"சமூக நீதி என்பதே கற்பனையா.. ஆணவ கொலை வழக்கு குற்றவாளிகள் விடுதலையா".. ரஞ்சித் வேதனை
சென்னை: "ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?" என்று உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீடு தீர்ப்பு குறித்து டைரக்டர் ரஞ்சித் கேள்வி எழுப்பி உள்ளார்.
தமிழகத்தில் பரபரப்பையும், மிகப்பெரிய அதிர்வலையையும் ஏற்படுத்திய உடுமலை சங்கர் கொலை வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பை சென்னை ஹைகோர்ட் அறிவித்தது.

தீர்ப்பில் கௌசல்யாவின் தந்தை சின்னசாமி என்பவர் விடுதலை செய்யப்பட்டதாகவும், அதேபோல் கௌசல்யாவின் தாய் விடுதலையை எதிர்த்து போலீசார் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடுமலை சங்கர் வழக்கில் அரசுத் தரப்பு வாதம் வலுவாக இல்லை- ஏமாற்றம் தருகிறது: திருமாவளவன்
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வருகின்றனர்.. அந்த வகையில், டைரக்டர் பா.ரஞ்சித் தனது கருத்தை ட்விட்டரில் வெளிப்படுத்தி உள்ளார். மொத்தம் 3 ட்விட்களை அடுத்தடுத்து போட்டு தனது அதிருப்தியையும் பகிரங்கமாகவே கூறி, தமிழக அரசையும் சாடி உள்ளார்.. அந்த ட்வீட்கள் இவைதான்:

"மிகவும் பதற்றத்தை உண்டாக்கிய உடுமலை சங்கரின் ஆணவப் படுகொலை வழக்கில் குற்றவாளிகளை நிரபராதிகள் என்று விடுவித்த உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வழக்கை திறன்பட நடத்த இயலாத தமிழக அரசுக்கு கடும் கண்டனங்கள்!!

ஒரு புறம் மேலவளவு வழக்கை போல தண்டனை குற்றவாளிகளை தண்டனை காலத்திற்கு முன்கூட்டியே விடுதலை செய்கிறார்கள், இப்போது தண்டனை பெறாமலே ஆணவ கொலையை நிகழ்த்திய குற்றவாளிகளை விடுவிக்கிறார்கள். தமிழக அரசில் சமூக நீதி என்பதே கற்பனையா?

இம்மாதிரியான வழக்குகளின் தீர்ப்பு சமூக தளத்தில் பல நல்லுதாரணங்களை உண்டாக்க வேண்டும் என்பதே அனைவரின் தேவை, எதிர்பார்ப்பு. ஆனால் இந்த வழக்கில் பெற்ற தீர்ப்பு சமூக தளத்தில் உருவாக்கும் மனநிலையை யோசிக்கவே மனம் கவலை கொள்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.