• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

மனோரம்மான்னா நடிகை இல்லைங்க.. அது ஒரு உணர்வு.. ஆறுதல்!

Google Oneindia Tamil News

சென்னை: "ஆச்சி".. இது ஜாதிப் பாசத்திலோ அல்லது ஊர்ப் பாசத்திலோ வைத்த பெயர் அல்ல.. மாறாக மிகப் பெரிய உணர்வு இதில் மறைந்து பொதிந்து கிடக்கிறது.

சுருக்குப் பையுடன் வீட்டுக்கு வீடு ஒரு பாட்டி இருப்பாங்க.. அந்த மாதிரிதான் நம்ம மனோரமா ஆச்சியும். அவரை ஒரு சாதாரண நடிகை, சாதனை படைத்த நடிகை என்று கடந்து போய் விட முடியாது.. நம்மோடு எப்போதும் இருக்கும் நம்ம வீட்டுப் பெண்மணியாகத்தான் அவரைப் பார்க்க முடிகிறது.. அத்தகைய தாக்கத்தை ஏற்படுத்திய பெரும் பெண்மணி மனோரமா.

ஒரு பாட்டியாக, ஒரு அம்மாவாக, ஒரு சகோதரியாக.. நமக்கு என்ன உணர்வு தோன்றுகிறதோ.. அந்த உணர்வுக்குள் வந்து அழகாக அமர்ந்து கொள்பவர் மனோரமா. எத்தனையோ பேர் இருக்கிறார்கள்.. ஆனால் அவர்கள் அனைவருமே இப்படி உணர்வுகளை உருவகப்படுத்த முடியாது. மனோரமாவுக்கு மட்டுமே அந்த "சவுகரியம்" இருந்தது.

பாசக்கார ஆச்சி

பாசக்கார ஆச்சி

மனோரமாவின் நடிப்பைப் பார்த்து வியந்து அவரது மடியில் போய் படுத்துக் கொள்ள முடியுமா என்று தவித்த உள்ளங்கள் அதிகம் இருக்கும். அவரது தோளில் சாய்ந்து அவரிடமிருந்து ஆறுதல் வார்த்தையைப் பெற மாட்டோமா என்று ஏங்கிய உள்ளங்கள் அதிகம். அவரது முந்தானையைப் பிடித்துக் கொண்டு கூடவே இருக்க முடியாதா என்று ஏங்கிய மனசுகள் ஏராளம்.. அப்படி ஒரு பிடிப்பு மிக்க பாசக்காரி மனோரமா.

நடிப்பு ராணி

நடிப்பு ராணி

ஆம்பளைக்கு ஆம்பளையாக, பொம்பளைக்கு பொம்பளையாக வெளுத்துக் கட்டியவர் மனோரமா.. நாகேஷ் ஒரு யானை.. அந்த யானையை மிஞ்சிய நடிப்பைக் கொடுக்க வேண்டும் என்றால் எப்படிப்பட்ட திறமை இருக்க வேண்டும். அது மனோரமாவிடம் இருந்தது. நீ என்னதான் நடி.. நான் அடிக்கிறேன் பாரு பல்டி என்று சவால் விட்டு டஃப் கொடுத்து கலக்குவார் மனோரமா. ஒவ்வொரு சீனிலும் இருவருக்கும் அப்படி ஒரு போட்டி ஓடிக் கொண்டிருக்கும்.

மயக்கிய மனோரமா

மயக்கிய மனோரமா

சிவாஜி ஒரு சீனில் இருந்தால் அவருடன் யார் இருந்தாலும்.. அவர்கள் யாருமே நம் கண்ணில் பட மாட்டார்கள். காரணம், சிவாஜிதான் அந்த சீனை மொத்தாக தன் வயப்படுத்தியிருப்பார்.. ஆனால் "அடியாத்தி இந்த நாயனத்திலும் அதே சத்தம்தான் வருது.." என்று நீட்டி முழக்கி அவர் பேசி "ஏன்" என்று சிணுங்குவார் பாருங்க.. அப்படியே மனோரமா பக்கம் மொத்த கூட்டமும் சாய்ந்து மயங்கியது.

கருத்தைக் கவர்ந்த கண்ணம்மா

கருத்தைக் கவர்ந்த கண்ணம்மா

அதேபோலத்தான் இந்த "கண்ணம்மா"வும்.. ஒவ்வொரு வீட்டிலும் இப்படி ஒரு கேரக்டரைப் பார்க்கலாம்.. வீட்டினரின் உணர்வுகளை உணர்ந்து, அவர்களின் உறவுகளோடு பின்னிப் பிணைந்து, அவர்களின் ஏற்ற இறக்கத்தில், சந்தோஷம் துக்கத்தில் பங்கெடுத்து அவர்களுக்காகவே வாழும் அற்புத ஜீவன்கள். நிச்சயம் மனோரமா "கண்ணம்மா"வாக நடிக்கவில்லை.. மாறாக பல வீட்டு கண்ணம்மாக்களின் பிரதிநிதியாக பிறவி எடுத்து நிழலோவியாக வாழ்ந்திருந்தார்.

எப்படி நடிக்கணும்

எப்படி நடிக்கணும்

பிக் பாக்கெட்காரியாக நடிக்கணுமா ரெடி.. பிச்சைக்காரியாக வரணுமா ரெடி.. டான்ஸ் ஆடணுமா.. பட்டையைக் கிளப்புவேன். பாடணுமா.. கேட்க நீங்க ரெடியா.. காதலுக்குத் தூது போகணுமா பின்னி எடுப்பேன்.. அழுது புலம்பணுமா அதுக்கும் நான் இருக்கேன்.. எத்தனை எத்தனை கேரக்டர்கள்.. எத்தனை எத்தனை உணர்வுகள்.. எல்லாவற்றையும் ஜஸ்ட் லைக் தட் பிரமாதப்படுத்தி பிரளயமாக உருவெடுத்தவர் மனோரமா.. மிகை நடிப்பாக அவரது எந்த கேரக்டரையும் பார்க்கவே முடியாது.

அசத்திய நடிகை

அசத்திய நடிகை

நடிகன் என்று ஒரு படம்.. சத்யராஜ் உள்ளிட்ட அத்தனை பேரையும் தூக்கிச் சாப்பிட்டிருப்பார் அதில் நடித்த மனோரமா.. பிள்ளைகளிடம் காட்டும் கண்டிப்பு ஒரு பக்கம் மிரட்டலாக இருக்கும் என்றால், அதைத் தாண்டி அந்த கம்பீரத்தையும் விட்டுக் கொடுக்காமல், சத்யராஜ் மீது காட்டும் அந்த காதல்.. அடடா அடடா.. சொக்க வைத்திருப்பார்.. அதையெல்லாம் வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது.. நாமும் சேர்ந்து ஆட்டோமேட்டிக்காவே "ஆன்ட்டி மனோரமா" மீது காதல் கொண்டு விடுவோம்.. அப்படி ஒரு நடிப்பு அது.

கடும் உழைப்பு.. போராட்டம்

கடும் உழைப்பு.. போராட்டம்

சின்ன நடிகரோ, பெரிய நடிகரோ.. மனோரமா கொடுக்கும் உழைப்பும் நடிப்பும் அசாத்தியமானது. அவருக்கெல்லாம் வசனம் எழுதவே தேவையில்லை. சீனை சொல்லி விட்டால் கூட போதும்.. தானாக புகுந்து விளையாடி விடுவார். எத்தனையோ பேரை சிரிக்க வைத்தவர் மனோரமா.. ஆனால் வழக்கம் போலத்தான்.. அவரது வாழ்க்கையின் அடித்தளமும் கூட கஷ்டத்தையும் துயரத்தையும், கண்ணீரையும் போட்டு நிரப்பி வைத்திருந்தது. ஆனால் போடா போடா புண்ணாக்கு என்று அத்தனை துக்கத்தையும் தூக்கிப் போட்டு மிதித்து உயரத்தைத் தொட்டவர் நம்ம ஆச்சி.

மீண்டும் வாங்க ஆச்சி

மீண்டும் வாங்க ஆச்சி

இன்று மனோரமா நம்மிடம் இல்லை.. இன்றுதான் நம்மை விட்டு அவர் பிரிந்து சென்றார்.. ஆனால் இன்றளவும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை.. எப்படி நம்ம "அம்மா"வின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதோ அப்படித்தான் மனோரமாவின் இடமும்.. ஆச்சியின் ஒவ்வொரு நடிப்பும்.. அவர் இன்னும் நம்முடன் இருக்கிறார் என்றுதான் சொல்லிக் கொண்டுள்ளது. முடிஞ்சா இன்னொரு வாட்டி பிறந்து வாங்க ஆச்சி!

English summary
Aachi Manorama's death anniversary today. A small tribute to the versatile acterss who ruled the Tamil cinema for years.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X