• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

'நீட்' போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பிலும் கோட்டை விடாதீங்க... எடப்பாடிக்கு வைகோ அட்வைஸ்

|

சென்னை: கடலூர், நாகையில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கான தமிழக அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்றும் நீட் விவகாரத்தைப் போல பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்பிலும் கோட்டை விடகூடாது என்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்திற்கான கருத்து உரு 2011 இல் வெளியிடப்பட்டபோது, அதற்கு முதன் முதலில் எதிர்ப்புக் குரல் எழுப்பியவர் நினைவில் வாழும் இயற்கை அறிஞர் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார் அவர்கள் ஆவார். அவரைத் தொடர்ந்து மீத்தேன் திட்டத்தை திரும்பப் பெறக் கோரி முதன் முதலில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பில் நான் அறிக்கை வெளியிட்டேன்.

2012 ஏப்ரல் 30 ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டம், ஒகேனேக்கலில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில், விவசாயிகளைத் திரட்டி என் தலைமையில் நடத்தப்பட்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசின் வஞ்சகத் திட்டத்தை முறியடிக்கவும், காவிரி படுகை மாவட்டங்களில் மீத்தேன் திட்டத்தை செயல்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினோம். 2014 நவம்பர் 22 இல் டெல்டா பகுதி விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சாலை மறியல், இரயில் மறியல் போராட்டத்தை முன்னெடுத்தார்கள். தஞ்சையில், என் தலைமையில் இரயில் மறியில் போராட்டம் நடைபெற்றது.

காவிரிப் படுகை மாவட்டங்களில் மீத்தேன் நாசகாரத் திட்டங்களின் பேரழிவு ஆபத்துகளை எடுத்து உரைத்து விவசாயிகள், பொதுமக்களிடையே கருத்துப் பரவலுக்காக, தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 2014 டிசம்பர் 14 தொடங்கி, ஒரு மாத காலம் விழிப்பு உணர்வுப் பிரச்சாரத்தை நான் மேற்கொண்டேன். அதனால், பொதுமக்களும், விவசாயிகளும் போராடத் தலைப்பட்டவுடன், மீத்தேன் திட்டத்திற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டு இருந்த கிரேட் ஈஸ்டன் எனர்ஜி கார்ப்ரேஷன் நிறுவனம், தஞ்சையில் இருந்த தனது அலுவலகத்தை மூடிவிட்டு வெளியேறியது.

காவிரி படுகையில் கோரிக்கை

காவிரி படுகையில் கோரிக்கை

காவிரிப் படுகை மாவட்டங்களில் நான் கட்சிக்கொடி கட்டாமல் மீத்தேன் எதிர்ப்பு விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டபோது, அரசியல் கட்சிகளின் எல்லைக்கோடுகளைத் தாண்டி அனைவரும் ஆதரவு அளித்தனர். மீத்தேன் நாசகாரத் திட்டத்தை திரும்பப் பெற்றுக்கொண்டு, காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களை, வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று வாகனப் பரப்புரைப் பயணத்தில் நான் எடுத்து உரைத்தேன். பின்னர் இந்தக் கோரிக்கை விவசாயிகள், பொதுமக்களின் குரலாக ஒலித்தது.

முற்றுகைப் போரில் நான்

முற்றுகைப் போரில் நான்

காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் தடுப்பு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகத்தின் திட்டத்தை முறியடிக்கவும், காவிரிப் படுகை மாவட்டங்களைப் பாலை மணலாக்கும் நாசகார மீத்தேன் திட்டத்தில் இருந்து சோழ மண்டலத்தைக் காப்பாற்றவும் 2015 ஜனவரி 20 ஆம் நாள், தஞ்சையில் என் தலைமையில் காவிரி பாதுகாப்பு இயக்கம் உருவானது. அதில் ஆளும் கட்சி தவிர அனைத்து அரசியல் கட்சிகள், விவசாய சங்கங்கள், சமூகநல இயக்கங்கள் உள்ளிட்ட 250க்கும் மேற்பட்ட அமைப்புகள் பங்கேற்று, தஞ்சை பிரகடனம் தீர்மானமாக வெளியிடப்பட்டது. காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்கவும், மீத்தேன் நாசகாரத் திட்டத்தை விரட்டவும், 2015 பிப்ரவரி 18 ஆம் தேதி தஞ்சை, நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், ஈரோடு, சேலம், நாமக்கல், தருமபுரி, கடலூர் ஆகிய காவிரியால் பயன்பெறும் 14 மாவட்டங்களில் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. தஞ்சையில் நடந்த முற்றுகைப் போரில் நான் பங்கேற்றேன்.

பசுமை தீர்ப்பாய வழக்குகள்

பசுமை தீர்ப்பாய வழக்குகள்

பின்னர் இதே கோரிக்கையை முன்வைத்து, சென்னையில் மத்திய அரசின் சுங்க அலுவலகம் முற்றுகைப் போராட்டம், 2015 மார்ச் 11 ஆம் நாள் எனது தலைமையில் எழுச்சியுடன் நடந்தது. மீத்தேன் திட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக் கோரி காவிரிப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில், 2015 ஏப்ரல் 7ஆம் தேதி தஞ்சையில் மனிதச் சங்கிலி அறப்போராட்டம் நடத்தப்பட்டது. அதில் நானும் கைகோர்த்து மீத்தேன் திட்டத்திற்கு எதிராகக் குரல் எழுப்பினேன். தேசிய பசுமைத் தீர்ப்பு ஆயத்திலும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவாயு திட்டங்களால் ஏற்படும் சூழலியல் கேடுகள் குறித்து, 2017 ஆம் ஆண்டில் இருந்து வழக்கில் வாதாடி வருகின்றேன்.

மதிமுக மாநாடுகளில் தீர்மானங்கள்

மதிமுக மாநாடுகளில் தீர்மானங்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய அண்ணா பிறந்த நாள் விழா, 2012 கரூர், 2013 விருதுநகர், 2014 பூவிருந்தவல்லி, 2015 பல்லடம், 2016 திருச்சி, 2017 தஞ்சை, 2018 ஈரோடு, 2019 சென்னை என அனைத்து மாநாடுகளிலும் ஹைட்ரோ கார்பன், பாறைப் படிம எரிவகாற்று உள்ளிட்ட அழிவுத் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தக்கூடாது; காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கடந்த 2019 ஆண்டு ஜூன் 23 இல் ஹைட்ரோ கார்பன் திட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும், காவிரி டெல்டாவை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கக் கோரியும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதல் இராமேஸ்வரம் வரை 596 கிலோ மீட்டர் தொலைவுக்கு நடைபெற்ற மனிதச் சங்கிலி அறப்போராட்டத்தில் இலட்சக்கணக்கான மக்கள் அணிவகுத்தனர். மரக்காணத்தில் நடந்த மனிதச் சங்கிலியில் நானும் தோழமைக் கட்சிகளின் முன்னணியினருடன் பங்கேற்றேன்.

மத்திய அரசு பிடிவாதம்

மத்திய அரசு பிடிவாதம்

புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் மக்களின் இடையறாத போராட்டங்களால் காவிரிப் படுகை மாவட்டங்களில் மக்களின் பேரெழுச்சி பன்மடங்கு பெருகியது. தமிழக மக்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்திய மத்திய பா.ஜ.க. அரசு, ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம் என்று ஓ.என்.ஜி.சி., மற்றும் வேதாந்தா குழுமம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போட்டது. அதுமட்டும் அன்றி, இத்திட்டத்தைச் செயல்படுத்த பொதுமக்களின் கருத்துக் கேட்புக் கூட்டம் நடத்தத் தேவை இல்லை; சுற்றுச் சூழல் அனுமதியும் பெற வேண்டியது இல்லை என்று மத்திய அரசு அறிவித்தது. கடந்த 2019 டிசம்பர் 5 ஆம் தேதி நாடாளுமன்றத்திலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து நான் கேள்வி எழுப்பினேன்.

பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

பிரகாஷ் ஜவடேகர் அறிவிப்பு

கடந்த பிப்ரவரி 5 ஆம் நாள், குடியரசுத் தலைவர் உரை மீதான கருத்துப் பரிமாற்றங்களின் போது, "தமிழகத்தின் வளங்களை, குறிப்பாக காவிரிப் படுகையைச் சூறையாடுகின்ற முயற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றீர்கள்; காவிரிப் படுகையில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தைச் செயல்படுத்த முனைகின்றீர்கள்; மரக்காணத்தில் இருந்து வேளாங்கண்ணி வரையிலும், 324 ஹைட்ரோ கார்பன் கிணறுகளைத் தோண்டுவதற்கு உரிமம் அளித்து இருக்கின்றீர்கள்; மீத்தேன், சேல் கேஸ், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்காக, நிலத்தை உடைத்துத் துளைத்துப் பிளக்கின்றீர்கள். (Hydro Fracturing) இது காவிரி பாசனப் படுகையை அழித்து விடும். இத்தகைய முறை, அமெரிக்காவின் ஏழு மாநிலங்களிலும், ஐரோப்பியக் கண்டத்தின் பல நாடுகளிலும் தடை செய்து இருக்கின்றார்கள். வெந்த புண்ணில் வேல் சொருகுவது போல, ஹைட்ரோ கார்பான் திட்டங்களை நிறைவேற்ற சுற்றுச்சூழல் ஒப்புதல் தேவை இல்லை; மக்களிடம் கருத்துக் கேட்கவும் மாட்டோம் என அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்து இருக்கின்றார்.

காவிரியில் மேகதாத்உ

காவிரியில் மேகதாத்உ

இது தான்தோன்றித்தனமானது. மற்றொரு புறத்தில், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக, கர்நாடக அரசு காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் புதிய அணை கட்டுவதாக அறிவித்து இருக்கின்றது. அதற்காக, 5900 கோடி ரூபாய் பணத்தையும் ஒதுக்கி இருக்கின்றார்கள்.மேகேதாட்டு அணை கட்டிவிட்டால், அதன்பிறகு மேட்டூருக்கு சொட்டுத் தண்ணீர் வராது" எனத் தெரிவித்தேன். காவிரிப் படுகையை வேளாண் பாதுகாப்பு மண்டலம் ஆக்குவோம் என அறிவித்துள்ள முதல்வர்தான் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் அமைப்பதற்கு கடந்த ஆண்டு அமெரிக்கா சென்று இருந்தபோது, ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்ததில் கையெழுத்திட்டு இருக்கின்றார்.

அரசின் குறிப்பாணை

அரசின் குறிப்பாணை

எடப்பாடி அரசு 2017 ஜூலை 19 ஆம் தேதி வெளியிட்ட குறிப்பு ஆணை (Notification)யில் கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் பெட்ரோலிய முதலீட்டு மண்டலம் (Petrolium, Chemicals & Petrochemical Investment Region -PCPIRs) அமைப்பதற்கு 45 கிராமங்களில் 22938 ஹெக்டேர் அதாவது சுமார் 57ஆயிரத்து 500 ஏக்கர் விளை நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹால்டியா பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவர் புரந்தன்ட் சாட்டர்ஜி, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை பிப்ரவரி 7 ஆம் தேதி சந்தித்து, கடலூர் மாவட்டத்தில் அமைய உள்ள பெட்ரோலிய ரசாயன மண்டலத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்தி இருக்கின்றார்.

சட்டம் இயற்ற வேண்டும்

சட்டம் இயற்ற வேண்டும்

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் நுழைவுத் தேர்வுக்கு விலக்குக் கோரி நிறைவேற்றப்பட்ட சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல், மத்திய பா.ஜக. அரசு தூக்கி எறிந்தது போல முதல்வரின் இந்த அறிவிப்பும் ஆகிவிடக் கூடாது. எனவே, தமிழகச் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றுவது மட்டும் அன்றி, அதை செயல்படுத்திக் காட்டுவதிலும் முனைப்பாக இருக்க வேண்டும். காவிரிப் படுகை மாவட்டங்களை வேளாண் பாதுகாப்பு மண்டலமாக அறிவிப்பதில் தமிழக அரசு உண்மையாகவே அக்கறை கொண்டு இருந்தால், பெட்ரோலிய மண்டலம் அமைப்பதற்கு 2017 ஜூலை 19 இல் வெளியிட்ட அரசின் குறிப்பு ஆணையைத் (எண் 29) திரும்பப் பெற வேண்டும். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

விருப்பமானவரை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி,
இன்றே பதிவு செய்யுங்கள்
- பதிவு இலவசம்!

 
 
 
English summary
MDMK General Secretary Vaiko has demanded that Tamilnadu Govt should withdraw its notification on Petrochemical Hub.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more