விண்ணை முட்டும் விலை... தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி - இல்லத்தரசிகளே இதோ டிப்ஸ்
சென்னை: தக்காளி திடீர் விலையேற்றத்தால் தக்காளிகளில் செய்யப்படும் உணவுகளுக்கு திண்டாட்டம் ஏற்படும் சூழலும் உருவாகியுள்ளது. விலையேற்றத்தினால் கவலையடைந்துள்ள இல்லத்தரசிகள் தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி என்று கூகுளில் சர்ச் செய்யத் தொடங்கியுள்ளனர். அவர்களுக்காக இந்த கட்டுரை. தக்காளி இல்லாமல் விதம் விதமாக சமைத்து அசத்தலாம்.
கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு மேல் விற்பனையானது. விலைச்சல் அதிகரிப்பால் இப்போது சின்ன வெங்காயம் 5 கிலோ 100 ரூபாயாக விற்பனையாகிறது. தக்காளி விலை இப்போது தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நமது அன்றாட சமையலில் தக்காளிக்கு எப்போதும் முக்கிய இடமுண்டு. பல வகையான உணவுகளில் தக்காளியும், வெங்காயமும் இடம்பெறாமல் இருக்காது. ஆனால், தக்காளியின் இந்த விலையேற்றத்தில் என்ன சமைப்பது, எப்படிச் சமாளிப்பது எனப் பெண்கள் திகைத்துப் போயிருக்கிறார்கள். தக்காளி சேர்க்காமல் எப்படி சமைக்கலாம் என்றும் யோசித்து வருகின்றனர்.
சதமடித்த தக்காளி விலை...இல்லத்தரசிகள் கவலை - பண்ணை பசுமை கடைகளில் குறைந்த விலையில் விற்க ஏற்பாடு

விண்ணை முட்டும் தாக்காளி விலை
சென்னை கோயம்பேடு சந்தைக்கு வடமாநில தக்காளி வரத்து குறைவால் சென்னை புறநகர் பகுதிகளில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்தது. இன்று கோயம்பேடு சந்தையில் 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கும் புறநகர் பகுதிகளில் 110 முதல் 120 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. சென்னையின் ஒரு நாள் தக்காளி தேவை 1200 டன்னாக உள்ள நிலையில் தற்போது 500 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வந்துள்ளது. கோடை வெயில், அசானி புயல் போன்றவற்றால் தக்காளி உற்பத்தி வெகுவாக பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி வரத்து மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக தக்காளிகள் மொத்தம் மொத்தமாக அழுகி நட்டம் ஏற்படுவதால் தக்காளி கூடுதல் விலைக்கு விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதாக விவசாயிகள் கூறியுள்ளனர்.

விலை உயர்வுக்குக் காரணம்
கடந்த சில வாரங்களுக்கு முன்புவரை 5 கிலோ தக்காளி ரூ.50க்கு விற்பனையான நிலையில் தற்போது அதன் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தமிழகத்தில் திடீர் கோடை மழையால் விளைச்சல் குறைந்து செடிகளில் அழுகும் நிலையில் தக்காளி உள்ளன. இதனா, தக்காளி விலை அதிரடியாக உள்ளது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு ஒரு கிலோ தக்காளி 100 ரூபாயாக விற்பனையாகிறது. புறநகர் பகுதிகளில் 110 ரூபாய் வரை ஒருகிலோ தக்காளி விற்பனை ஆகிறது. இந்த விலை உயர்வு இந்த மாதம் முழுவதும் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

தக்காளி இல்லாமல் சமைப்பது எப்படி
தக்காளி விலை தாறு மாறாக உயர்ந்து வருவதால் சாம்பார், குழம்பில் தாக்காளி சேர்க்காமல் சமைப்பது எப்படி என்று கூகுளில் தேட ஆரம்பித்து விட்டனர். தக்காளி சேர்க்க வேண்டிய உணவில் புளியை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். இது சீசன் காலம் என்பதால் புளி விலை குறைவாகவே உள்ளது எனவே சாம்பார், ரசத்தில் புளி அல்லது மாங்காய் சேர்த்து சமைக்கலாம். சாம்பார், குழம்பு சுவையாகவும் இருக்கும்.

குருமாவிற்கும் தக்காளி வேண்டாம்
பூரிக்கு உருளைக்கிழங்கு குருமா செய்யும் போது தக்காளி சேர்க்காமல் செய்தால் கூடுதல் சுவையோடு இருக்கும். காய்கறி, பனீர் குருமாவிற்கும் தக்காளி சேர்க்காமல் தேங்காய் அரைத்து விட்டு பால் கறி குருமாவாக செய்து அசத்தலாம். ரசத்திற்கு தக்காளி சேர்ப்பதை விட புளியோடு எலுமிச்சை சேர்க்கலாம் சுவை கூடும்.

வெரைட்டி ரைஸ் செய்யலாம்
தக்காளி, வெங்காயம் சேர்க்காமல் புளி சாதம், எள்ளு சாதம், எலுமிச்சை சாதம், கீரை சாதம், பீட்ரூட் சாதம், கேரட் சாதம், பருப்பு பொடி சாதம் என தினம் தினம் வெரைட்டியாக சமைத்து குடும்பத்தினரை அசத்தலாம். இந்த கலவை சாதங்களுக்கு பருப்பு துவையல், எள்ளுத்துவையல், புதினா துவையல் என செய்து தரலாம். இல்லத்தரசிகளே கவலை வேண்டாம். கைவசம் ஐடியா இருக்கும் போது தக்காளி விலை உயர்வை நினைத்து கவலைப்பட வேண்டாம்.