2017 ஆம் ஆண்டு நடந்தது என்ன?.. சரியாக பாயிண்டை பிடித்த வைத்திலிங்கம்.. என்ன செய்ய போகிறார் இபிஎஸ்?
சென்னை: பொதுக் குழுவுக்கு எத்தனை ஏற்பாடுகளை செய்தாலும் அது நடக்காது என ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ய ஏற்பாடுகள் ஜரூராக உள்ளன. ஆனால் இதற்கு ஓபிஎஸ் தரப்பு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
கடந்த 23 ஆம் தேதி எடப்பாடி தரப்பினர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக ஓபிஎஸ் தரப்பினர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடர்ந்துள்ளனர். அதன் மீதான விசாரணை நாளை நடைபெறுகிறது.
ஜெயலலிதா செய்யாததை செய்த ஓபிஎஸ்! தூக்கியே ஆகனும்! கங்கணம் கட்டி களமிறங்கிய இபிஎஸ்! ஜுலை 11 ட்விஸ்ட்!

ஒருங்கிணைப்பாளர்
இந்த நிலையில் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்ஸின் கையெழுத்தும் ஒப்புதலும் இல்லாமல் பொதுக்குழு வரும் 11 ஆம் தேதி நடைபெறுவதாக எடப்பாடி தரப்பு அறிவித்துள்ளது. இதை எப்படியாவது தடுத்து நிறுத்த ஓபிஎஸ் தரப்பு முடிவு செய்துள்ளது. இதை பொதுக் குழுவுக்கு தடை கோரிய ஓபிஎஸ் தரப்பு மனுவை அவசர வழக்காக விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் தெரிவித்துவிட்டது.

இறங்கி வந்த பன்னீர்
இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் தமிழக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வேட்பாளர்களின் படிவங்களில் கையெழுத்து போட தான் ரெடி என ஓபிஎஸ் இறங்கி வந்தும் எடப்பாடி பழனிச்சாமியோ அண்ணன் ஓபிஎஸ் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரே இல்லை என பதில் கடிதம் அனுப்பியிருந்தார்.

திரௌபதி முர்மு
இந்த நிலையில் நேற்றைய தினம் திரௌபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவிப்பதிலும் இரு தலைமைகளுக்கு இடையே உள்ள மோதல் அப்பட்டமாக தெரிந்தது. இருவரும் தனித்தனியே முர்முவை சந்தித்தனர். முதலில் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்துவிட்டு செல்லும் வரை ஓபிஎஸ் காத்திருந்து முர்முவை சந்தித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், அதிமுக சட்டவிதிகளின்படி நான்தான் ஒருங்கிணைப்பாளர் என தெரிவித்தார்.

பொதுக் குழு
இந்த நிலையில் அதிமுக பொதுக் குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகளின் அழைப்பு என்ற பெயரில் பொதுக் குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதுகுறித்து ஓபிஎஸ் தரப்பை சேர்ந்த வைத்திலிங்கம் கூறுகையில் பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளை செய்தாலும் பொதுக் குழு நடக்காது. பொதுக் குழுவுக்கு அழைப்பிதழ் அனுப்பினாலும் வரும் 11 இல் பொதுக் குழு நடக்காது.

ஜெயலலிதா மறைந்த பிறகு
ஜெயலலிதா மறைந்த பிறகு கட்சியும் இரட்டை இலை சின்னமும் அவைத் தலைவர் மற்றும் பொருளாளருக்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்தது. அந்த வகையில் இரட்டை இலை சின்னமும் கட்சியும் பொருளாளராகவும் உள்ள ஓபிஎஸ்ஸுக்குத்தான். நிரந்தர அவைத் தலைவர் இன்னமும் ஒருங்கிணைப்பாளரால் அங்கீகரிக்கப்படவில்லை.

இரட்டை தலைமை சர்ச்சை
இரட்டை தலைமை சர்ச்சை உள்ளதால் கட்சியை வழிநடத்தும் அதிகாரம் ஓபிஎஸ்ஸுக்குதான் உண்டு. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு சர்வாதிகார மனபோக்குடன் நடந்து கொள்கிறது. தலைமைக் கழக நிர்வாகிகள் என்ற பெயரில் அழைப்பிதழ் அனுப்பினால் அது ஏற்புடையதல்ல. தலைமை கழக நிர்வாகிகள் பொதுக் குழுவை பொருளாளர் ஒப்புதலின்றி கூட்டினாலும் செல்லாது என்றார்.