ஒன்றிய அரசு இல்லை..! மத்திய அரசு தான்..! திமுக அரசை சீண்டிய சூப்பர் ஸ்டார் ரஜினி..!
சென்னை: திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு செயல்பட்டு வரும் நிலையில், மத்திய அரசை ரஜினி மத்திய அரசு என்றே கூறியிருப்பது திமுகவை சீண்டும் வகையில் இருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.
'இது காட்டுமிராண்டித்தனம்'.. ரஜினி ரசிகர்கள் செயலுக்கு பால் முகவர்கள் சங்கம் கடும் கண்டனம்!

ஒன்றிய அரசான மத்திய அரசு
சட்டப்பேரவை தேர்தலில் திமுக வென்ற பிறகு மத்திய அரசை, ஒன்றிய அரசு என்று குறிப்பிட்டு தமிழக அரசு சார்பிலான அறிக்கைகள் வெளியாக ஆரம்பித்தன. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி, அமைச்சர்கள் வரை அனைவரும் மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர். மத்திய அமைச்சர்களையும் கூட ஒன்றிய அமைச்சர்கள் என்றே தமிழக அரசு சார்பிலான அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் இந்தியா பல மாநிலங்களை ஒன்றடக்கிய ஒரு கூட்டமைப்பு என்று தான் இந்திய அரசியல் அமைப்பில் கூறியிருப்பதாகவும் எனவே மத்திய அரசை இனி ஒன்றிய அரசு தான் என அழைப்போம் என திமுக விளக்கம் அளித்து வருகிறது.

கூட்டணி கட்சிகள் ஆதரவு
மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்கும் திமுகவின் முடிவிற்கு கூட்டணி கட்சிகளும் முழு ஆதரவை தெரிவித்தன. விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற கட்சிகளும் கூட மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே அழைக்க ஆரம்பித்தன. திமுக ஆதரவு ஊடகங்களான கலைஞர் தொலைக்காட்சி, முரசொலி போன்றவற்றிலும் மத்திய அரசு என்கிற வார்த்தை ஒன்றிய அரசாக மாறின. சமூக வலைதளங்களிலும் திமுகவினர் முழுக்க முழுக்க மத்திய அரசை ஒன்றிய அரசு என்றே கூறி வருகின்றனர்.

அதிமுக எதிர்ப்பு
மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஒன்றிய அரசு என்று மத்திய அரசை கூறுவது இந்திய அரசை சிறுமைப்படுத்துவதற்கு சமம் என்று ஓபிஎஸ் தெரிவித்தார். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று அழைப்பதால் அதன் அதிகாரங்கள் என்ன குறைந்துவிடுமா? இல்லை தமிழக அரசு மத்திய அரசை விட அதிக அதிகாரம் கொண்ட அரசாக மாறி விடுமா என எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். பெயர் மாற்றத்தை தவிர வேறு விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஜெயக்குமார் திமுக அரசுக்கு அறிவுறுத்தினார்.

ரஜினி வாய்ஸ்
இந்த நிலையில் மத்திய அரசு வழங்கும் தாதா சாகேப் பால்கே விருது பெற சென்னையில் இருந்து நடிகர் ரஜினிகாந்த் டெல்லி புறப்பட்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, மத்திய அரசின் தாதா சாகேப் விருது வாங்குவது மிகவும் மகிழ்ச்சி என்று தெரிவித்திருந்தார். அதாவது தான் விருது வாங்குவது மத்திய அரசிடம் இருந்து என்று ரஜினி அழுத்தம் திருத்தமாக கூறியிருந்தார். சர்ச்சையை தவிர்க்க நினைத்திருந்தால், தனக்கு தாதா சாகேப் விருது கிடைப்பது மகிழ்ச்சி என்று ரஜினி கூறியிருக்கலாம், ஆனால் மத்திய அரசிடம்இருந்து கிடைப்பது என கூறியிருப்பதன் மூலம் மத்திய அரசு மத்திய அரசு தான் ஒன்றிய அரசு இல்லை என ரஜினி தனது தரப்பு கருத்தை அழுத்தம் திருத்தமாக பதிவு செய்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது.