சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர் பணி நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பதா? வைகோ எதிர்ப்பு

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணிநேரமாக அதிகரிப்பதற்கு மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்.பி.யுமான வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை:

கொரோனா பேரிடரால் மூடப்பட்டு இருக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பெரும் தொழில் நிறுவனங்களை மீண்டும் இயக்கினால்தான் பொருளாதார நெருக்கடியிலிருந்து நாடு மெல்ல மெல்ல மீட்சி அடைய முடியும். கொரோனா கொள்ளை நோய் பரவல், நாட்டின் 45 கோடி தொழிலாளர்களையும் முடக்கி இருக்கிறது.

வீடியோ கால் செய்து சொன்னார்கள்.. 3700 பேர் பணியிலிருந்து நீக்கம்.. உஃபர் நிறுவனம் ஷாக் நடவடிக்கை!வீடியோ கால் செய்து சொன்னார்கள்.. 3700 பேர் பணியிலிருந்து நீக்கம்.. உஃபர் நிறுவனம் ஷாக் நடவடிக்கை!

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை

தொழில் நிறுவனங்களுடன் ஆலோசனை

வேலை வாய்ப்பு இன்றியும், வருவாயை இழந்தும் தவிக்கின்ற தொழிலாளர் வர்க்கத்திற்கு நம்பிக்கை ஊட்ட வேண்டியதும், தொழிற்சாலைகளைப் படிப்படியாக இயங்கச் செய்வதும் மத்திய, மாநில அரசுகளின் கடமை ஆகும். தொழில் நிறுவனங்கள் செயல்படவும், உற்பத்தி ஆலைகளை இயக்கவும் இந்தியத் தொழில்துறை கூட்டமைப்பு (Confedration on Indian Industries -CII) பிரதிநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்குவார் காணொளியில் கலந்தாய்வுக் கூட்டம் மேற்கொண்டு இருப்பது வரவேற்கத்தக்கது.

வேலை நேரம் அதிகரிப்பு

வேலை நேரம் அதிகரிப்பு

ஆனால் தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதற்கு தொழிலாளர்களின் 8 மணி நேர வேலை நேரத்தை, 12 மணி நேரமாக அதிகரிக்க வேண்டும்; தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும், தொழிற் தகராறுச் சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழிற்சங்கச் சட்டம் மற்றும் தொழிற்சாலைச் சட்டம் உள்ளிட்ட சட்டங்களை முடக்கினால்தான் தொழிற்சாலைகள் சுதந்திரமாக இயக்கப்பட முடியும் என்று தொழிற்துறைக் கூட்டமைப்பின் சார்பில் மத்திய அரசுக்குக் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மத்திய தொழிலாளர் நலத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி, இந்தியா முழுவதும் தொழிற்சாலைகளில் நாளொன்றுக்கு மூன்று தொழிலாளர்கள் உயிரிழப்பதும், 47 பேர் காயமடைவதும் நிகழ்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 கோடி பேர் வேலை இழப்பு

9 கோடி பேர் வேலை இழப்பு

இந்நிலையில், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டால் தொழிலாளர்களின் நிலைமை என்ன ஆகும்? பொருளாதார நெருக்கடியைக் காரணம் காட்டி, தொழில் நிறுவனங்கள் ஆட்குறைப்பு செய்ததால், சுமார் 9 கோடி தொழிலாளர்கள் வேலை இழப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் பணிக்குத் திரும்ப அழைப்பதற்குப் பதிலாக, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரித்து ஊழியர்களைப் பணியில் ஈடுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நியாயமற்றது.

நீர்த்து போக செய்யும் தொழிலாளர் நல சட்டங்கள்

நீர்த்து போக செய்யும் தொழிலாளர் நல சட்டங்கள்

மத்திய பா.ஜ.க. அரசு தொழிலாளர் நலச் சட்டங்களை நீர்த்துப் போகச் செய்யும் வகையில் செயல்பட்டு வருகிறது. தொழிலாளர் வர்க்கம் போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிப்பதும், சட்டபூர்வமான சலுகைகளை மறுப்பதும் தொடர்ந்துகொண்டிருக்கும் சூழலில், கொரோனா பேரிடரை காரணம் காட்டி, தொழிலாளர்களின் பணி நேரத்தை 12 மணியாக அதிகரிப்பதும், தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளிப்பதும், தொழிலாளர் வர்க்கத்த்திற்கு இழைக்கப்படும் அநீதியாகும். எனவே மத்திய அரசு, இத்தகைய தொழிலாளர் விரோத கோரிக்கைகளை நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

English summary
MDMK General Secretary and Rajya Sabha MP Vaiko has opposed to Ordinances on Exemption from Labour Laws.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X