படையப்பா எழுந்து வா! பாட்ஷாபோல் நடந்து வா- ரஜினி விரைவில் குணமடைய வைரமுத்து ட்வீட்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்றார். அவருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது.

இதையடுத்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார் ரஜினி. பின்னர் சென்னை திரும்பிய ரஜினிகாந்த், குடும்பத்தினருடன் அண்ணாத்த திரைப்படத்தை பார்வையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரக அறுவை சிகிச்சை மேற்கொண்டதால் வழக்கமாக அவர் மேற்கொள்ளும் உடல்நலன் பரிசோதனை என முதலில் கூறப்பட்டது.
ஆனால் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் ரஜினிகாந்த் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியானது அவரது ரசிகர்களை கவலையடைய வைத்தது. பின்னர்தான் ரஜினிகாந்துக்கு ரத்த நாள மறுசுழற்சி சிகிச்சை அளிக்கப்பட்டது தெரியவந்தது. இதனை காவேரி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்திருந்தது.
அதாவது ரஜினிகாந்தின் மூளைக்கு செல்லும் ரத்த நாளத்தில் ஏற்பட்ட பாதிப்பை சீரமைக்க அவருக்கு மறுசுழற்சி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் சில நாட்களில் குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் காவேரி மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. ரஜினிகாந்த் விரைவில் நலமுடன் வீடு திரும்ப வேண்டும் என்று அவரது ரசிகர்கள் தொடர்ந்து பிரார்த்தித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டும் என்று பல்வேறு தலைவர்களும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் உணர்வுப்பூர்வமாக பதிவிட்டுள்ளதாவது:
காவேரி மருத்துவமனை நிறுவனர் டாக்டர் அரவிந்தனிடம்
திரு ரஜினியின் நலம் கேட்டேன்.
நாளுக்கு நாள் அவர் நலம் கூடிவரும் நம்பிக்கைத் தகவல்கள்
என் நிம்மதியை மீட்டெடுத்தன.
உத்தமக் கலைஞனே
காற்றாய் மீண்டு வா
கலைவெளியை ஆண்டு வா
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
கவிஞர் வைரமுத்துவின் இந்த ட்விட்டர் பதிவு தங்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளது என்கின்றனர் ரஜினிகாந்த் ரசிகர்கள். அத்துடன் வைரமுத்துவின் ட்விட்டர் பதிவை சமூக வலைதளங்களில் வைரலாகவும் ரஜினிகாந்த் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.