• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

விவசாயிகள் அழைப்பை ஏற்று மோடி பதவியேற்ற மே 26-ஐ தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம்- திருமாவளவன்

Google Oneindia Tamil News

சென்னை: நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற மே 26-ந் தேதியை தேசிய கறுப்பு நாளாகக் கடைபிடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கை: மோடி அரசு கொண்டுவந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி கடந்த ஆறு மாதங்களாகத் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கும் 40க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள், மே 26 ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனாவில் இருந்து 14. 93 கோடி பேர் மீண்டனர் - 1. 51 கோடி பேர் சிகிச்சை கொரோனாவில் இருந்து 14. 93 கோடி பேர் மீண்டனர் - 1. 51 கோடி பேர் சிகிச்சை

அதை ஏற்று தமிழகம் முழுவதும் மே-26 ஆம் நாளை கறுப்பு நாளாகக் கடைபிடிப்போமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். 2014 ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி தான் நரேந்திரமோடி பிரதமராகப் பதவியேற்றுக் கொண்டார். இப்போது அவர் அப்பதவியில் ஏழு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.

பொருளாதார சீரழிவு

பொருளாதார சீரழிவு

கடந்த 7 ஆண்டுகளில் அவரது ஆட்சியில் இந்தியாவின் பொருளாதாரம் அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டது. பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்பட்டுள்ளன. பணமதிப்பு அழிப்பு நடவடிக்கையின் மூலமாக ஏழை-எளிய மக்கள் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளானார்கள். மழை வெள்ளம், வறட்சி போன்ற இயற்கைப் பேரிடர்களின் போதும் கூட மோடி அரசு உரிய விதத்தில் மக்களுக்கு உதவ முன்வரவில்லை.

நிதி ஒதுக்கீடு குறைவு

நிதி ஒதுக்கீடு குறைவு

கிராமப்புற ஏழை எளிய மக்கள் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கு உதவியாக இருக்கும் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்துக்கான நிதி ஒதுக்கீட்டையும்கூட மோடி அரசு குறைத்துவிட்டது. எஸ்சி-எஸ்டி, ஓபிசி பிரிவு மக்களுக்கு பட்ஜெட்டில் ஒதுக்க வேண்டிய நிதியை ஒவ்வொரு ஆண்டாகக் குறைத்து அவர்களுடைய முன்னேற்றத்தைத் தடுத்து வருகிறது மோடி அரசு. எஸ்சி துணைத் திட்டத்தின் கீழ் பட்ஜெட்டில் 16.6 சதவீதம் நிதி ஒதுக்குவதற்குப் பதிலாக வெறும் 3.5 சதவீதம் மட்டுமே நிதி ஒதுக்கப்படுகிறது.

இடஒதுக்கீட்டுக்கு தடை

இடஒதுக்கீட்டுக்கு தடை

ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டுக்குப் பல்வேறு தடைகளை அரசாங்கத்தின் மூலமாகவும், நீதிமன்றங்களின் மூலமாகவும் மோடி அரசு ஏற்படுத்தி வருகிறது. அது கொண்டுவந்த 102ஆவது சட்டத் திருத்தத்தின் காரணமாக மாநில அரசுகள் பிற்படுத்தப்பட்ட பிரிவினரை அடையாளம் காண்பதும், இட ஒதுக்கீடு அளிப்பதும் இயலாது என்ற நிலை உருவாகியிருக்கிறது.

மாநிலங்களின் அதிகாரம் பறிப்பு

மாநிலங்களின் அதிகாரம் பறிப்பு

மாநிலங்களின் அதிகாரத்தைப் பறித்து எல்லாவற்றையும் தன் கையில் குவித்துக் கொண்டு மாநிலங்களை அதிகாரம் ஏதுமற்ற யூனியன் பிரதேசங்களாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. கொரோனா பேரிடரை எதிர்கொள்வதற்கு எவ்விதமான உருப்படியான திட்டங்களையும் வகுக்காமல் இலட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்க மோடி அரசு காரணமாகியுள்ளது.

தடுப்பூசி, ஆக்சிஜன் ஒதுக்கீடுகளில் பாரபட்சம்

தடுப்பூசி, ஆக்சிஜன் ஒதுக்கீடுகளில் பாரபட்சம்

தடுப்பூசிகளை வழங்குவதிலும், ஆக்சிஜன் என்னும் உயிர்வளி ஒதுக்கீட்டிலும் பாரபட்சம் காட்டியதால் உச்சநீதிமன்றமே தலையிடும் நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. பெருந்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாமல் மோடி அரசு தோல்வி அடைந்துவிட்டது என்பதை உலக அளவிலான ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. அரசியலமைப்புச் சட்டத்தை பலவீனப்படுத்திவரும் மோடி அரசு, பராளுமன்றத்தையும் மதிப்பதில்லை. 70க்கும் மேற்பட்ட அவசர சட்டங்கள் மோடி அரசால் இயற்றப்பட்டுள்ளன.

மோடியின் இந்து விரோத ஆட்சி

மோடியின் இந்து விரோத ஆட்சி

பெண்களுக்கும் , சிறார்களுக்கும் எதிரான குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே போகின்றன. சிறுபான்மையினரை எதிரிகளாக சித்திரித்து இந்துக்களிடம் வகுப்புவாத வெறியை ஊட்டி, மயக்கி அவர்களை ஏமாற்றி வாக்குகளைப் பெற்று ஆட்சி அதிகாரத்தைப் பிடித்த மோடியின் ஆட்சியில் அதிகம் பாதிக்கப்படுகிறவர்கள் இந்துக்கள்தான். கொரோனாவால் உயிரிழப்பவர்களிலும், பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப் படுகிறவர்களிலும், மோடி அரசின் கொள்கைகளால் வேலை இழந்தவர்களிலும், ஜிஎஸ்டி முதலான வரிவிதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களிலும் இந்துக்கள் தான் அதிகம். எனவே ,மோடியின் ஏழாண்டுகால ஆட்சி 'இந்துக்களுக்கு விரோதமான ஆட்சி' என்பதே உண்மை.

மக்கள் விரோத அரசு

மக்கள் விரோத அரசு

எல்லா தளங்களிலும் தோல்வி அடைந்து விட்ட மோடி அரசு, ஒரு மக்கள் விரோத அரசு என்பதில் எவருக்கும் கருத்து மாறுபாடு இல்லை. அதை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில் மோடி பதவியேற்ற மே -26 ஆம் நாளை, விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று 'தேசிய கறுப்பு நாளாகக் ' கடைபிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.

English summary
VCK Chief Thol. Thirumavalavan has called to observe May 26 as the National Black Day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X