சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டியூஷன் என்றொரு அக்கப் போர்.. பிள்ளைகளை நிம்மதியா படிக்க விடுங்கப்பா!

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாதிரி பெரு நகரங்களில் வசிக்கும் ஒருத்தர், அக்கம்பக்கத்தில யார், யார் குடி இருக்கிறாங்க என சரியா தெரிஞ்சு வைச்சிருந்தால்... கண்டிப்பாக அவருக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்தலாம். அந்தளவிற்கு நகர்ப் பகுதிகளில் ஒருவருக்கொருவர் கொஞ்சமும் தொடர்பில்லாமல் தனித்தனி தீவுவாசிகளாகத்தான் இருக்கிறாங்க.

தென் சென்னை பகுதியில் ஒரு அபார்ட்மெண்டில் வசிக்கும் இதே கேட்டகிரியைச் சேர்ந்த இருவர் சமீபத்தில் எதிர்பாராமல் சந்தித்துக் கொண்டனர். முதலாமவர் , இப்பதான் கல்யாணம் ஆச்சி. நானும் மனைவியும் வீட்டில் இருக்கிறோம் என்றார். இரண்டாவது நபர் எங்களுக்கு இரண்டு பிள்ளைகள். ஒரு ஆண், ஒரு பெண் என்று சொல்ல, அடுத்தவர் அப்படியே ஷாக்காகி போனார். உங்க வீட்டில் ரெண்டு பிள்ளைகளா? பிள்ளைகளை ஒருமுறை கூட பார்த்ததில்லையே. பிள்ளைகள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை! என தனது ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

குறிப்பிட்ட அந்த நபர் வெளிப்படுத்தியது ஆச்சரியமல்ல ; அதுதான் இன்றைய நிஜம்! மழலை மாறாத பிஞ்சுப் பருவத்திலேயே பிள்ளைகளை பள்ளிகளுக்கும், டியூசன் செண்டர்களுக்கும் தத்துக் கொடுத்துவிட்டால் அவர்கள் வீட்டில் எப்படி இருக்க முடியும்?

போட்டிகள் நிறைந்த உலகம்

போட்டிகள் நிறைந்த உலகம்

போட்டிகள் நிறைந்த இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் தங்களது பிள்ளைகளை `அவையத்து முந்தியிருக்க செய்ய` படாதபாடு படுகின்றனர். இதன் முதல் படியாக புட்டிப்பால் குடிக்கிற குழந்தையை கிரெஷ் எனப்படும் மழலையர் பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். அப்புறம் பிரி கேஜி, எல்.கேஜி, யூ.கே.ஜி என ஒன்றாம் வகுப்பு வந்து சேர்வதற்குள் அந்த பச்சை மண்ணு படும் அவஸ்தைகள் இருக்கிறதே...அப்பப்பா அதை வார்த்தைகளில் சொல்லிமுடிக்க முடியாது.

அதிகாலையில் அலறியடித்து

அதிகாலையில் அலறியடித்து

கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெங்களூரு சென்றிருந்தபோது ஒரு நாள் உறவினர் வீட்டில் தங்கினேன். இரவு வெகு நேரம் பேசிவிட்டு லேட்டாகத்தான் தூங்கப் போனோம். கொஞ்ச நேரத்தில் வீட்டில் ஆங்காங்கே லைட்டுகள் எறிய, ஒரே களேபரமாக இருந்தது. ஏதேனும் விபரீதம் நடந்துவிட்டதா என்கிற பயத்தில் நான் அலறியடித்துக் கொண்டு எழுந்து பார்த்தால்... அதிகாலை 5;30 மணி. பிரபலமான பள்ளியில் முதல் ஷிப்டில் யூ.கே.ஜி படிக்கும் தங்களது குழந்தையை ஸ்கூலுக்கு அனுப்ப உறவினரும், அவரது மனைவியும் கதகளி ஆடிக்கொண்டிருந்தனர். ``7;30க்கு கிளாஸ். 6;30க்கு ஸ்கூல் பஸ் வந்திடும். அதுக்குள்ள ரெடியாகணும்`` என லைவ் ரிப்போர்ட் கொடுத்தார் உறவினரின் மனைவி.

ஒரே ரணகளம்

ஒரே ரணகளம்

உறக்கம் கலையாத அந்தக் குழந்தையை படுக்கையிலிருந்து அப்படியே அலேக்காகத் தூக்கி வாஷ் பேசின் முன்பாக நிறுத்தி வாய்க்குள் வலுக்கட்டாயமா பிரஷ்ஷை விட்டனர். கண்ணையே திறக்காத அந்த குழந்தை எப்படி வாயைத் திறக்கும்? பெற்றோர்கள் விடுவார்களா என்ன! குற்றவாளிகளை போலீஸ் மிரட்டுவது போல, அதையும், இதையும் சொல்லி பிரஷ் பண்ணவைத்து, சூட்டோடு சூடாக வாய்க்குள் எதையோ ஊற்றி, பாத்ரூமிக்குள் அனுப்பி வைத்தனர். ஒரு ஐந்து நிமிடம் அங்கே ஒரே ரணகளம்.

டாட்டா காட்டி பறந்த குழந்தை

டாட்டா காட்டி பறந்த குழந்தை

பிறகு அங்கிருந்து குழந்தையை அலேக்காக ஹாலுக்குத் தூக்கிவந்து யூனிபார்ம், டை, ஷூ இத்யாதிகளை மாட்டிவிட்டு, அது வேண்டாமென்று கதற, அதைப் பொருட்படுத்தாமல் வாய்க்குள் எதையோ திணித்தனர். ``ம்..ம் சீக்கிரம் முழுங்கு`` என தாயார் உத்தரவு போட தொண்டைக்குள் சிக்கியதை உள்ளே தள்ள முடியாமல் திருதிருவென விழித்தது குழந்தை. அந்த சமயத்தில் ஸ்கூல் பஸ் ஹாரன் காதைக் கிழிக்க, சாப்பிட்டும், சாப்பிடாமலும் எந்திரத்தனமாக டாடா காட்டியபடி பள்ளி நோக்கி பறந்தது அந்தக் குழந்தை.

நிலவரம் கலவரமே

நிலவரம் கலவரமே

எனது உறவினர் வீடு மட்டுமல்ல, இன்றைய சூழலில் பெரும்பாலான வீடுகளில் நிலமை இதுதான். அதிலும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்துவிட்டால்...நிலவரம், கலவரம்தான். ஒன்றாம் வகுப்பிலிருந்துதான் ஆரம்பக் கல்வி தொடக்கம் என்கிற நிலை இருந்தவரை குழந்தைகள் மீது இத்தகைய அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதில்லை. அம்மா, அப்பா தொடங்கி தாத்தா, பாட்டி வரை அத்தனை உறவுகளுடனும் கூடிக் கலந்து பாசத்தை பகிர்ந்துகொள்ள குழந்தைகளுக்கு நேரம் இருந்தது. நேரத்திற்கு ஏற்ப, பிடித்த உணவுப் பொருட்களை ஆசைதீர, அதேசமயம் நிதானமாக சாப்பிடவும் முடிந்தது.

மாலை விளையாட்டு போயே போச்

மாலை விளையாட்டு போயே போச்

எல்லாம் போக, பாரதி சொன்னபடி `மாலை முழுவதும் விளையாடும்` வாய்ப்பு இயல்பாகவே கிடைத்தது. இதனால் குழந்தைகள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமை பெற்று மிகவும் ஆரோக்கியமாக இருந்தனர். மாலை விளையாட்டெல்லாம் இப்போதைய குழந்தைகளுக்கு எட்டாத கனியாகிவிட்டது. பள்ளி விட்டு வந்ததும், வராததுமாக அவர்களை டியூஷன் அறைகளுக்குள் சிறைவைப்பது இன்றைய பெற்றோர்களைப் பொருத்தவரை ஒரு ஸ்டேட்டஸ் அடையாளமாகிவிட்டது.

3 டியூஷன்

3 டியூஷன்

``ஈவினிங்கில் எங்க பையன் மூணு சப்ஜெக்டுக்கு தனித்தனியே ட்யூஷன் போறான். அப்புறம் வாரத்தில் ரெண்டு நாள் மொத்த சப்ஜெக்டுக்கும் ஸ்பெஷல் கோச்சிங் அனுப்பறோம். மொத்தத்தில் எங்க கூட பேசறதுக்குக் கூட அவனுக்கு நேரமில்லை. டே அண்ட் நைட் ஒரே பிசி`` என அம்மாக்கள் அலட்டுவதைக் கேட்டால், அவரது பிள்ளை நீட் , அல்லது சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகி வருவது மாதிரி தெரியும். ஆனால் குறிப்பிட்ட அந்த பிள்ளை இப்போது மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் கொடுமையிலும் கொடுமை. அதற்குத்தான் இவ்வளவு அலப்பறை! இதில் இன்னும் சில பிரகஸ்பதி பெற்றோர்கள் இருக்கிறார்கள். வார நாட்களில் காலை 6 மணி தொடங்கி இரவு 10 மணிவரை குழந்தைகளைப் பாடாய்படுத்தியும் அவர்கள் திருப்தி அடைவதில்லை. ``சன்டே சும்மாதானே வீட்டில் இருக்கிறான். கராத்தே, யோகா கிளாசுக்கு அனுப்பினால் என்ன!`` என சொல்வதோடு மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கான அந்த ஒரே ஒரு விடுமுறை நாளையும் அநியாயமாகக் கபளீகரம் செய்துவிடுகின்றனர்.

டியூஷன் மோகம்

டியூஷன் மோகம்

பெற்றோர்களின் இந்த மோகத்தை மிகச் சரியாகப் புரிந்துகொண்டதால் இன்றைக்கு கிராமப்புறங்கள் தொடங்கி நகர்ப்புறங்கள் வரையிலும் டியூசன் பிசினெஸ் கொடிகட்டிப் பறக்கிறது. தெருவுக்குத் தெரு, மூலைக்கு மூலை எங்கு பார்த்தாலும் டியூசன் செண்டர்கள்தான். மற்ற கமர்சியல் பொருட்கள் விற்பனை மாதிரி, இரண்டு சப்ஜெக்டுக்கு டியூசன் எடுத்தால் ஒரு சப்ஜெக்ட் இலவசம் என புதிய, புதிய யுக்திகளுடன் செமத்தியாகக் கல்லா கட்டுகிறார்கள்.

 கோச்சிங் பூதாகரம்

கோச்சிங் பூதாகரம்

குழந்தைகளுக்கான டியூசன் களேபரங்களின் நீட்சியாகத்தான் இப்போது நீட் கோச்சிங் பூதாகரமாக உருவெடுத்துள்ளது . ஒரு ஆண்டில் இந்தியா முழுவதும் நீட் கோச்சிங் என்ற வகையில் 60 ஆயிரம் கோடி ரூபாய் புழங்குவதாக வெளியாகும் செய்திகள், பொதுமக்களின் டியூசன் மோகத்திற்கு சரியான உதாரணம். அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி கல்வி என்கிற பெயரில் சிறு வயதில் குழந்தைகள் மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களால் அவர்களில் 55% பேர் மனரீதியாகப் பாதிக்கப்படுவதாகத் தெரியவந்துள்ளது. என்ன மாதிரியான பாதிப்பு என்பதைச் சொல்லும் நிலையில் கூட அந்த குழந்தைகள் இல்லை என்பது குறிப்பிட வேண்டிய சோகம். காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு ஓடும் பெற்றோருக்கு இதையெல்லாம் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க நேரமுமில்லை.

உளவியல் காரணங்கள்

உளவியல் காரணங்கள்

இது பற்றி உளவியல் நிபுணர்களிடம் கேட்டால், ``போட்டி நிறைந்த இன்றைய உலகில் பிள்ளைகளை எல்லா தகுதியும், திறமையும் கொண்டவர்களாக உருவாக்க பெற்றோர்கள் நினைப்பதிலும், அதற்காக முயற்சி செய்வதிலும் தவறில்லை. அதேநேரம் எதற்கும் ஒரு எல்லை உண்டு என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். எந்திரங்களைக் கூட இடைவெளியின்றி இயக்கினால் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உண்டு. அப்படியானால் பூக்களுக்கு இணையான பிஞ்சு குழந்தைகளுக்கு அளவிற்கு அதிகமாக அழுத்தம் கொடுத்தால் என்ன ஆகும் என்பதை பெற்றோர் எண்ணிப் பார்க்க வேண்டும். இடைவெளியின்றி குழந்தைகளை இயங்க வைப்பதால் உடல், மன ரீதியாக பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. சிறு வயதில் நன்கு படிக்கும் குழந்தைகளுக்கு நாட்கள் செல்லச் செல்ல படிப்பில் ஆர்வம் குறைந்துவிடுவதற்கு இதுதான் காரணம்.

முயற்சியும் அவசியம்தான்

முயற்சியும் அவசியம்தான்

இப்படி சொல்வதால் குழந்தைகளின் படிப்பிற்காக பெற்றோர் கூடுதல் முயற்சி எடுக்க வேண்டாம் என்பதல்ல. அத்தகைய முயற்சிகள், குழந்தைகளுக்கு அதிக அழுத்தத்தைத் தராத வகையில் ஒரு அளவோடு இருக்க வேண்டும். அப்போதுதான் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். இல்லாவிட்டால் எதிர்மறையான விளைவுகளே ஏற்படும்`` என்கிறார்கள். படிப்பு முக்கியம்தான்.. அதைவிட பசங்க மனநலமும், உடல்நலமும் ஆயிரம் மடங்கு முக்கியம் என்பதை புரிந்து நடந்தால் பிரச்னை இல்லை.

-கௌதம்

English summary
Tution menace is on rise and it is a part and parcel of daily life also.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X