சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்களா? வைகோ கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு புதிய உரிமங்களை மத்திய அரசு வழங்கியுள்ளதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: காவிரிப் படுகை மாவட்டங்களில் சுமார் 6 ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களைச் செயற்படுத்த 2018-ஆம் ஆண்டு அக்டோபரில் மத்திய அரசு வேதாந்தா குழுமம் மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது. இத்திட்டங்களுக்காக வேதாந்தா குழுமம் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாயும், ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 5 ஆயிரத்து 150 கோடி ரூபாயும் முதலீடு செய்ய இருக்கின்றன.

காவிரிப் படுகையில் மொத்தம் 341 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி மேற்கண்ட நிறுவனங்கள் விண்ணப்பித்தன. இதில் முதற்கட்டமாக 274 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்தது. இரண்டாம் கட்டமாக 104 ஹைட்ரோ கார்பன் கிணறுகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி கேட்டு 2019, ஜூனில் விண்ணப்பிக்கப்பட்டன. தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரிப் படுகை மாவட்டங்களைச் சூறையாடக் கூடிய மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு உள்ளிட்ட திட்டங்களை மத்திய அரசு செயற்படுத்தக் கூடாது என்று 2019, ஜூலை 26-ஆம் நாள் மாநிலங்களவையில் கடும் கண்டனம் செய்தேன்.

ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில்

ராஜ்யசபாவில் மத்திய அரசு பதில்

பின்னர் 2019, டிசம்பர் 5-ஆம் நாள் ஹைட்ரோ கார்பன் திட்டம் தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் நான் எழுப்பியபோது, அதற்கு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதில் அளித்தார். "காவிரி வடிநிலப் படுகையில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 37 இடங்களில் ஹைட்ரோ கார்பன் கிணறுகளை அமைக்க உள்ளது. மொத்த நிலப்பரப்பு 0.83 சதுர கிலோ மீட்டர் ஆகும். 15 இடங்களுக்குச் சுற்றுச்சூழல் துறையின் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 15 கிணறுகள் விளைநிலங்களின் மீது தோண்டப்படுகின்றன. அதை எதிர்த்தும், சுற்றுப்புறச் சூழல் கேடுகள் குறித்தும் அப்பகுதி மக்களும், பல அமைப்புகளும் கவலை தெரிவித்துள்ளனர். அந்தப் பிரச்சினைகள் குறித்து அதற்குரிய அதிகாரிகளிடம் கருத்து கேட்கப்படும்; சட்டங்கள். விதிமுறைகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்களின்படி தீர்வு காணப்படும்," என அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்திருந்தார்.

காற்றில் பறந்த வாக்குறுதி

காற்றில் பறந்த வாக்குறுதி

ஆனால், அமைச்சரின் வாக்குறுதியைக் காற்றில் பறக்க விட்டுவிட்டு, மத்திய அரசு 2020, ஜனவரியில் ‘ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் கருத்து கேட்கத் தேவையில்லை' என்று உத்தரவு பிறப்பித்தது. காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் விவசாயிகளும் பொது மக்களும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராகக் கொந்தளித்து போராடி வந்தனர். இதன் விளைவாக தமிழக அரசு காவிரிப் படுகைப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, 2020, பிப்ரவரி 20-ஆம் நாள் சட்டமன்றத்தில் ஒரு சட்ட முன்வரைவை நிறைவேற்றியது. இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் உள்ளிட்ட இயற்கை எரிவாயுத் திட்டங்களுக்கான ஆய்வு, துரப்பணம், பிரித்தெடுத்தல் ஆகியவற்றுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தொழிற்சாலைகள் அமைக்கவும் தடை விதிக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

அன்று அரசாணை ரத்து

அன்று அரசாணை ரத்து

தமிழக அரசின் இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என்று நான் 2020, பிப்ரவரி 21-இல் விடுத்த அறிக்கையில் கோரி இருந்தேன். மேலும், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை எண். 29 ஏன் ரத்து செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தேன். எனது அறிக்கை ஏடுகளில் வெளியான மறுநாள் பிப்ரவரி 22, 2020-இல் தமிழக அரசு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தது.

அன்று அரசாணை ரத்து

அன்று அரசாணை ரத்து

தமிழக அரசின் இந்தப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலச் சட்டம் நிறைவேற்றப்பட்டபோது, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஹைட்ரோ கார்பன் திட்டங்களை தமிழக அரசு ரத்து செய்வதற்கு மத்திய அரசிடம் அழுத்தம் தர வேண்டும் என்று நான் 2020, பிப்ரவரி 21-இல் விடுத்த அறிக்கையில் கோரி இருந்தேன். மேலும், காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் 45 கிராமங்களில் 57 ஆயிரத்து 500 ஏக்கர் விளைநிலங்களைக் கையகப்படுத்தி அவற்றில் பெட்ரோலிய இரசாயனம் மற்றும் பெட்ரோலிய இரசாயனப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு 2017, ஜூலை 19-ஆம் நாள் தமிழக அரசு பிறப்பித்த குறிப்பாணை எண். 29 ஏன் ரத்து செய்யப்படவில்லை என்று கேள்வி எழுப்பி இருந்தேன். எனது அறிக்கை ஏடுகளில் வெளியான மறுநாள் பிப்ரவரி 22, 2020-இல் தமிழக அரசு கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ரூ. 92 ஆயிரம் கோடி முதலீட்டில் பெட்ரோலிய இரசாயன முதலீட்டு மண்டலம் அமைக்க வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்தது.

ஆழ்கடலில் அனுமதி

ஆழ்கடலில் அனுமதி

இந்நிலையில் தற்போது மத்திய அரசு காவிரிப் படுகையை ஒட்டிய ஆழ்கடல் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்குப் புதிதாக மீண்டும் உரிமம் வழங்கி இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக விளைநிலப் பகுதிகளிலும் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க உரிமங்கள் அளிக்கப்படும். வேதாந்தா குழுமம் போன்று பெரு நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் ஆபத்து உருவாகும். மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டங்களில் இதற்காகவே திருத்தங்களைக் கொண்டு வந்திருக்கிறது. தமிழக அரசு காவிரிப் படுகைப் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த பின்னரும் மத்திய அரசு ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்குப் புதிய உரிமங்களை அளிப்பது கண்டனத்துக்கு உரியதாகும். தமிழக முதல்வர் ஹைட்ரோ கார்பன் திட்டங்கள் குறித்த தமிழக அரசின் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.

ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்க

ஹைட்ரோகார்பன் திட்டங்களை ரத்து செய்க

ஹைட்ரோ கார்பன் திட்டங்களை அனைத்தையும் ரத்து செய்திட அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். தமிழக வேளாண் மண்டலத்தை ஹைட்ரோ கார்பன் மீத்தேன் மண்டலமாக்கும் மத்திய அரசு நாசகார திட்டத்தை கடுமையாக எதிர்க்கும் கடமையை தமிழக அரசு செய்யத் தவறிவிட்டது. முதுகெலும்பற்ற அரசுதான் தமிழக அரசு என்பதால் கைகட்டி சேவகம் செய்து, மத்திய அரசின் காலடியில் சுயமரியாதையை அடகு வைத்துவிட்டது. மத்திய அரசால் ஏற்பட இருக்கும் கேடுகளுக்கு அதிமுக அரசே பொறுப்பு ஏற்க வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General Secretary and Rajyasabha MP Vaiko has condemned that the new HydroCarbon projects in Deep sea.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X