தமிழ்த் தாய் வாழ்த்து: சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு வேல்முருகன் தலைமையில் போராட்டம்!
சென்னை: நாட்டின் 73-வது குடியரசு தின நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த அதிகாரிகளைக் கண்டித்து இன்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியினர் சென்னை ரிசர்வ் வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் இந்த முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
நாடு முழுவதும் நேற்று 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலும் குடியரசு தின விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. தமிழ்த்தாய் வாழ்த்து பாடும்போது அதிகாரிகள் எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்தனர். இது தொடர்பாக கேள்வி கேட்ட போது, தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்க அவசியம் இல்லை என்று உயர் நீதிமன்ற உத்தரவு உள்ளது என அவர்கள் வாதிட்டனர். அந்த உத்தரவை காண்பியுங்கள் என கேட்ட போது நழுவி ஓடினர். மேலும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடும்போது எழுந்து நிற்க வேண்டும் என்கிற தமிழக அரசாணை உள்ளதே என கேட்கப்பட்ட போது அது குறித்து தெரியாது என்றும் அந்த அதிகாரிகள் தெனாவெட்டாக பதிலளித்தனர்.
மினிமம் கட்டுப்பாடு.. தமிழ்நாட்டில் புதிய லாக்டவுன் விதிகள்? இன்று மீட்டிங் போடும் முதல்வர் ஸ்டாலின்

பாஜக கண்டனம்
இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது யாராக இருந்தாலும் எழுந்து நிற்க வேண்டியது கட்டாயமே என கூறியிருந்தார் தமிழக பாஜக செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.

கனிமொழி எம்.பி
திமுக எம்.பி.க்கள் கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், தயாநிதி மாறன் ஆகியோரும் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர். கனிமொழி எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில், ஒரு அரசாணையைக்கூட படித்துத் தெரிந்துகொள்ள முடியாதவர்கள் எப்படி அதிகாரிகளாகப் பணியாற்ற முடியும். இல்லை இவர்கள் தமிழக அரசைவிட மேம்பட்டவர்களா? என கேள்வி எழுப்பி இருந்தார்.

தமிழச்சி எம்.பி கண்டனம்
தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி, குடியரசு தினவிழாவில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்பட்டபொழுது, எழுந்து நிற்காமல், விவாதத்தில் ஈடுபட்ட சென்னை ரிசர்வ் வங்கிப் பணியாளர்கள் சிலரின் செயல் கண்டணத்திற்குரியது; இச்செயல், தமிழ் மொழியின் மாண்பையும், தமிழ் மக்களின் உணர்வுகளையும் அவமரியாதை செய்யும் செயலாகும்.பொது நிகழ்வுகளில், தமிழ்த்தாய்வாழ்த்து, பாடப்படும்பொழுது, அனைவரும் எழுந்து நின்று மரியாதை செய்திட வேண்டும் எனும் மாநில அரசின் ஆணையினை, அரசுப் பணியாளர்கள், பின்பற்றாமல், விதிமீறலில் ஈடுபடுவது ஏற்கத்தக்கதல்ல எனவும் சாடியிருந்தார்.

தயாநிதி மாறன் கேள்வி
தயாநிதி மாறன் எம்.பி, அனைவராலும் போற்றப்படும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்படும்போது தமிழ்நாடே எழுந்து நின்று மரியாதை செலுத்துகிறது. ஆனால் தமிழகத்தின் தலைநகராம் சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கி அதிகாரிகள் சிலருக்கு என்ன நேர்ந்ததோ தெரியவில்லை. அய்யோ பாவம்! இன்றைய குடியரசு தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது அவர்களில் பலரை எழுந்து நிற்க விடாமல் இறுக்கிப் பிடித்து தடுத்தது எது? மாநில அரசின் அரசாணையை மதிக்க வேண்டும் என்பதுகூட புரியாதபடி தடுமாறியது ஏன்? என கேள்வி எழுப்பியிருந்தார்.

முற்றுகைப் போராட்டம்
இதனிடையே தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நின்று மரியாதை செலுத்த மறுத்த அதிகாரிகளைக் கண்டித்து சென்னை ரிசர்வ் வங்கியை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. தலைமையில் அக்கட்சியினர் இன்று முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது தமிழ்த் தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் அவமரியாதை செய்த அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி வேல்முருகன், அதிகாரத் திமிருடன் தமிழ்த் தாய் வாழ்த்தை அவமரியாதை செய்த அதிகாரிகள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்; அப்படி செய்யாவிட்டால் அந்த அதிகாரிகளை நாங்கள் சிறைபிடிப்போம் என்று எச்சரித்தார்.