நியாயமா இது..சக்கரநாற்காலிக்கு ரூ. 2500 -சென்னை விமான நிலையத்தில் மாற்றுத்திறனாளிக்கு நடந்த சோகம்
சென்னை: விமான போக்குவரத்தின் போது மாற்றுத்திறனாளிகள் சக்கர நாற்காலி பயன்படுத்த ரூ.2500 கட்டணம் வசூலிக்கப்படுவது குறித்து சமூக ஆர்வலர்கள் புகார் அளித்துள்ளனர்.
பங்களாதேஷ் நாட்டை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் தனியார் விமான நிறுவனம் யு.எஸ் -பங்களா ஏர் நிறுவனம். சென்னை விமான நிலையத்தில் இருந்து ராஜீவ் ராஜன் என்ற மாற்றுத்திறனாளி பயணம் மேற்கொண்டார்.
ராஜிவ் ராஜன், மாற்றுத்திறனாளி என்றாலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுத்து, போராடி வருபவர். மாற்றுத்திறனாளிகளின் நல உரிமை ஆர்வலரான ராஜிவ் ரஞ்சனுக்கு சென்னை விமான நிலையத்தில் கசப்பான அனுபவம் நிகழ்ந்துள்ளது.

சென்னை விமான நிலையம்
நேற்று, சென்னை விமான நிலையத்தில் இருந்து யு.எஸ் பங்களா விமானத்தில் பயணம் செய்ய இருந்தார் ராஜிவ் ராஜன். இதற்காக விமான நிறுவன அதிகாரிகளிடம் தனக்கு சக்கர நாற்காலி வழங்க வேண்டும் என்றும், அப்போது தான் விமானத்துக்குள் செல்ல முடியும் என்றும் கூறியுள்ளார். இதற்கு விமான நிறுவன அதிகாரிகள் ராஜிவிடம் கட்டணம் கேட்டிருக்கிறார்கள்.

கட்டணம்
சக்கர நாற்காலி தரவேண்டுமானால் 2500 ரூபாய் பணம் கட்ட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ராஜிவ் திகைத்துப் போனார். சக்கர நாற்காலிக்கு பணம் கட்ட வேண்டும் என்பது மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் செயல் என்று விமான நிறுவன ஊழியர்களிடம் வாதாடினார் ராஜன். இதையடுத்து அவர் கட்டணமாக செலுத்திய பணத்தை திரும்பத்தர முன்வந்தது விமான நிறுவனம்.

மறுப்பு
அந்த பணத்தை வாங்க ராஜன் மறுத்தாலும், அதை திரும்ப கொடுத்துவிட்டு, அதற்கான ரசீதில் ராஜனிடம் கையெழுத்து வாங்கிவிட்டுத் தான் விமானத்தில் அவரை ஏற்றியது விமான நிறுவனம். இந்த செயலால் ராஜிவ் மிகுந்த மனசோர்வுக்குள்ளானார். இதுகுறித்து ராஜிவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சக்கர நாற்காலிக்கு கட்டணம் வசூலிப்பது என்பது, எங்கள் கால்களுக்கு கட்டணம் வசூலிப்பது போன்றது.

உரிமை மீறல்
இது சட்டவிரோதமானது மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் தொடர்பான ஐ.நா. உடன்படிக்கையை மீறுகிறது. இது பணத்தைப் பற்றியது மட்டுமல்ல. மாற்றுத்திறனாளிகளை நீங்கள் எவ்வாறு நடத்துகிறீர்கள் என்பது பற்றியது. இது அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல், இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த விவகாரத்தை எடுத்துச் செல்வேன்'' என்றார்.

விமான சிக்கல்
மனித உரிமைகள் ஆர்வலரான ராஜிவின் மனைவி மீனாட்சி ராஜன் கூறுகையில், ''சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இந்த விஷயத்தை கவனிக்க வேண்டும். விமான நிறுவனங்கள் தரை சேவைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பது மற்றும் இழப்பீடு பெறுவது மோசமானது. RPDA 2016 மற்றும் UNCRPD 2022 உள்ளிட்ட விதிகளிலும் இதுபோன்று கட்டணங்கள் குறித்து இருக்காது'' என்று தெரிவித்துள்ளார்.

விமான நிறுவனம்
இந்த சம்பவம் குறித்து, யுஎஸ் பங்களா ஏர்லைன்ஸின் சென்னை அலுவலகத்தில் உள்ள அதிகாரி கூறுகையில், ''நாங்கள் சர்வதேச விமான நிறுவனம். உள்ளூர் விமான நிறுவனத்திற்கு தரை ஆதரவுக்காக நாங்கள் செலுத்தும் தொகையை தவிர வேறொன்றுமில்லை. இது எங்களுக்கு வருமானம் அல்ல. சக்கர நாற்காலி சேவைகளுக்கு நாங்கள் 35 அமெரிக்க டாலர் வரை செலுத்துகிறோம்" என்றார்.

மத்திய அரசு
கடந்த ஆண்டு அக்டோபரில், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், ஊனமுற்றோர் எளிதாகப் பயணம் செய்வதை உறுதி செய்வதற்காக, விமான நிறுவனங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற விமானப் போக்குவரத்துத் துறை பங்குதாரர்களுக்கான வரைவு வழிகாட்டுதல்களை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி பயணிகள், திட்டமிடப்பட்ட புறப்படுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் அவர்களின் தேவைகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவித்தால், விமானப் போக்குவரத்து நிறுவனம் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும், என மத்திய சிவில் விமான போக்குவரத்து தெரிவித்துள்ளது.