சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிப்புக்கு வைகோ கண்டனம் - ஜன.11ல் இலங்கை துணைத்தூதரகம் முற்றுகை

இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

சென்னை: இலங்கையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூண் இடிக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவுத்தூண் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து வரும் 11ஆம் தேதி சென்னையில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

Vaiko condemns demolition of Mullivaikkal memorial - Sri Lankan consulate protest on Jan. 11

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கைத் தீவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் எழுப்பப்பட்டு இருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூண் - நினைவு முற்றத்தை இரவு நேரத்தில் விளக்குகளை அணைத்துவிட்டு சிங்கள அரசின் ஏவுதலின் பேரில் ராணுவத்தினர் இடித்துத் தகர்த்துள்ளனர். லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, படுகொலையின் அடையாளங்கள் கூட இருக்கக் கூடாது என்பதற்காக மாவீரர் துயிலகங்களை இடித்தது. இப்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்துள்ளது. இது கொடுமையிலும் கொடுமை ஆகும்.

ஈழத் தமிழர் தாயகத்தில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தி, சிங்கள ராணுவத்தை அங்கே குவித்துள்ள சிங்களப் பேரினவாத அரசு, தமிழ் இனத்தையே நிரந்தர அடிமைகளாக்கி அழித்தொழிக்கும் அக்கிரமத்தை தொடர்கிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சாட்சியாகும்.

உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் கூறிய, ஈழத் தமிழர்களைக் கொன்று குவித்து மண்ணில் புதைத்தாய்; இந்த மண்ணை எங்கே கொண்டுபோய் புதைப்பாய்? என்பதை நினைவில் கொள்வோம். ஈழத் தமிழர்கள், தாய்மார்கள், வயோதிகர்கள், சிறுவர்கள், குழந்தைகள் உட்பட அப்பாவித் தமிழர்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்த கொடுமையும், ஈழத் தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததும் மறுக்க முடியாத உண்மைகளாகும்.

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பிய 48 மணி நேரத்திற்குள் இந்த அராஜகத்தை சிங்கள அரசு செய்துள்ளது. இந்திய அரசு, சிங்கள அரசுடன் கொஞ்சிக் குலாவுவதால் நாம் என்ன செய்தாலும் உலகத்தில் கேள்வி கேட்பார் யார்? என்ற மமதையும், திமிரும் தலைக்கு ஏறி உள்ளது.

தமிழர்கள் சிந்திய ரத்தம் ஈழ மண்ணோடு கலந்திருக்கிறது. ஈழத் தமிழர்களின் எலும்புகள் அந்த மண்ணோடு சேர்ந்துள்ளன. மடிந்த மாவீரர்களின் மூச்சுக் காற்று அங்குதான் உலவுகிறது. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது; நடத்திய இனப் படுகொலைக்கும் எந்தக் கேள்வியும் இருக்காது என்று கோத்தபய ராஜபக்ச அரசு மனப்பால் குடிக்கிறது.

அனைத்துலகத்தின் மனசாட்சி செத்துப்போய் விட்டதா? நடந்த அக்கிரமத்திற்கு இந்திய அரசு கண்டனம் தெரிவிக்காவிடில் கூட்டுக் குற்றவாளியாகவே தொடர்கிறது எனக் குற்றம் சாட்டுவோம். சுதந்திரத் தமிழ் ஈழத்திற்குத் தீர்மானம் போட்ட அதிமுக அரசு என்ன செய்யப் போகிறது?

யாழ் பல்கலைக்கழகத்தில் மீண்டும் நினைவு முற்றமும் நினைவுத் தூணும் அமைக்கப்பட வேண்டும். சிங்கள அரசு நடத்திய இனப்படுகொலைக்கு எதிராக முத்துக்குமார் உள்ளிட்ட 19 வீரத் தமிழர்கள் தீக்குளித்து மாண்டனரே, அந்த நெருப்பு நம்முடைய நெஞ்சிலே பற்றட்டும்.

இலங்கைத் தீவில் கோத்தபய ராஜபக்சவின் அரசு, அனைத்துலக நீதிமன்றக் குற்றக் கூண்டில் நிறுத்தப்பட வேண்டும். நடைபெற்ற அக்கிரமத்தைக் கண்டித்து சிங்கள அரசுக்கு இந்திய அரசு எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும்.

நெஞ்சைப் பதற வைக்கும் இந்தக் கொடிய சம்பவத்தைக் கண்டித்து சென்னையில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தை முற்றுகையிடும் போராட்டம் வருகிற 11 ஆம் தேதி காலை 11 மணிக்கு என்னுடைய தலைமையில் நடைபெறும். தமிழ் உணர்வாளர்கள், ஈழத் தமிழ் உணர்வாளர்கள், மதிமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்று வேதனையோடு வேண்டுகிறேன் என்று வைகோ தெரிவித்துள்ளார்.

English summary
MDMK General secretary Vaiko has strongly condemned the demolition of the Mullivaikkal monument erected at the University of Jaffna in Sri Lanka. Vaiko also said that a protest would be held on the 11th to blockade the Sri Lankan consulate in Chennai, condemning the demolition of the Mullivaikkal memorial.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X