தமிழக அரசியலில் திடீர் திருப்பம்.. அமமுக - ஓவைசி கட்சி கூட்டணி.. "இந்த 3" தொகுதிகளுக்கு குறி!
சென்னை: தமிழக அரசியலில் திடீர் திருப்பமாக அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், கட்சியுடன் அசாதுதீன் ஓவைசியின், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
இந்த கூட்டணியில், கிருஷ்ணகிரி, சங்கராபுரம் மற்றும், இஸ்லாமிய வாக்குகள் அதிகம் உள்ள வாணியம்பாடி ஆகிய மூன்று தொகுதிகளில் ஓவைசி கட்சி போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தொகுதி பங்கீடு ஒப்பந்தத்தில் டிடிவி தினகரன் மற்றும் ஓவைசி கட்சியின் தமிழக பொறுப்பாளர் ஆகியோர் இணைந்து கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த கூட்டணியில் வேறு கட்சிகள் எதுவும் இதுவரை இணையவில்லை.
திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமை கட்சி.. 1 தொகுதி ஒதுக்கீடு.. உதய சூரியன் சின்னத்தில் போட்டி

அகில இந்திய மஜ்லிஸ் கட்சி
தெலுங்கானா மாநிலத்தின் தலைநகரான ஹைதராபாத்தை தலைமையகமாகக் கொண்டுள்ளது அகில இந்திய மஜ்லிஸ் கட்சி. இருப்பினும், தெலுங்கானா, ஆந்திரா தவிர்த்து, பிற மாநிலங்களிலும் இந்த கட்சிக்கு செல்வாக்கு பெருகி வருகிறது. மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களில் தொடர்ந்து போட்டியிட்டு வருகிறது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி.

பீகாரில் 5 தொகுதிகள்
உத்தரபிரதேச மாநிலத்தில் கணிசமான தொகுதிகளில் இந்த கட்சிக்கு செல்வாக்கு இருக்கிறது. பீகாரில் கடந்த சட்டசபை தேர்தலில் யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு 5 தொகுதிகளை இந்த கட்சி வென்றது. லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி, காங்கிரஸ் கட்சி ஆகியவை அடங்கிய மெகா கூட்டணியில் அசாதுதீன் ஓவைசி கட்சி சேரவில்லை. தனித்துப் போட்டியிட்ட நிலையில் சிறுபான்மையினர் சிதறி அதுவே, பாஜக கூட்டணி வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது.

ஓவைசி கட்சிக்கு பட்டம்
இந்த நிலையில்தான் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் போட்டியிடப்போவதாக அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி சமீபத்தில் அறிவித்தார். இரு மாநிலங்களிலும் எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். அந்த கட்சிக்கு தமிழகத்தில் பட்டம் சின்னம் ஒதுக்கப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த நிலையில், அமமுக கட்சியுடன், ஓவைசி கட்சி கூட்டணி அமைத்துள்ளது.

திமுக கூட்டணியில் இஸ்லாமிய கட்சிகள்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கின்றன. இது தவிர தமிமுன் அன்சாரி தலைமையிலான மனிதநேய ஜனநாயக கட்சி, திமுகவுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஓவைசி கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி வைத்திருப்பதால் திமுக வாக்கு வங்கி பெரிதாக பாதிப்பு ஏற்பட போவது கிடையாது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

ஓவைசி பிரச்சாரம்
அதேநேரம் அசாதுதீன் ஓவைசி சிறப்பாக பிரச்சாரம் செய்யக் கூடியவர். எனவே சிறுபான்மையினரில், குறிப்பிட்ட பகுதியினரை தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்க வைக்கும் அளவுக்கு அவரது பிரசார வியூகம் அமைந்து விட்டால் என்ன செய்வது. அதற்கு பதிலடியாக நம் தரப்பு என்ன செய்ய வேண்டும், என்பது பற்றி திமுக கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக யோசித்து வருகின்றன.