சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பாலாற்றின் குறுக்கே ஆந்திராவின் தடுப்பணைகள்... தமிழக அரசு மெத்தனம்- வைகோ கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: பாலாற்றின் குறுக்கே ஆந்திரா தடுப்பணைகள் கட்டும் விவகாரத்தில் தமிழக அரசு மெத்தனப் போக்குடன் நடந்து கொள்வதற்கு மதிமுக பொதுச்செயலரும் ராஜ்யசபா எம்.பி,.யுமான வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தின் வட மாவட்டங்களான வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும், சுமார் 4.25 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களுக்கு பாசன ஆதாரமாகவும் பாலாறு விளங்குகிறது. கர்நாடக மாநிலத்தில் தோன்றும் பாலாறு, 93 கி.மீ. தொலைவு கர்நாடகத்திலும், ஆந்திர மாநிலத்தில் 33 கி.மீ. தொலைவும் பாய்ந்து, தமிழ்நாட்டில் 233 கி.மீ. தொலைவுக்குப் பாய்ந்து பின்னர் வங்கக் கடலில் கலக்கிறது.

1892 ஆம் ஆண்டு சென்னை - மைசூர் மாகாணங்களுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் 7ஆவது அட்டவணையில் குறிப்பிட்டபடி, பாலாறு பாயும் மாநிலங்களுக்கிடையே முன் அனுமதி பெறாமல் எவ்வித புதிய அணை கட்டுமானங்களோ, அணை தொடர்பான பணிகளோ மேற்கொள்ளக் கூடாது. ஆனால், பாலாற்றின் குறுக்கே கர்நாடக அரசு கோலார் மாவட்டத்தில் பேத்தமங்கலம், ராம்சாகர் ஆகிய இடங்களில் பெரிய தடுப்பு அணைகள் கட்டி பாலாற்று நீரைத் தடுத்தது. அதன் பின்னர் ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி வழியாக வேலூர் மாவட்டத்திற்குள் நுழையும் பாலாற்று நீரை ஆந்திர அரசு மொத்தம் 22 தடுப்பு அணைகள் கட்டி தடுத்தது.

ஆந்திர அரசு 2006 ஆம் ஆண்டிலேயே சித்தூர் மாவட்டம், குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றில் ரூ.320 கோடி செலவில் பெரிய தடுப்பு அணையைக் கட்டத் திட்டமிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு 10.02.2006 இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. ஆனாலும் தடுப்பு அணைகள் கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிடவில்லை.

ஹந்திரி-நீவா கால்வாய்

ஹந்திரி-நீவா கால்வாய்

மீண்டும் 2011 இல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது ஆந்திர மாநில முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, தனது ‘குப்பம்' தொகுதியில் குடிநீர் மற்றும் பாசன மேம்பாட்டிற்காக ஹந்திரி-நீவா திட்டக் கால்வாய் குப்பம் வரை நீடிக்கப்படும என்று அறிவித்தார்.

தடுப்பணை உயரத்தை அதிகரித்தல்

தடுப்பணை உயரத்தை அதிகரித்தல்

இதையடுத்து ஹந்திரி -நீவா திட்டத்தின் கீழ் மதனப்பள்ளி - குப்பம் வரை கால்வாய் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. குப்பம் தொடங்கி, வாணியம்பாடி அடுத்த புல்லூர் வரையில் உள்ள 22 தடுப்பு அணைகளின் உயரம் 5 அடியிலிருந்து 12 அடியாக உயர்த்திக் கட்டப்பட்டது.

20 அடி உயர தடுப்பணைகள்

20 அடி உயர தடுப்பணைகள்

இவற்றில் வேலூர் - வாணியம்பாடி அடுத்த தகரக்குப்பம் அருகில் ஜோதி நகரில் சாமாபள்ளம், பெரும்பள்ளம், ஒக்கல்ரேவ், புல்லூர், கனகநாச்சியம்மன்கோவில் அருகே 5 அடி உயரம் இருந்த தடுப்பு அணைகள் 12 அடி உயரம் உயர்த்தப்பட்டது. தமிழக எல்லையில் இருந்த தடுப்பு அணைகளில் சாமாபள்ளம், பெரும்பள்ளம், ஒக்கல்ரேவ், உள்ளிட்ட அணைகளின் உயரத்தை மீண்டும் 12 அடியிலிருந்து 20 அடியாக உயர்த்திக் கட்டியது ஆந்திர அரசு.

புதியதாக தடுப்பு அணை

புதியதாக தடுப்பு அணை

தமிழக எல்லையில் உள்ள நாட்றாம்பள்ளியிலிருந்து சுமார் 20 கி.மீ. தொலைவில் உள்ள நூல்குண்டா என்ற இடத்தில் பாலாற்றின் குறுக்கே 50 அடி உயரத்துக்கு மிகப்பெரிய தடுப்பு அணையை ஆந்திர அரசு கட்டி முடித்துவிட்டது. நூல்குண்டா புதிய தடுப்பு அணை குப்பம் அடுத்த கொத்தப்பள்ளியிலிருந்து சுமார் 10 கி.மீ. அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவில் பல கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது. இதனிடையே ஜே.சி.பி. இயந்திரங்களைக் கொண்டு தடுப்பு அணைகள் ஆழப்படுத்தப்பட்டன. தமிழக அரசின் எதிர்ப்பால் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட குப்பம் அருகில் கணேசபுரம் கங்குண்டிக்கு இடையில் தடுப்பு அணையும், நாயனூரில் தடுப்பு அணையும் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன.

தடுப்பணை உயரங்கள் 40 அடி

தடுப்பணை உயரங்கள் 40 அடி

இச்சூழலில்தான் கடந்த இரு வாராங்களாக ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே ராமகிருஷ்ணாபுரம். சாந்திபுரம், போகிலிரே, கிடிமாணிபெண்டா ஆகிய பகுதிகளில் உள்ள தடுப்பு அணைகளின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் நடப்பதாகவும், போகிலிரே பகுதியில் ரூ.6 கோடி செலவில் தடுப்பு அணையை உயர்த்தி, கட்டுமானப் பணி தற்போது தொடங்கி நடந்து வருவதாகவும், பாலாறு பாதுகாப்பு சங்கத் தலைவர் ஏ.சி.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கட்டியுள்ள 22 தடுப்பு அணைகளையும் 40 அடி உயரம் வரை உயர்த்தத் திட்டமிட்டு இருக்கிறது.

தமிழக அரசு மெத்தனம்

தமிழக அரசு மெத்தனம்

தமிழக அரசு பாலாறு தடுப்பணை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்குகளை விரைவுபடுத்தாமல் வாளா இருந்தது கண்டனத்துக்கு உரியது. தமிழக அரசு உடனடியாக தக்க நடவடிக்கை மேற்கொண்டு பாலாற்றின் குறுக்கே உள்ள தடுப்பணைகள் உயரத்தை அதிகரிக்கும் ஆந்திர அரசின் நடவடிக்கையைத் தடுக்க வேண்டும். மேலும் தடுப்பு அணைகள் அமைக்கும் முயற்சியை அனுமதிக்கக் கூடாது. இல்லையேல் பாலாற்றில் இனி சொட்டு நீர் கூட கிடைக்காது என்பதை உணர்ந்து செயல்பட வலியுறுத்துகிறேன். இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

English summary
MDMK General Secretary Vaiko has urged that to Stop check dams construction across river Palar.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X