் தொடர்ந்து கொடுமையான ஜாதி கொடுமைகள் கடைபிடிக்கப்படுவது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில வருடங்களாக அங்கு நடக்கும் ஜாதி கொடுமைகள் காரணமாக மாணவர்கள் தற்கொலையும், பேராசிரியர்களின் பதவி விலகலும் சென்னை ஐஐடி குறித்த கேள்விகளை அதிகரித்து உள்ளது.

மரணம்
சென்னை ஐஐடியில் 2 ஆண்டுகளுக்கு முன்னர் மாணவி பாத்திமா லத்தீப் மர்ம மரணம் நாட்டையே உலுக்கியது. அதேபோல் பேராசிரியர் வசந்தா கந்தசாமி போன்ற அறிவார்த்த ஆசிரியர்கள் ஜாதி ரீதியாக ஒதுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்ட சம்பவங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தலித் மக்கள் இங்கு ஜாதி கொடுமைகளை எதிர்கொள்வது பட்டவர்த்தனமாக இப்படி பல முறை வெளியே வந்து இருக்கிறது.

இரண்டு சம்பவம்
இந்த நிலையில்தான் ஒரே நாளில் சென்னை ஐஐடியில் நடந்த இரண்டு சம்பவம் மீண்டும் அந்த கல்வி வளாகத்தை திரும்பி பார்க்க வைத்துள்ளது. சென்னை ஐஐடியில் உதவிப் பேராசிரியரான விபின் தன்னை ஜாதி ரீதியாக சக ஆசிரியர்கள், மாணவர்கள் அவமானப்படுத்தியதாக கூறி ஐஐடியில் இருந்து வெளியேறி இருக்கிறார். தொடர்ந்து எனக்கு எதிராக ஜாதி ரீதியான பாகுபாடு காட்டப்பட்டது.

முடியாது
என்னால் இங்கு பணி புரியவே முடியாது. என்னை முறையாக வேலை செய்ய கூட விடவில்லை. அதனால் நான் பணியில் இருந்து விலகுகிறேன் என்று கூறி விபின் ராஜினாமா செய்தார். இந்த சம்பவம் வெளியே வந்தவுடன் தமிழ்நாடு ஆளும்கட்சி தலைவர்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். முக்கியமாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

மா. சுப்பிரமணியன்
இது தொடர்பாக மா. சுப்பிரமணியன் தெரிவித்த கருத்தில், சென்னை ஐஐடியில் ஜாதி பாகுபாடு காட்டுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அங்கு என்னதான் நடக்கிறது என்பதை ஆராய வேண்டும். திமுக ஒரு போதும் ஜாதி, மத பாகுபாடுகளை பார்த்துக் கொண்டு சும்மா இருக்காது. அங்கு என்ன நடக்கிறது என்பதை உடனே ஒன்றிய அரசு விசாரிக்க வேண்டும், என்று காட்டமாக குறிப்பிட்டார்.

சம்பவம்
அவர் பேட்டி அளித்த சில மணி நேரங்களில்தான் சென்னை ஐஐடியில் அடுத்த பூதம் கிளம்பியது. அங்கு வளாகத்திற்கு உள்ளேயே எரிந்த நிலையில் ஆண் வாலிபரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. ஐ.ஐ.டி-யில் பிராஜெக்ட் அசோசியெட்டாக பணியாற்றி வந்த கேரளாவை சேர்ந்த உன்னிகிருஷ்ணன் நாயர் என்பவரின் உடல் இது என்று கண்டுபிடிக்கப்பட்டது.

தற்கொலை
மன அழுத்தம் காரணமாக இவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரே நாளில் அடுத்தடுத்த இரண்டு சம்பவங்கள் தமிழ்நாடு அரசை கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கல்வி நிறுவனம் என்றாலும், சென்னையில் இப்படி ஒரு கொடுமை நடப்பதை அரசு விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. முக்கியமாக முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.

விசாரணை
இந்த மரணம் குறித்தும், அங்கு நிலவும் கொடுமைகள் குறித்தும் விசாரிக்கும்படி தமிழ்நாடு அரசு கோட்டூர்புரம் காவல்நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணைகளில் தமிழ்நாடு அரசு நேரடி கவனம் செலுத்த போவதாக கூறப்படுகிறது. மூத்த போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் குதித்து உள்ளனர். உன்னி கிருஷ்ணன் மரணத்திற்கு காரணம் யார், அவருக்கு என்ன நடந்தது என்று விசாரணை நடந்து வருகிறது.