சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

துபாயில் இருந்து கொண்டுவரப்பட்ட 3 இந்தியர் உடல்களை திருப்பி அனுப்புவதா? வைகோ கடும் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: துபாயில் மாரடைப்பால் இறந்ததால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்ட 3 இந்தியர்களின் உடல்களை மத்திய அரசு திருப்பி அனுப்பியதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

விருதுநகர் மாவட்டம், வத்திறாயிருப்பு துரைராஜ், மார்ச் மாதம் 17 ஆம் தேதி துபாயில் இயற்கை எய்தினார். அவரது உடலை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்காக, துபாயில் உள்ள தமிழ் அமைப்புகள் முயற்சிகள் மேற்கொண்டு வந்தனர். அதில் தாமதம் ஏற்பட்டதால், எனக்குத் தகவல் தெரிவித்தனர்.

நான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கும், துபாய் இந்தியத் தூதரகத்துக்கும் தொடர்பு கொண்டேன். அடுத்த நாளே, உடலை அனுப்பி வைப்பதாகத் தகவல் வந்தது.

தமிழர் துரைராஜ் உடல்

தமிழர் துரைராஜ் உடல்

இதிகாட் வான் ஊர்தியின் சரக்கு வான் ஊர்தியில், துரைராஜ் உடல் சென்னைக்கு வருவதாகத் தகவல் தெரிவித்தனர். அதனால், மகராஜபுரத்தில் இருந்து துரைராஜ் உறவினர்கள், உடலைப் பெறுவதற்காக வேனில் புறப்பட்டு வந்தனர். அதற்கு வாடகையாக ரூ 35,000 பேசி இருந்தனர். திண்டிவனம் அருகில் அவர்கள் வந்துகொண்டு இருந்தபொழுது, துரைராஜ் உடல் இன்று வரவில்லை, இன்னும் இரண்டு நாள்கள் கழித்துத்தான் வரும் என்று சொன்னார்கள். எனவே, துரைராஜ் குடும்பத்தினர் சென்னை எழும்பூரில் இம்பீரியல் விடுதியில் தங்குவதற்கு ஏற்பாடு செய்தேன்.

விருதுநகர் திரும்பிய உறவுகள்

விருதுநகர் திரும்பிய உறவுகள்

இதற்கு இடையில், மீண்டும் தொடர்புகொண்ட இதிகாட் வான்ஊர்தி நிறுவனத்தார், அடுத்த இரண்டாவது நாள் வரும் என்பதற்கும் உறுதி சொல்ல முடியாது எனத் தகவல் தெரிவித்தனர்.எனவே, துரைராஜ் குடும்பத்தார், நாங்கள் ஊருக்குச் செல்கிறோம், தகவல் கிடைத்தவுடன் வருகிறோம் எனக் கூறி விட்டுச் சென்றனர். இது தொடர்பாக, இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் மீண்டும் தொடர்புகொண்டு விளக்கம் கேட்டபோது, இந்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து ஒரு புதிய ஆணை வந்துள்ளது. அதன்படி, மறு உத்தரவு வரும்வரை, இறந்தவர்களின் உடல்களை இந்தியாவுக்குக் கொண்டு வரக்கூடாது என்று கூறி இருக்கின்றார்கள்.

ஆவணம் தாமதம்

ஆவணம் தாமதம்

இன்று மாலை மூன்று உடல்கள் வருவதாக இருந்தது. இரண்டு உடல்கள்தான் வந்தன. துரைராஜ் உடலை, இந்தியத் தூதரகம் மருத்துவமனையில் இருந்து விடுவித்து, துபாயில் இதிகாட் வான் ஊர்தி நிறுவனத்திடம் ஒப்படைத்து விட்டார்கள். ஆனால், துபாய் காவல்துறையில் இருந்து வர வேண்டிய ஒரு ஆவணம், உரிய நேரத்தில் கைக்கு வராததால், துரைராஜ் உடலை மட்டும் அனுப்பவில்லை விளக்கம் அளித்தனர். இந்த நிலையில், துபாயில் இருந்து சென்னை வழியாக தில்லிக்கு வந்த, மாரடைப்பால் இறந்துபோன வட இந்தியத் தொழிலாளர்கள் கமலேஷ் பட், சஞ்சீவ் குமார், ஜக்சீர்சிங் ஆகிய மூன்று பேர்களது உடல்களை, தில்லி வான் ஊர்தி நிலையத்தில், வான் ஊர்தி நிலையத்தில் இருந்து இறக்க விடாமல், இந்திய அரசு திரும்பவும் துபாய்க்கு அனுப்பிய செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், மனவேதனையும் அளிக்கின்றன.

ஆறுதலே சொல்ல முடியாது

ஆறுதலே சொல்ல முடியாது

தங்களது மனைவி, பிள்ளைகளை எதிர்கால நல்வாழ்விற்காக, அவர்களை விட்டுப்பிரிந்து, வளைகுடாவில் உள்ள வெப்ப நாடுகளில் தங்கள் உடலை உருக்கிப் பாடுபடுகின்றவர்கள், மாரடைப்பாலும், விபத்துகளாலும் திடீரென இறந்து விடுகின்றார்கள். அப்படி ஆண்டுதோறும், ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் இறந்து விடுகின்றார்கள். அவர்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடுகின்றது. தங்களது கணவன், தந்தையின் உடலைப் பார்க்க முடியாமல் அவர்களது குடும்பத்தார் அழுது புலம்புவது ஆறுதல் சொல்ல முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், துபாயில் இருந்து இந்தியாவுக்கு வந்த மூன்று பேர்களது உடலைத் திருப்பி அனுப்பியது, ஈவு இரக்கம், மனிதாபிமானம் அற்ற கொடுஞ்செயல் ஆகும்.

மாரடைப்பால் மரணம்

மாரடைப்பால் மரணம்

அவர்கள் கொரோனா பாதிப்பில் இறக்கவில்லை. மூவருமே மாரடைப்பால் இயற்கை எய்தியவர்கள். அவர்களது உடலைத் திருப்பி அனுப்பியதற்காக, அமீரக அரசு, கண்டனம் தெரிவித்து இருக்கின்றது. இத்தகைய செயல், இந்தியாவில் இதுவே முதன்முறை ஆகும். இதிகாட் நிறுவனம், உடல்கள் திரும்பி வந்ததற்கான கட்டணத்தையும் கேட்பதாகச் செய்திகள் வந்துள்ளன.

இந்திய அரசு அலட்சியம்

இந்திய அரசு அலட்சியம்

இறந்தவர்களுக்கு வழங்க வேண்டிய இறுதி மரியாதையை இந்திய அரசு புறக்கணித்து, கேவலப்படுத்தி இருக்கின்றது. இந்திய அரசின் இந்தச் செயல், உலக அளவில் தலைக்குனிவை ஏற்படுத்தி இருக்கின்றது. இத்தகைய தடை நடவடிக்கையை, இந்திய அரசு உடனே கைவிட வேண்டும் என வலியுறுத்துவதுடன், திருப்பி அனுப்பப்பட்ட மூன்று உடல்களையும், வத்றாயிருப்பு மகராஜபுரம் துரைராஜ் உடலையும், மனிதாபிமானத்தின் அடிப்படையில் இந்தியாவுக்குக் கொண்டு வந்து, குடும்பத்தாரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General Secretary Vaiko and Rajyasabha Vaiko has condemened that 3 bodies of UAE expats returned from Delhi airport.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X