• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In

'உளியின் ஓசை' திரைப்பட இயக்குநர், எழுத்தாளர் இளவேனில் மாரடைப்பால் மரணம்.. ஸ்டாலின் இரங்கல்

|

சென்னை: புகழ்பெற்ற எழுத்தாளரும், திரைப்பட இயக்குநருமான இளவேனில் (70) மாரடைப்பால் காலமானார். கருணாநிதியின் கதை, வசனத்தில் உருவான உளியின் ஓசை படத்தை இயக்கியவர் இளவேனில் ஆகும். மேலும் பல நூல்களையும் எழுதியுள்ளார்.

இந்த நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை:

முத்தமிழறிஞர் கருணாநிதி அவர்களுக்கு மிகவும் நெருக்கமான நண்பரும், கவிஞருமான இளவேனில் அவர்கள் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Uliyin Osai movie director Ilavenil passed away

இடதுசாரிச் சிந்தனைக்குச் சொந்தக்காரர். கருணாநிதியின் "சாரப்பள்ளம் சாமுண்டி" என்ற கதையை அடிப்படையாக வைத்துத் தயாரிக்கப்பட்ட "உளியின் ஓசை" திரைப்படத்தை இயக்கியவர்.

எழுத்தாளராக இருந்த இளவேனில் இயக்கிய முதல் படமும் இதுதான். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அந்தத் திரைப்படத்தைப் பார்த்து விட்டு, "எனது கதையின் சாரத்தைக் காப்பாற்றும் விதத்தில் படத்தை மிகுந்த கவனத்துடன் எடுத்துள்ளார்" என்று கவிஞர் இளவேனிலை மனதாரப் பாராட்டியதை இந்த நேரத்தில் நெகிழ்வுடன் நினைவு கூர்கிறேன்.

"புயலுக்கு இசை வழங்கும் பேரியக்கம்" என்ற இளவேனில் புத்தகத்திற்கு முத்தான முன்னுரை வழங்கிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தனது இதயத்தில் அவருக்குத் தனி இடம் கொடுத்து வைத்திருந்தார். இலக்கிய உலகத்திற்கும், திரையுலகத்திற்கும் பேரிழப்பாகியுள்ள அவரது மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும், சக நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

"டொக்கு.. டொக்கு.. டொக்குன்னு.." கோவை தொண்டர்கள் சிரிப்பலைக்கு இடையே.. அமைச்சரை கலாய்த்த ஸ்டாலின்!

மேலும், மு.க.ஸ்டாலின் வெளியிட்ட மற்றொரு இரங்கல் செய்தியில், மூத்த பத்திரிக்கையாளரும், "இலட்டு" என்ற மாத பத்திரிகையின் ஆசிரியருமான இக்பால் அவர்கள் திடீர் உடல் நலக்குறைவால் மறைவெய்தினார் என்ற துயரச் செய்தி கேட்டு கடும் அதிர்ச்சிக்கும், மிகுந்த வேதனைக்கும் உள்ளானேன். அவரது மறைவிற்கு, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கழகத்தின் "போர்வாளாம்" முரசொலி நாளிதழில் அச்சுக்கோர்ப்பவராக பணியில் சேர்ந்த அவர் திராவிட இயக்கக் கொள்கைகள் மீது இணையற்ற பிடிப்பும், பற்றும் வைத்திருந்தவர். முத்தமிழறிஞர் கலைஞரின் மீது தனி மதிப்பும் மரியாதையும் காட்டிய அவர் -1977ல் இருந்து "இலட்டு" என்ற மாதப்பத்திரிகையைத் துவங்கி நடத்தி வந்தார். அதனாலேயே அவர் அனைவராலும் "இலட்டு இக்பால்" என்று அன்புடன் அழைக்கப்பட்டவர். 44 ஆண்டுகளாக - தன்னந்தனியாக ஒரு பத்திரிகையை நடத்துவது சாதாரண காரியம் அல்ல. ஆனால், அப்படி பத்திரிகையை நடத்தி - சாதித்துக் காட்டிய திரு. இக்பால் இதழியல் துறையின் மீது தணியாத ஆர்வம் கொண்டவர்.

சிறுபான்மையின சமுதாயத்தின் குரல்களை - திராவிட இயக்கத்தின் கொள்கைகளை மக்கள் மன்றத்திற்குத் தங்குதடையின்றி - தொய்வின்றிக் கொண்டு சென்ற இக்பால் என் மீது தனி மரியாதை வைத்திருந்தவர். அவர் இப்போது மறைந்து விட்டார் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவர் மறைந்தாலும்- அவருடைய ஏற்றமிகு நடையில் வெளிவந்துள்ள எழுத்துகளும், கருத்துகளும் என்றென்றும் தமிழக மக்களிடம் - குறிப்பாக இதழியல் வாசகர்களிடம் நீடித்து நிலைத்து நிற்கும் என்று கூறி - திரு இக்பால் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், இதழியல் வாசகர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

English summary
Renowned writer and film director Ilavenil (70) died of a heart attack. Karunanidhi's story Uliyin Osai was directed by Uliyin Osai. He has also written several books.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X