• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

தம்ப்ரி.. மூளை உங்களுக்காக வேலை செய்யுது.. நீங்க மூளைக்காக வேலை செய்றீங்களா?!

|

என்னையா இது தலைப்பு? எடக்கு மடக்கா இருக்கே என்று யோசிக்கிறீர்களா? இப்படி எல்லாம் அடிக்கடி யோசிக்க வேண்டும். அப்போதுதான் மூளை சுறுசுறுப்பா இருக்கும். மூளை சுறுசுறுன்னு இருந்தாதான் வாழ்க்கை பளபளன்னு ஜொலிக்கும். மூளை சுருங்கிருச்சின்னா, வாழ்க்கை வெளங்கினா மாதிரிதான்.

சரி, மேட்டருக்கு வர்ரேன். நம்முடைய உடம்பிலேயே அதி அற்புதமான ஒரு அயிட்டம் மூளை. அது நம்மை கேட்காமலேயே நிறைய விஷயம் செய்யுது. அதை எல்லாம் விலாவாரியா விளக்க ஆரம்பிச்சா விடிஞ்சிரும். சுருக்கமா சொன்னா நம்ம மேல அக்கறை இருக்கிற ஒரு வழிகாட்டி மாதிரி, நல்லது கெட்டது எது என பகுத்து சொல்வது முதல் பல வகைகளிலும் அதுதான் நம்மை வழிநடத்திகிட்டு போகுது. பதிலுக்கு மூளைக்கு நாம என்ன செய்றோம்? மூளைக்கு நாம என்ன செய்ய முடியும், சொல்லுங்க... ஜமாய்ச்சிபுடுவோம் என்று கேட்பவர்களுக்காகதான் இந்த கட்டுரை.

use your brain properly and usefully

மூளையை ஆரோக்கியமா வெச்சிக்கங்க என்பதுதான் சுருக்கமான பதில். இதுக்கு ஆயிரம் வழிகள் இருக்கு. அதுல முக்கியமான சிலதைதான் நாம இப்போ பார்க்க போறோம். மூளை என்ற உறுப்பு எப்படி வேலை செய்யுதுன்னு தெரிஞ்சாதான் அதை எப்படி சிறப்பா பயன்படுத்த முடியும்னு நமக்கு புரியும். மூளை என்பது கோடிக்கணக்கான நியூரான்களின் சிக்கலான நெட்வொர்க். இதைப் பத்தி விரிவா தெரிஞ்சிக்கணும்னு ஆசைப்படுறவங்க சுஜாதா எழுதின தலைமைச் செயலகம் புத்தகத்தை படிங்க. மத்தவங்களுக்கு, எளிமையா சொல்றதுன்னா, மூளை என்பதும் ஒரு தசைதான். உடம்பின் கை, கால் போன்ற தசைப் பகுதிகளை எப்படி தினமும் உடற்பயிற்சி செய்து கட்டுமஸ்தா மாற்ற முடியுமோ, அதேபோல இந்த தசைக்கும் உடற்பயிற்சி அவசியம். ஆனால் பயிற்சி செய்றதால இந்த தசை, அளவுல பெருசா ஆகாது, ஆனால் அதன் ஆற்றல் பலமடங்கு அதிகரிக்க ஆரம்பிச்சுடும்.

'புதுசா' எதைப் பார்த்தாலும் மூளை உற்சாகம் ஆகிவிடும். அதனால்தான் புதிய ஊர்களுக்கு போகும்போது நாம புத்துணர்ச்சியா உணர்கிறோம். அதிரடித் திருப்பங்கள் நிறைந்த சினிமாவோ, புதிய தகவல்கள் அடங்கிய புத்தகமோ நம்மை அதிகம் ஈர்க்குது. புதுசுதாங்க மூளைக்கு நல்ல தீனி. அதனால் தினமும் செய்ற சில விஷயங்களில் முடிந்த வரை புதுசா ஏதாவது ட்ரை பண்ணிகிட்டே இருங்க. தினமும் ஒரே வழியில ஆபிஸ் போறதை மாற்றி, திடீர்னு ஒருநாள் வேற ரூட்ல ஆபிசுக்கு போங்க. சமையல் செய்றதில் ஆர்வம் இருந்தா, புது ரெசிப்பிகளை அடிக்கடி முயற்சி பண்ணி பாருங்க. வழக்கமான ஒன்றை செய்யும் போது, ரிசல்ட் இப்படித்தான் இருக்கும் என்று மூளைக்கு ஏற்கனவே தெரிஞ்சிருக்கும். அதனால் அது பெரிசா ஆர்வம் காட்டாது. ஆனா புதுசா ஒன்றை செய்யும்போது, மூளைக்குள் ரிசல்ட் எப்படி வருமோன்னு ஒரு குறுகுறுப்பு ஓடும். இந்த மாதிரி குறுகுறுப்புகள்தான் மூளையை பட்டை தீட்டும் என்கிறார்கள் நியூரோசயின்டிஸ்கள்.

கம்ப்பேர் பண்ணியே கடுப்பேத்துறாங்களா... கம்ப்பேரிசன் நல்லது பாஸ்..!

மூளையை பற்றி இன்னொரு வதந்தி உலகம் முழுக்க இருக்குது. அதாவது சராசரி மனிதர்கள், மூளையின் செயல்திறனில் 10 சதவீதம் கூட பயன்படுத்துறதில்லை என்பதுதான் அது. பெரிய பெரிய விஞ்ஞானிகள் கூட இந்த 10 சதவீதத்தை தாண்டுறதில்லை என்று ஒரு கதை ரொம்ப காலமா ஓடிக்கிட்டு இருக்கு. ஆனால் விஞ்ஞானபூர்வமா இதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. அதனால பர்சன்டேஜ் பஞ்சாயத்துகளை மறந்துவிட்டு, இருக்கிற மூளையை முடிந்தவரை பயன்படுத்துறது எப்படின்னு பாருங்க.

சின்னசின்ன கணக்குகளுக்கு கூட கால்குலேட்டரையும், செல்போனையும் பார்க்குறதை நிறுத்திடுங்க. கணக்கு போடுறதற்கு எவ்வளவுக்கு எவ்வளவு வெளியில் இருக்கும் கருவிகளை பயன்படுத்துறீங்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு மண்டைக்குள் இருக்கிற மூளைன்ற கருவி மங்கிரும்னு சொல்றாங்க. இப்படியே பழகிட்டா, அப்புறம் சின்ன சின்ன கூட்டல் கணக்கு கூட போட முடியாம அசிங்கமா போயிடும் குமாரு...

use your brain properly and usefully

மூளைக்கான அடுத்த முக்கியமான பயிற்சி "ஆர்வம்". ஆமாங்க, நீங்க எதை எல்லாம் ஆர்வமா பார்க்கிறீங்களோ, கேட்கறீங்களோ, படிக்கிறீங்களோ... அதெல்லாம் அதிக காலம் உங்கள் நினைவில் அப்படியே இருக்குமாம். அதனால்தான் நமக்கு நம்ம ஆளு போன வாரம் வெள்ளிக்கிழமை போட்டுட்டு வந்த சுடிதார் கலர் ஞாபகம் இருக்கும், ஆனால் நாம நேத்தி காலையில சாப்பிட்ட டிபன் என்னன்னு சட்டுனு ஞாபகம் வராது. ஏன்னா, ஆளு மேல இருக்கிற ஆர்வம் அப்படி. இந்த விஷயத்தில் பெண்களை அடித்துக்கொள்ளவே முடியாது. 10 நாளுக்கு முன்னாடி நான் இப்படி சொல்லும்போது, நீ ஏன் மோட்டு வளையை பார்த்தேன்னு 11வது நாள் வந்து சண்டைபோடக் கூடிய வல்லமையும், ஆற்றலும் அவங்களுக்கு மட்டுமே உண்டு. அதனால் தான் திருமணம் ஆன பல பேர் முதன்முதலில் புரபோஸ் பண்ண நாள், முதலில் சினிமாவுக்கு போன நாள், அவ்வளவு ஏன் கல்யாண நாள் கூட நினைவில் இல்லாமல் மனைவியிடம் மரண அடி வாங்குகிறார்கள்.

இதில் இருந்து தப்பிக்கணும்னா நல்லா சாப்பிடுங்க என்கிறார்கள். அடி தாங்குறதுக்கு இல்லீங்க, அடி வாங்காம தப்பிக்கிறதுக்கு வழி சொல்லுங்க என்று நீங்கள் கேட்பது புரிகிறது. நம்ம சாப்பாட்டுக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் எக்கச்சக்கசக்கக்க தொடர்பு இருக்குதாம். ஏன்னா, நாம சாப்பிடுறதுனால கிடைக்கிற மொத்த ஊட்டச்சத்துகள் மற்றும் பிராணவாயுவில கிட்டத்தட்ட 20 சதவீதத்தை மூளையே எடுத்துகிதாம். அதனால், நிறைய பழங்கள், பச்சை காய்கறிகள், ஒமேகா 3 எண்ணெய் அதிகமா இருக்கிற மீன்கள் எல்லாம் அடிக்கடி உணவில் சேர்த்துகிட்டா மூளை ரொம்ப ஆக்டிவா இருக்குமாம்.

அடுத்த முக்கியமான விஷயம், டென்ஷனை குறைங்க என்கிறார்கள். ஷாக்க குறை.. ஷாக்க குறை.. என்று மூளை ஒவ்வொரு நாளும் கதறிகிட்டு கிடக்குதாம். நாம தான் அதை காதுகொடுத்து கேட்பதில்லை. எப்படி டென்ஷனை குறைக்கிறது? ரொம்ப சிம்பிள். நல்ல நல்ல புத்தகங்களை தேர்ந்தெடுத்து படிங்க என்கிறார்கள். ஏன்னா, நல்ல விஷயங்களை படிக்கும்போது, மனசு லேசாகி, மூளை புத்துணர்ச்சி பெறுதாம். நிறைய புத்தகங்கள் படிக்கிற ஆட்களிடம் நடத்திய ஆய்வில் அவர்களிடம் எதிர்மறை எண்ணங்கள் குறைவாக இருப்பதாக தெரிய வந்திருக்குதாம். எதிர்மறை எண்ணம் நமக்குள் தேவையில்லாத பயம், பதட்டம் போன்ற உணர்வுகளை தூண்டுறதால மூளையில் புதிய செல்களின் உற்பத்தி பாதிக்கப்படுதாம். கொழுப்பெடுத்த கோழி மாதிரி நாமலே ஏன் பாய் கடை முன்னாடி போய் பரதநாட்டியம் ஆடணும்? அதனால தேவையில்லாத டென்ஷனை ஏத்திகிட்டு உங்க மூளையை நீங்களே டயர்ட் ஆக்காதீங்க.

மேலே சொன்ன சின்ன சின்ன விஷயங்களை கொஞ்சம் சீரியஸா ட்ரை பண்ணி பாருங்க. அடுத்த ஒருசில வாரங்களில் உங்கள் மூளை முன்பிருந்ததைவிட சுறுசுறுப்பாக இயங்குவதை நீங்களே உணருவீங்க. தொழில்நுட்பம் வேகமா வளர்ந்துகிட்டே போற இன்றைய தேதியில், மூளைதான் மூலதனம் பாஸ். அதனால ஹெல்மட் போட்டு மண்டைய பத்திரமா பாத்துக்கிற மாதிரி, அதுக்குள்ள இருக்கிற மூளையையும் பத்திரமா பார்த்துக்கணும். அப்படி பார்த்துகிட்டா, கஷ்டப்படாம, மகிழ்ச்சியா, வெற்றிகரமா வாழ்றதுக்கான வழியை அது நமக்கு காட்டும்.

- கௌதம்

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
Brain is working for us round the clock, but do we work the brain properly?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more