சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

நவம்பர் 1 தமிழ்நாடு நாள்: மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்போம்- விசிக எம்.பி. ரவிக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழ்நாடு நாள் இன்று கொண்டாடப்படும் நாளில் மாநில உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ரவிக்குமார் எழுதியுள்ளதாவது:

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது இதற்கான அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் அரசியலமைப்புச் சட்டத்தினுடைய முதல் வரியாக எழுதியது, 'இந்தியா என்கிற இந்த நாடு மாநிலங்களுடைய ஒன்றியம்' என்பதுதான். அதுதான் நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தின் உயிர்நாடியுங்கூட.

தமக்கென அதிகாரங்களைக்கொண்ட மாநில அரசுகள், அவை சேர்ந்த ஒரு கூட்டரசுதான் இந்தியா - அதுதான் அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றித்தந்த நம்முடைய முன்னோர்களுடைய முடிவு. ஆனால், அந்த முடிவுக்கு மாறாக மத்திய அரசுக்கென அதிகாரப்பட்டியலில் குறிப்பிடப்பட்ட அதிகாரங்களை மீறி, மாநிலப் பட்டியலில் இருக்கின்ற அதிகாரங்களில் தலையிடுகின்ற நிலை 1950 களிலேயே துவங்கிவிட்டது.

மாநிலங்களின் அதிகார பறிப்பு

மாநிலங்களின் அதிகார பறிப்பு

1951ஆம் ஆண்டிலே இயற்றப்பட்ட தொழிற்சாலைகள் சட்டம், மாநில அரசுகளின் அதிகாரப் பட்டியலில் 23 ஆவதாக வைக்கப்பட்டிருந்த அதிகாரங்களைக் குறைத்தது. 1955ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட ‘அத்தியாவசிய பண்டங்கள் சட்டம்' மாநில அரசுகள் என்னென்ன பண்டங்களின்மீது வரிவிதிக்கலாம் , அவற்றை எப்படிக் கையாளலாம் என்பதை தடுத்து சுருக்கியது. 1957இல் இயற்றப்பட்ட ‘கனிமவளங்கள் சட்டம்' மாநில அரசினுடைய பொருளாதார தற்சார்புக்கு வேட்டுவைத்தது.

தமிழகம் எழுப்பிய முதல் குரல்

தமிழகம் எழுப்பிய முதல் குரல்

இப்படி தொடர்ந்து மாநில உரிமைகள் குறுக்கப்பட்டதால், பறிக்கப்பட்டதால் நெருக்கடிக்கு ஆளான மாநிலக் கட்சிகள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டன. அந்தக் குரல் முதலில் தமிழகத்திலிருந்துதான் எழுந்தது. நாடு சுதந்திரம் அடைந்து பத்து ஆண்டுகள் வரை மத்தியில் ஆண்ட கட்சியும், மாநிலங்களில் ஆண்ட கட்சியும் ஒரே கட்சிகளாக இருந்த காரணத்தினால் ‘மாநில உரிமைகள்' என்கிற பிரச்சினை உட்கட்சி பிரச்சினையாக மட்டுமே முதலில் பார்க்கப்பட்டது.

மாநில உரிமை போராட்டங்கள்

மாநில உரிமை போராட்டங்கள்

1967ஆம் ஆண்டு தேர்தலில்தான் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் பல மாநிலங்களில் வெற்றிப்பெற்று ஆட்சி அமைத்தன. அதன் விளைவாகத்தான் மாநில சுயாட்சி முழக்கம் தமிழகத்திலிருந்து வீறுகொண்டு எழுந்தது . அதுமட்டுமல்ல 1980க்குப் பிறகு மத்தியில் ஆட்சி செய்தவர்கள் பின்பற்றிய தாராளமய பொருளாதாரக் கொள்கை, அதனடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்கள், அதனால் மாநில அரசுகளும், மக்களும் பாதிக்கப்பட்டார்கள். அந்த ஒப்பந்தங்களின் சுமை மாநில அரசுகளின் தலையில் விழுந்தது. அதனால், அழுத்தப்பட்ட மக்கள் போராடுகிற நேரத்தில், தங்கள் உரிமைக்காக குரல்கொடுக்கிற நேரத்தில் அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு கடுமையாக அடக்கி, ஒடுக்கப்பட்டனர்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகம்

பன்னாட்டு நிறுவனங்களுக்கு சாதகம்

தாராளமய, தனியார்மயப் பொருளாதாரக் கொள்கைகளும், மத்திய அரசாங்கத்தில் இருக்கின்றவர்கள் தொடர்ந்து அதிகாரத்தைத் தன்வசம் குவித்துக்கொண்ட போக்கும்தான் இன்றைக்கு மாநிலங்களிலிருந்து உரிமைக்குரல்கள் வெடித்துக் கிளம்புவதற்கு காரணமாக இருக்கின்றன. மத்தியில் ஆளுகின்றவர்கள் அதிலும் குறிப்பாக இன்றைக்கு மத்தியில் இருக்கின்ற பாஜகவைச் சேர்ந்தவர்கள் பன்னாட்டு நிறுவனங்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் சாதகமான திட்டங்களையே தீட்டுகிறார்கள்.

தடையாக இருக்கும் அரசியல் சாசனம்

தடையாக இருக்கும் அரசியல் சாசனம்

இந்தியா முழுவதையும் ஒரே சந்தையாக மாற்றி, அந்தச் சந்தையை அந்நிய முதலாளிகளுக்கு திறந்துவிடுவதுதான் இன்றைக்கு அவர்களுடைய திட்டம். அவர்களுடைய திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளுடைய போராட்டங்கள் தடையாக இருக்கின்றன. மக்களுடைய போர்க்குரல், மக்களுடைய எழுச்சி தடையாக இருக்கிறது . இவற்றையெல்லாம் தாண்டி இன்றைய ஆட்சியாளர்களுக்குத் தடையாக இருப்பது புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள் இயற்றித்தந்த அரசியலமைப்புச் சட்டம்தான்.

அதிபர் ஆட்சி முறைக்கு முயற்சி

அதிபர் ஆட்சி முறைக்கு முயற்சி

பாஜகவினர் அமைக்க விரும்பும் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே பண்பாடு என்கிற அந்த இந்துராஜ்ய கனவுக்குத் தடையாக இருப்பது அரசியலமைப்புச் சட்டம்தான். அந்த அரசியலமைப்புச் சட்டத்தை கொஞ்சம் கொஞ்சமாக சிதைப்பதுதான் அவர்களுடைய நோக்கம். அதற்காகத்தான் 1999ஆம் ஆண்டு அவர்கள் ஆட்சியிலிருந்த நேரத்தில் நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தி எழுதுவதற்காக ஒரு குழுவை அமைத்தார்கள். இந்த நாட்டின் பாராளுமன்ற அரசியல் முறையை மாற்றி, இதை அதிபர் ஆட்சிமுறைக்கு கொண்டுவர வேண்டுமென்று அவர்களுடைய மாநாட்டில் வெளிப்படையாகத் தீர்மானம் இயற்றினார்கள்.

இந்து ராஜ்ஜிய திட்டம்

இந்து ராஜ்ஜிய திட்டம்

அன்றைக்கு குடியரசுத் தலைவராக இருந்த மதிப்பிற்குரிய கே.ஆர்.நாராயணன் அவர்களுடைய எதிர்ப்பாலும், அன்றைக்குப் பிரதான எதிர்க்கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சியினுடைய போராட்டங்களினாலும் அவர்களுடைய சனாதன சதித்திட்டம் தடுத்து நிறுத்தப்பட்டு இந்திய அரசியலமைப்புச் சட்டம் காப்பாற்றப்பட்டது. ஆனால், இப்போது அவர்கள் பெரும்பான்மை பலத்தோடு ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களிலே பாஜகவின் ஆட்சி நடக்கிறது. பல மாநிலங்களில் அவர்கள் கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த நாட்டை காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றுவோம் என்று கொக்கரிக்கிறார்கள். காங்கிரஸ் இல்லாத நாடாக மாற்றவேண்டும் என்பது மட்டுமல்ல அவர்களுடைய நோக்கம். எந்தக் கட்சியும் இல்லாத நாடாக இதை மாற்றவேண்டும்; பாஜக மட்டுமே இருக்கின்ற, அவர்கள் மட்டுமே ஆளுகின்ற, காவிக் கனவுகளை மெய்ப்பிக்கின்ற, அவர்களுடைய நீண்டகால திட்டமான இந்துராஜ்ஜியத்தை இங்கே செயல்படுத்துகிற ஒரு ஆட்சியை அமைக்கவேண்டும் என்பதுதான் அவர்களுடைய திட்டம்.

மாநில உரிமைகளுக்கான குரல்

மாநில உரிமைகளுக்கான குரல்

மத்தியில் ஆளுகின்ற சனாதனவாதிகளின் இந்து ராஜ்யம் என்னும் கொடுங்கனவைக் கலைக்கவேண்டும் என்று சொன்னால், அவர்களுடைய திட்டத்தை தவிடுபொடியாக நொறுக்கவேண்டும் என்று சொன்னால் மாநில உரிமைகளுக்கான போராட்டங்களை வலிமையாக முன்னெடுக்கவேண்டும். மொழிவாரி மாநிலம் அமைக்கப்பட்ட இந்த நாளில் அதற்கு உறுதியேற்போம்! இவ்வாறு ரவிக்குமார் எழுதியுள்ளார்.

English summary
VCK MP Ravikumar has called to start Protests for the State rights.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X