வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு : பார்த்தசாரதி கோவிலில் நள்ளிரவில் அனுமதியில்லை
சென்னை: வைகுண்ட ஏகாதசி சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும், பார்த்தசாரதி கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை என்று காவல்துறை அறிவித்துள்ளது.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வைணவ ஆலயங்களில் இன்று நள்ளிரவு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வு நடைபெற உள்ளது. இந்நிகழ்வைக் காண வைணவ ஆலயங்களுக்கு ஏராளமான பக்தர்கள் ஏகாதசி விரதமிருந்து, கோயிலுக்கு வந்து அங்கேயே இரவு முழுவதும் தங்கியிருந்து கண் விழித்து காத்திருந்து, சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைக் கண்டு தரிசிப்பதுண்டு.

தற்போது உலகம் முழுவதும், கொரோனா நோய்த் தொற்றின் 3ஆம் அலையான ஓ-மைக்ரான் என்னும் புதிய வகை நோய்த் தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. தற்போது, இந்தியாவிலும் இந்நோய்த் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே செல்கிறது. நோய்த் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பொதுமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி, தமிழக அரசும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் வழிபாட்டுத்தலங்களுக்கு வந்து செல்லவும் கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரையிலும் வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் நுழைய தடையுத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் இன்று நள்ளிரவில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு தமிழகம் முழுதும் உள்ள வைணவ கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியைக் காண ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு வந்து சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வைக் காண ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தமிழக அரசு தடையுத்தரவு பிறப்பித்துள்ளதால், பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள புகழ்பெற்ற வைணவக் கோயிலான பார்த்தசாரதி கோயிலில், இன்று நள்ளிரவு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு சென்னை காவல்துறை செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,சொர்க்க வாசல் திறப்பு நிகழ்வை முன்னிட்டு, இன்று இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரையிலும், பார்த்தசாரதி கோயிலுக்குள் பக்தர்கள் செல்ல அனுமதி இல்லை.
நாளை காலை 6:15 மணிக்கு மேல் நாளை இரவு 8 மணி வரை, தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள கொரோனா நோய்த் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
வைகுண்ட ஏகாதசி நிகழ்வுகளை தொலைக்காட்சி மற்றும் யு-டியூப் மூலம் நேரடியாக ஒளிபரப்பு செய்வதற்கு இந்து சமய அறநிலையத்துறையினர் தகுந்த ஏற்பாடுகளை செய்திருக்கிறார்கள். முகக்கவசம் அணியாமல் வருபவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி இல்லை. போதிய சமூக இடைவெளியை கடைபிடித்து வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வேண்டும்.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சுவாசம் தொடர்பான நோய், மற்றும் இருதய நோய் போன் இணை நோய் உள்ளவர்கள், கர்ப்பிணி பெண்கள், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் ஆகியோர் பாதுகாப்பு மற்றும் உடல்நலன் கருதி கோயிலுக்கு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பாக்ஸ்கான் தொழிற்சாலை மீண்டும் திறப்பு - 500 தொழிலாளர்களுக்கு மட்டும் அழைப்பு
பக்தர்கள் கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னர், உடல் வெப்பநிலையை அறியும் தெர்மல் ஸ்கேனர் கொண்டு பரிசோதனை செய்த பின்பு தான் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.