உட்கட்சி தேர்தலிலும் பறக்குது உதயநிதி கொடி.. எதிர்காலத்திற்கு இப்பவே ‘ரெடி’ - உற்சாகத்தில் இளைஞரணி!
சென்னை : தி.மு.க அமைப்புத் தேர்தல் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் போட்டியிடும் நிர்வாகிகள் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இதில் போட்டியிட தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், தனது ஆதரவாளர்களை அதிகளவில் இறக்கி இருப்பதாகக் கூறப்படுகிறது.
கட்சியை எதிர்காலத்திற்கு ஏற்ற வகையில் கட்டமைக்க, இளைஞரணி நிர்வாகிகள் பலருக்கு மாவட்ட பொறுப்புகளை பெற்றுத் தரவும் உதயநிதி காய்நகர்த்தி வருகிறார்.
ஆட்சிக்கு வந்து ஒரு வருஷம் ஆச்சு.. நீட் தேர்வு ரத்து என்னாச்சு? திமுக அரசை கேட்கும் மாணவ, மாணவிகள்.!

உதயநிதி ஸ்டாலின்
தி.மு.கவில் உதயநிதி ஸ்டாலினுக்கு கடந்த 2019ஆம் ஆண்டில்தான் இளைஞரணி செயலாளராக பொறுப்பு கொடுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, அந்தத் தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்ட தீவிர பிரச்சாரத்திற்கு பரிசாக இந்த பதவி கொடுக்கப்பட்டதாக பேசப்பட்டது.
ஆனால், அதற்கு முன்பிருந்தே உதயநிதி, கட்சிக்குள் தனது ஆதரவுப் படையைக் கட்டமைக்கத் தொடங்கிவிட்டார். சென்னையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலினின் ஆதரவாளர்கள் முக்கியப் பொறுப்புகளுக்கு வந்துள்ளனர்.

அமைச்சர் பதவி?
2021 சட்டப்பேரவைத் தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வெற்றி பெற்று சட்டப்பேரவைக்குள் அடியெடுத்து வைத்தார் தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின். அவருக்கு அப்போதே அமைச்சர் பதவி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
அமைச்சர் பதவி வழங்கப்படாவிட்டாலும், தி.மு.க நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது, அரசு சார்பில் நடைபெற்ற விழாக்களில், உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அமைச்சர்கள் பங்கேற்கும் விழாக்களில் சிறப்பு விருந்தினராக உதயநிதி ஸ்டாலின் கலந்து கொள்கிறார்.
ஸ்டாலின் ஆட்சியின் ஓராண்டு நிறைவடையும் நாளான இன்று உதயநிதிக்கு அமைச்சர் பதவி அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் வெளியாகின. இதுவரை அதுகுறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், இந்த அறிவிப்பு சில நாட்கள் தள்ளிப்போகலாம் எனக் கூறப்படுகிறது.

உதயநிதி ஆதிக்கம்
தி.மு.கவில் ஸ்டாலினுக்கு அடுத்தபடியாக அதிகாரமிக்க தலைவராகவே உதயநிதி இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின் எந்தப் பொறுப்பிலும் இல்லாத காலத்திலேயே, தனது ஆதரவாளர்களுக்கு எம்.பி, எம்.எல்.ஏ சீட்களை பெற்றுக் கொடுத்துள்ளார்.

சின்னவர்
உதயநிதியின் தலையீடுகள் கட்சியின் சீனியர்களிடையே சிறுசிறு சங்கடங்களை ஏற்படுத்தினாலும், உதயநிதியை மீறி ஒன்றும் செய்யமுடியாது என்பதால் அமைதியாகி விடுகின்றனர். தாங்கள் இருக்கும் இடத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு உதயநிதியின் தயவு நிச்சயம் வேண்டும் என்பதால் அவரைக் குளிர்விக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

திமுக உட்கட்சி தேர்தல்
தி.மு.கவின் 15வது அமைப்பு தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. உள்ளாட்சி தேர்தலில் தலைமை அறிவித்த அதிகாரப்பூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டியாக களமிறங்கிய நிர்வாகிகள், உள்ளடி வேலை பார்த்தவர்களை பதவிகளிலிருந்து தூக்கிவிட்டு விசுவாசிகளை அமரவைக்க ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.
அதேநேரம், உதயநிதி ஸ்டாலின், தனக்கு வேண்டியவர்களை, இளைஞரணி நிர்வாகிகளை மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்புகளை அமரவைக்க திட்டமிட்டு காய்நகர்த்தி வருகிறார்.

இளைஞரணி நிர்வாகிகளுக்கு பதவி
தி.மு.கழக தேர்தலில் ஒன்றிய-நகர-பேரூர்-பகுதி-மாநகர செயலாளர் பொறுப்புக்கு தகுதியான இளைஞர் அணி நிர்வாகிகளை பரிந்துரைக்குமாறு அந்தந்த பகுதி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்.
இதன் மூலம், புதிய நிர்வாகிகள் நியமனத்தில் உதயநிதியின் கை ஓங்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இளைஞரணி நிர்வாகிகள் உற்சாகமாகி வருகின்றனர்.

எதிர்காலத்திற்கு
தனக்கு வேண்டிய நிர்வாகிகளை அனைத்து இடங்களிலும் அமர்த்தி விட்டால், அடுத்தகட்ட பணிகளுக்கு பயன்படும் என்றும், தனது செல்வாக்கு உயரும் என்றும் பிளான் செய்துள்ளார் உதயநிதி.
அதேநேரம், தனது பரிந்துரைப்படி பொறுப்பைப் பெறும் நிர்வாகிகள், உண்மையான விசுவாசிகளாக இருக்க வேண்டும் எனவும், கட்சி மாறுவது போன்ற நடவடிக்கைகள் அறவே கூடாது என்றும் எதிர்பார்க்கிறார் என்கிறார்கள் விபரமறிந்தவர்கள்.