சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒழுங்கா கமா போடாட்டி.. ரமேஷ் பொண்டாட்டி சுரேஷ் பொண்டாட்டியாய்ருவா.. தெறி வாத்தியார்கள்!

Google Oneindia Tamil News

சென்னை: டிவி, பேப்பர், வார இதழ் என எதை பார்த்தாலும் குருப்பெயர்ச்சி பலன்கள் தான் இன்னைக்கு ஹாட் டாப். குரு விருச்சிகத்தில் இருந்து தனுசுக்கு மாறப் போகிறார், இதனால் இந்தந்த ராசிகளுக்கு இந்தந்த பலன்கள் கிடைக்கும் என ஆளாளுக்கு ஒரு பட்டியல் வாசிக்கிறார்கள்.

வானில் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் குரு, நம்ம வாழ்க்கையில ஆயிரம் மாற்றங்களை நிகழ்த்தப் போகிறார் என்கிறது ஜோதிட சாஸ்திரம். அதேபோலத்தான் நமக்கு பக்கத்தில் இருந்து நம்மை தலையில் குட்டியும், முதுகில் தட்டியும் கரை சேர்த்துவிட்ட குருமார்களும் நம் வாழ்வில் நிறைய மாற்றங்களுக்கு காரணமாக இருக்கிறார்கள்.

ஒரே ஒரு குருக்கள் வர்ரார்.. வழிவிடுங்கோ.. மாதிரி எத்தனையோ ஆசிரியர்கள் நம் வாழ்வில் வந்திருந்தாலும், ஒரு சிலரை மட்டும் நம்மால் மறக்கவே முடியாது. அந்த ஒரே ஒரு குரு என்றென்றும் நினைவில் நிழலாடிக்கொண்டே இருப்பார். சீரியஸ் வாத்தியார்களுக்கு மத்தியில் நகைச்சுவை உணர்வு மிகுந்த ஆசிரியர்களும் அதிகமாகவே இருக்கின்றனர். காலம்கடந்தும் அவர்கள்தான் பெரும்பாலும் நம் மனதிலும் நிலைத்து நிற்கின்றனர்.

செம வாத்தியார்

செம வாத்தியார்


அந்த மாதிரி, எனக்கு ஒரு கணக்கு வாத்தியார் இருந்தார். எளிதில் புரிந்துகொள்ளும்படி அற்புதமாக சொல்லிக்கொடுப்பார், அதே சமயம் கடைசி பெஞ்ச் மக்குப் பசங்களை அவர் டீல் செய்கிற விதமே அலாதியா இருக்கும். ஒருமுறை பரிட்சைக்கு முதல் நாள் கணித வகுப்பு நடந்துகொண்டிருந்தது. சார், இந்த கணக்கு எனக்கு சுத்தமா ஒன்னுமே புரியலை என்றான் என் பக்கத்தில் இருந்த நண்பன். இப்படி பக்கத்தில வா என்று கூப்பிட்ட வாத்தியார், நீ மாம்பலம் போயிருக்கிறீயா என்று கேட்டார். போயிருக்கிறேன் சார் என்றான்.

நல்லா பாரு தெரியுதா

நல்லா பாரு தெரியுதா

மாம்பலம் ரயில்நிலைய நடைமேம்பாலத்தில் நின்று கொண்டு, ரங்கநாதனை தெருவை பார்த்தால் எப்படி இருக்கும்? ஒரே தலைகளாதான் தெரியும். அந்த இடத்தில என்னை கொண்டுபோய் நிற்க வெச்சுட்டு, ரங்கநாதன் தெரு கூட்டத்திற்குள் என் மனைவியை நிற்க வெச்சா, தூரத்தில இருக்கிற கூட்டத்தை உற்றுப் பார்த்துட்டு அதோ இருக்கிறா என் பொண்டாட்டின்னு கரெக்டா சொல்லிருவேன். எப்படி தெரியுமா? ஏன்னா, நான் அவ கூட இத்தனை வருஷம் வாழ்ந்திருக்கேன். அதேமாதிரி இந்த கணக்குகூட நீ முன்ன பின்ன வாழ்ந்திருக்கணும். நாளைக்கு பரீட்சையை வெச்சிகிட்டு இன்னைக்கு புக்கை திறந்து பார்த்தீனா உனக்கு எப்படி புரியும், என்று கேட்டபடியே மண்டையை பிடித்து இடதும் வலதுமாக மாவாட்டினார். இதுக்கு அப்புறம் எவனாவது டவுட் கேட்பான்னு நினைக்கிறீங்க?

கமா போடாட்டி

கமா போடாட்டி

எங்க இங்கிலீஷ் வாத்தியார் ரொம்ப வித்தியாசமான ஆளு. அவர் எடுப்பதை இங்கிலீஷ் வகுப்பு என்று சொன்னால், இதை இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது என்பார்களே, அப்படித்தான் இருக்கும். ஏன்னா அவருக்கே இங்கிலீஷ் அரைகுறையா தான் தெரியும். ஆனாலும் தம் கட்டி சமாளிச்சு, பாடத்தை முடிச்சிருவார். எங்களுடையது கிராமங்கள் கலந்த ஒரு நடுத்தர நகரம் போன்ற ஊர். அங்கு நுனிநாக்கு ஆங்கில வாத்தியார்கள் எல்லாம் அப்போது கிடையாது. ஒருமுறை இங்கிலீஷ் சார் இலக்கண பாடம் எடுத்தார். வழக்கமான இலக்கணம் பற்றி வகுப்பெடுத்தவர், பேச்சு மேல இப்பல்லாம் பசங்க நிறைய பேர் Punctuations-ஐ சரியா பயன்படுத்துறதே இல்லை. Punctuations எவ்ளோ முக்கியம் தெரியுமா, உதாரணத்திற்கு Comma-ஐ எடுத்துங்க, காற்புள்ளிதானே அதை போட்டா என்ன போடலைன்னா என்ன என்று நினைக்கிறார்கள். இதுனால எவ்வளவு பெரிய பிரச்னை வரும் தெரியுமா என்றார்.

மாறாமா இருக்கணுமா

மாறாமா இருக்கணுமா

இதை விளக்க ஒரு அற்புதமான உதாரணம் சொன்னார். பிளாக்போர்டில் வரிசையாக சில பெயர்களை எழுதினார். ராமசாமி, முனுசாமி, கிருஷ்ணசாமி, ரமேஷ், சித்ரா சுரேஷ் ஆகியோர் சினிமாவுக்கு போனார்கள் என்று எழுதப்பட்டிருந்ததை, ஒரு மாணவனை அழைத்து வேகமாக படிக்கச் சொன்னார். அவனும் படித்தான். இதில் விஷயம் என்னன்னா, நம்ம வாத்தியார் பெயர் ரமேஷ், அவர் மனைவி பெயர் சித்ரா. சித்ராவுக்கும் அடுத்துள்ள சுரேஷ் என்ற பெயருக்கும் இடையில் Comma போடாததால் சித்ரா சுரேஷ் என்றாகிவிட்டது. இதை விளக்கி சொன்ன நம்ம ரமேஷ் வாத்தியார், பார்த்தீங்களா பசங்களா, ஒரு சின்ன Comma போடாம விட்டதால, என் பொண்டாட்டி சுரேஷ் பொண்டாட்டியாயிட்டா. அதனால யாரெல்லாம் சரியா Comma போடாம விடுறீங்களோ, அவங்க பொண்டாட்டி எல்லாம் அடுத்தவன் பொண்டாட்டி ஆயிடுவாங்க என்று தெறிக்க விட்டார். அதில் இருந்து நாங்கள் எதை மறந்தாலும் Comma போட மறப்பதில்லை. இந்த கட்டுரையில் கூட நல்லா பாருங்க, தேவையான எல்லா இடங்களிலும் மறக்காம Comma போட்டிருப்பேன். அன்று அவர் சொன்னது, இன்றும் பசுமரத்தாணி போல் நெஞ்சில் ஆழமாக பதிந்திருக்கிறது.

சொல்லி அனுப்பு

சொல்லி அனுப்பு

அதேபோல இன்றும் மறக்க முடியாத மற்றொருவர் எங்கள் கெமிஸ்ட்ரி வாத்தியார். எங்கள் பள்ளியின் ரோமியோ, காதல் மன்னன் ஜெமினி கணேசன், காதல் இளவரசன் (ஆரம்ப நாட்களில் உலக நாயகனின் பட்டம் அதுதான்) கமலஹாசன் எல்லாமே அவர்தான். பள்ளிக்கு எந்த இளம் டீச்சர் புதுசா வந்தாலும் நூல்விட்டுப் பார்ப்பார். உடனடியாக புது சட்டை, பேண்ட் எல்லாம் வாங்கிவிடுவார். நீண்ட பரீட்சை ஹாலில் சம்பந்தப்பட்ட டீச்சர் முன்னாடி ரஜினியைப் போல விறுவிறுவென நடந்து மாணவர்களுக்கு கேள்வித்தாள் கொடுப்பது, தலைமுடியை ஸ்டைலாக கோதிவிடுவது, அந்த மிஸ் நம்ம கிளாஸை தாண்டும்போது சாக்பீசை தூக்கிப் போட்டு கேட்ச் பிடிப்பது என எதாவது பெர்ஃபாமன்ஸ் பண்ணிகிட்டே இருப்பார். ஆனால் பாவம் கடைசி வரை யாரும் அவரை கண்டுகொள்ளவில்லை.

செம ரொமான்டிக் லுக்யா

செம ரொமான்டிக் லுக்யா

புதுசா வந்த இளம் டீச்சர்கள் எல்லாம் சில மாதங்களிலேயே தங்களின் கல்யாணப் பத்திரிகையை கொண்டுவந்து நீட்டுவார்கள். அப்ப நம்ம ஆளு கண்ணுல நவரசங்களையும் தேக்கி ஆழமா ஒரு பார்வை பார்த்துட்டு, அவசியம் வர்ரேங்க என்பார்.. அடடா அதைக் காண கண்கோடி வேண்டும். கடைசியில் அவருக்கு ஊரில் சொந்தத்திலேயே ஒரு சுமாரான பெண்ணைப் பார்த்து திருமணம் செய்து வைத்தார்கள். நாங்கள் எல்லாம் போயிருந்தோம். மணமேடையிலும் தன் வழக்கமான ஸ்டைலில் அசத்திக் கொண்டிருந்தார். விரும்பிய வாழ்க்கை கிடைக்காவிட்டால் வரும் வாழ்க்கையை ஏற்று அனுபவிச்சு அம்சமா வாழணும் என வாழ்க்கைப் பாடம் எடுத்தவர் அவர்.

அருமையான ஆசிரியர்கள்

அருமையான ஆசிரியர்கள்

இப்படி நிறைய ஆசிரியர்கள் விதவிதமான அணுமுறைகளால் இன்றும் நெஞ்சில் நிலைத்திருக்கிறார்கள். நான் படித்தது எல்லாம் சிறுநகர பள்ளிகள் என்பதால் மாணவர்கள் கூட்டம் குறைவாகவே இருக்கும். மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பாடத்தை தாண்டியும் நல்ல பரிட்சயமும், நட்பும் இருக்கும். என் அப்பா, அம்மாவை என்னுடைய எல்லா வாத்தியார்களுக்கும் நன்றாகத் தெரியும். இன்று என் பிள்ளைகள் படிக்கும் பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு வகுப்பிலும் 4 அல்லது 5 பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொன்றிலும் சுமார் 50 மாணவர்கள் படிக்கிறார்கள். இந்த 50 பேரின் குடும்ப பின்னணி, தனிப்பட்ட திறன்கள், விருப்பங்கள் எல்லாம் எந்தளவு அந்த ஆசிரியர்களுக்கு தெரியும் என உறுதியாகத் தெரியவில்லை. இவர்களுடைய குரு-சிஷ்ய உறவு எத்தனை ஆழமானதாக இருக்கும் என்றும் தெரியவில்லை. இதிலும் மாணவர்களுடன் கலந்து பழகி, அறிவுடன் அன்பும் சேர்த்து வளர்க்கும் ஆசிரியர்கள் நிறைய பேர் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஆசிரியர்கள் முக்கியம்

ஆசிரியர்கள் முக்கியம்

வீட்டை விட மாணவர்கள் அதிகம் நேரம் செலவிடும் இடம் பள்ளிதான் என்பதால், அங்கிருக்கும் ஆசிரியர்கள் அவர்கள் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் ரொம்பவே ஆழமானது. எனவே அந்த ஆசிரியரை நேரம் கிடைக்கும்போதெல்லாம் நேரில் சந்தித்து உரையாடுவதை பெற்றோர்களும் அவசியமாக கருத வேண்டும். இது உங்கள் பிள்ளைகள் வாழ்வில் மகத்தான மாற்றங்களை ஏற்படுத்த இது மிகவும் உதவியாக இருக்கும்.

- கௌதம்

English summary
Some teachers are there, whom we cannot forget till our life ends.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X