“இருக்கு.. தரமான சம்பவம் இருக்கு..” நாளை துக்ளக் ஆண்டு விழா.. சிறப்பு விருந்தினர் யார் தெரியுமா?
சென்னை: துக்ளக் பத்திரிகையின் 52வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவிருக்கிறார்.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டுவிழா ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் தேதி நடப்பது வழக்கம். இந்தாண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.
இறுகும் பிடி... விக்னேஷ் லாக் அப் மரணம் தொடர்பாக மேலும் 4 காவலர்கள் கைது
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான துக்ளக் ஆண்டு விழா நாளை சென்னையில் நடைபெறவிருக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

துக்ளக் ஆண்டு விழா
ஆண்டுதோறும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெறும் துக்ளக் ஆண்டு விழா இந்த ஆண்டு ஒத்திவைக்கப்பட்டது. ஜனவரி மாதம் துக்ளக் ஆண்டு விழா நடத்த திட்டமிடப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக போலிஸார் அனுமதி அளிக்காததால் ஒத்திவைக்கப்பட்டது.
கடந்த 2021ல் நடந்த துக்ளக் ஆண்டுவிழாவில் பா.ஜ.க தேசிய தலைவர் நட்டா சிறப்பு விருந்தினராக வருகை புரிந்தார். துக்ளக் ஆண்டு விழாக்களில் நடிகர் ரஜினிகாந்த், பிரதமர் மோடி, பா.ஜ.க தலைவர் அத்வானி ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

ஆடிட்டர் குருமூர்த்தி
கடந்த ஆண்டு விழாவில் பேசிய துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, உச்சநீதிமன்ற - உயர்நீதிமன்ற நீதிபதிகள் பதவிகளுக்காக அரசியல்வாதிகள் ஆதரவை தேடுகிறார்கள் என்று கூறியிருந்தார். நீதிபதிகள் குறித்த குருமூர்த்தியின் விமர்சனம் சர்ச்சையைக் கிளப்பியது.
பின்னர், நீதிபதிகள் குறித்துப் பேசியதற்கு குருமூர்த்தி வருத்தம் தெரிவித்தார். நீதிபதி பதவிக்கு விண்ணப்பித்தோர் என கூறுவதற்கு பதில், நீதிபதிகள் என்று பேசிவிட்டேன் எனச் சமாளித்தார்.

துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி
அதற்கு முந்தைய ஆண்டில், ரஜினிகாந்த், துக்ளக் ஆண்டு விழாவில் கலந்துகொண்டார். அப்போது பேசிய ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் தி.மு.ககாரன் என சொல்லிவிடலாம். துக்ளக்கை வைத்திருந்தால் அவர் அறிவாளி எனச் சொல்லிவிடலாம் என்றும் பேசியிருந்தார். இந்த விஷயம் அப்போது சமூக வலைதளங்களில் பயங்கர ட்ரெண்ட் ஆனது.

ரஜினி - பெரியார் சர்ச்சை
மேலும் இந்த விழாவில், "1971ல் சேலத்தில் பெரியார், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதாவையும் உடை இல்லாமல் செருப்பு மாலை போட்டு ஊர்வலம் போனார்கள். அதை யாரும் செய்தித் தாளில் போடவில்லை. அதை சோ துக்ளக் அட்டையில் போட்டு கடுமையாக விமர்சித்தார்.
இதனால், அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க அரசுக்கு பெரிய கெட்ட பெயர் வந்தது. இதனால் தி.மு.கவினர் பத்திரிகை பிரதிகளை கைப்பற்றினார்கள். ஆனால் சோ மீண்டும் அச்சடித்து வெளியிட்டார். இப்படி கலைஞரே துக்ளக்கை பிரபலமாக்கினார். அடுத்த இதழிலேயே 'நமது பப்ளிசிடி மேனேஜர் கருணாநிதி' என சோ அட்டையிலேயே வெளியிட்டார்" எனப் பேசினார். இதையடுத்து, உண்மை சம்பவத்தை ரஜினி திரித்து கூறியிருப்பதாக திராவிடர் கழகத்தினர் எதிர்வினை ஆற்றினர்.

நிர்மலா சீதாராமன்
துக்ளக் பத்திரிகையின் 52வது ஆண்டு நிறைவு விழா நாளை சென்னை மியூசிக் அகாடமியில் நடக்கவிருக்கிறது. இந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவிருக்கிறார்.
நிர்மலா சீதாராமன் இந்த விழாவில் அரசியல் நிகழ்வுகள் குறித்துப் பேசுவார் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மத்திய அரசுடன் தமிழ்நாடு கடைபிடிக்கும் மோதல் போக்கு, பல்வேறு விவகாரங்களில் ஆளுநருக்கும் தமிழக அரசுக்கும் இடையேயான பனிப்போர், தருமபுர ஆதீன பல்லக்கு விவகாரம் ஆகியவை குறித்துப் பேசுவார் எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டும் சர்ச்சைகளுக்கும், விவாதங்களுக்கும் பஞ்சமிருக்காது.