சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜாதிவாரிக் கணக்கெடுப்பு ஜாதிய உணர்வை மேலும் அதிகரிக்க செய்யும்- விசிக எம்.பி. ரவிக்குமார்

Google Oneindia Tamil News

சென்னை: சாதிவாரிக் கணக்கெடுப்பு தொடர்பாக மத்திய பாஜக அரசிடம் இருக்கும் புள்ளிவிவரங்களைக் கேட்காதது ஏன்? என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் ரவிக்குமார் எம்.பி. எழுதியுள்ளதாவது:

இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் துவக்கப்பட்ட ஒரு நடைமுறையாகும். பத்தாண்டுகளுக்கு ஒருமுறை மக்கள் தொகையைக் கணக்கெடுத்து அறிவிப்பதென்பது ஏறத்தாழ 1871லிருந்து நடந்து வருகிறது. சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு மத்திய அரசு இதைச் செய்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் 1931ஆம் ஆண்டுவரை சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. அதற்கு அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டாம் உலக யுத்தத்தின் காரணமாக பாதிக்கப்பட்டது. 1951ஆம் ஆண்டு கணக்கெடுப்பு நடத்தும்போது இந்தியா சுதந்திரம் பெற்றுவிட்டது. அப்போது சாதி வாரியாகக் கணக்கெடுப்பு செய்வதா? இல்லையா? என்று மத்திய அரசு ஆலோசித்தது. அப்படி சாதி வாரியாகக் கணக்கெடுப்பதால் மக்களிடையே பிரிவினை உணர்வுதான் அதிகரிக்கும். எனவே, அது தேவையில்லை என்று அப்போது முடிவு செய்த மத்திய அரசு, எஸ்சி , எஸ்டி பிரிவினருக்கு அவர்களது மக்கள்தொகையின் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கப்படுவதால் அவர்களை மட்டும் சாதிவாரியாகக் கணக்கெடுப்பு செய்வது என்றும் மற்றவர்களை அவ்வாறு கணக்கெடுப்பதில்லை என்றும் முடிவு செய்தது. அந்த நடைமுறைதான்

இதுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஆனால், அதை மாற்ற வேண்டும். மீண்டும் எல்லோரையும் சாதிவாரியாக மக்கள் தொகையைக் கணக்கெடுப்புச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரைப் பிரதிநிதித்துவம் செய்யும் சில கட்சியினரால் தொடர்ந்து முன்வைக்கப்பட்டு வருகிறது. இப்போது " சாதிவாரியான தற்போதைய நிலவரப்படியான புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழிமுறைகளை ஆராய்ந்து அதனடிப்படையில் உரிய தரவுகளை சேகரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கு" ஆணையம் ஒன்று அமைக்கப்படும் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளதால் மீண்டும் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்த விவாதம் தலைதூக்கியுள்ளது. பிற்படுத்தப்பட்டோருக்குக் கல்வியில் இட ஒதுக்கீடு வழங்குவது பற்றி தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் ' சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்படாத நிலையில் பிற்படுத்தப்பட்டோரின் மக்கள்தொகை எந்த அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது?' எனக் கேட்டிருந்தது. அப்போதிலிருந்தே இக்கோரிக்கையைப் பல்வேறு அரசியல் கட்சிகளும் முன்வைக்கத் தொடங்கிவிட்டன. 2010 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றமும் சாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை எனத் தீர்ப்பளித்தது. அதைத் தொடர்ந்து அந்த கோரிக்கை மேலும் தீவிரமடைந்தது.

தமிழக அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி- 20% இடஒதுக்கீடு உடனே வழங்குக- ராமதாஸ் தமிழக அரசின் ஜாதிவாரி கணக்கெடுப்பு காலம் தாழ்த்தும் உத்தி- 20% இடஒதுக்கீடு உடனே வழங்குக- ராமதாஸ்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

பிற்படுத்தப்பட்டோர் ஆணையம்

1955 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கை சாதிவாரிக் கணக்கெடுப்பை வலியுறுத்தியிருந்தது. 2399 சாதிகளைப் பிற்படுத்தப்பட்ட சாதிகளாகப் பட்டியலிட்டிருந்த அந்த அறிக்கை ,அவற்றுள் 837 சாதிகளை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனக் குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமோ எஸ் சி / எஸ் டி பிரிவினரின் மக்கள்தொகை அல்லாது இந்தியாவில் 54 சதவீதம்பேர் பிற்படுத்தப்பட்டோர் வாழ்வதாகவும் 3743 சாதிகள் பிற்படுத்தப்பட்ட சாதிகள் எனவும் கூறியிருந்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைபடுத்தப்படுவதற்கு முன்னால் பிற்படுத்தப்பட்டவர்களின் மக்கள் தொகையை சரியாகக் கணக்கிடுவதற்காக சாதிவாரிக் கணக்கெடுப்பு வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. மண்டல் கமிஷன் பரிந்துரைகளின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், இன்று பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரில் இருக்கும் எண்ணிக்கை பலம் கொண்ட சாதியைச் சேர்ந்தவர்கள் இந்தக் கோரிக்கையை அதிகமாக வலியுறுத்துகின்றனர்.

உள்ஒதுக்கீடு கோரிக்கை

உள்ஒதுக்கீடு கோரிக்கை

பிற்படுத்தப்பட்ட பிரிவினரிடையே இருக்கின்ற எண்ணிக்கை பலம் குறைந்த சில சாதிகளும்கூடத் தமக்கு உள்ஒதுக்கீடு வேண்டுமென்பதற்காக சாதிவாரி இடஒதுக்கீட்டை வலியுறுத்துகின்றன. பெரிய சாதியினரோடு இடஒதுக்கீட்டு உரிமைக்காகப் போராடித் தமது பங்கை அவர்கள் பெறுவது சாத்தியம் இல்லை. எனவே எண்ணிக்கை பலம் குறைந்த சாதியினருக்கு இடஒதுக்கீட்டில் ஒரு தொகுப்பை ஏற்படுத்தி உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால் நரிக்குறவர், நாவிதர் முதலானோர் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரின் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர் அவர்கள் தமக்கு உள் ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கேட்டுவருகின்றனர். அதற்காக சாதிவாரி இடஒதுக்கீடு அவசியம் என்று அவர்கள் கருதுகின்றனர். இடஒதுக்கீட்டைச் சர்வரோக நிவாரணியாகக் கருதுகிற போக்கு நம்மிடையே அதிகரித்து வருகிறது. இடஒதுக்கீட்டைக்கொண்டு இந்தியாவிலிருக்கும் அனைத்துப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

தனியார்துறையில் இடஒதுக்கீடு

தனியார்துறையில் இடஒதுக்கீடு

அதுமட்டுமின்றி இப்போது அளிக்கப்படும் இடஒதுக்கீடானது ஒரு சமூகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப அளிக்கப்படாததால் அந்த சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் அதன் பலன் கிடைப்பதில்லை. மண்டல் குழு பரிந்துரைகளையொட்டி உச்சநீதிமன்றத்தில் இந்திரா சஹானி வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இடஒதுக்கீட்டின் அளவை ஐம்பது விழுக்காட்டுக்கு மேல் போகக்கூடாது என்று வரையறுத்தது . அதுமட்டுமின்றி இட ஒதுக்கீடு என்பது அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு மட்டும்தான் பொருந்தும். இன்று கல்வியும் தொழிற்சாலைகளும் தனியார்மயம் ஆகிவருகின்றன. இச் சூழலில் தனியார் துறையில் இட ஒதுக்கீடு வேண்டும் என்று வலுவாக யாரும் குரலெழுப்பாத நிலையில் இட ஒதுக்கீட்டின் பொருள்தான் என்ன என்ற கேள்வி எழுகிறது.

உடைக்கப்பட்ட உச்சவரம்பு

உடைக்கப்பட்ட உச்சவரம்பு

சாதிவாரிக் கணக்கெடுப்பு செய்யப்பட வேண்டும் என்று ஆணையிட்ட சென்னை உயர்நீதிமன்றம் அத்துடன் இன்னொரு கருத்தையும் சொல்லியிருந்தது. சாதிவாரியாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு செய்யப்பட்டால்தான் ஓபிசி பிரிவினருக்கும், எஸ்சி பிரிவினருக்கும் அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்குவதற்கு வாய்ப்பு ஏற்படும் என்று அது கூறியிருந்தது. தற்போது பொருளாதார ரீதியில் பலவீனமான பிரிவினர் என்ற பெயரில் முன்னேறிய சாதியினருக்கு 10% இட ஒதுக்கீட்டை பாஜக அரசு கொடுத்துவிட்டது. அதன்மூலம் 50% உச்சவரம்பு உடைக்கப்பட்டுவிட்டது. எனவே எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவினர் தமது இட ஒதுக்கீட்டு அளவை உயர்த்துமாறு கோரவேண்டும். அதற்கு அவர்கள் ஒற்றுமையாக இருப்பது அவசியம். ஆனால் சாதிவாரி இட ஒதுக்கீடோ அவர்களுக்குள் முரண்பாட்டையே அதிகரிக்கச் செய்யும். அதனால்தான் சாதிவாரிக் கணக்கெடுப்புத் தேவையில்லையெனச் சொல்பவர்கள் இது மக்களிடையே பிரிவினை உணர்வை அதிகமாக்கிவிடும், எண்ணிக்கையில் சிறிய சாதிகளுக்கு ஆபத்தாக முடிந்துவிடும் என்ற அச்சத்தைத் தெரிவிக்கிறார்கள்.

ஜாதி உணர்வு அதிகரிப்பு

ஜாதி உணர்வு அதிகரிப்பு

மக்களிடையே இப்போது சாதி உணர்வே இல்லை என்று கூறிவிடமுடியாது. ஏற்கனவே இந்திய சமூகம் சாதியாகத்தான் பிரிந்துகிடக்கிறது. அதனால்தான் அம்பேத்கர், ' இந்தியாவில் சமூகம் என்பதே இல்லை. இங்கு இருப்பது சாதிகளின் தொகுப்பு மட்டும்தான்' என்று சாடினார். சாதி உணர்வும், சாதிகளின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்துக்கொண்டே போகின்றன என்பது மறுக்கமுடியாத ஒரு உண்மையாகும். இந்தியாவில் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் இந்த அளவுக்கு சாதிகள் இல்லை என்றே தெரிகிறது. பிரிட்டிஷ் காலத்தில் மெக்கன்ஸி என்ற அதிகாரியால் தொகுக்கப்பட்ட ‘வலங்கை, இடங்கை சாதிகளின் சரித்திரம்' என்ற நூலில் இருநூறு சாதிகளுக்கும் குறைவாகவே தமிழ்நாட்டு சாதிகளின் எண்ணிக்கை பட்டியலிடப்பட்டுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப் பிறகு சாதிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்திருக்கிறது என்பதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.சாதி உணர்வு அதிகரிப்பதே அதற்குக் காரணம் . சாதிவாரிக் கணக்கெடுப்பு சாதி உணர்வை மேலும் அதிகரிக்கச் செய்து பிற்படுத்தப்பட்டோருக்குள் முரண்பாட்டை கூர்மையாக்கும் என்பதிலோ, அதனால் பிற்படுத்தப்பட்டோரின் பேரசக்தி குறையும் என்பதிலோ எந்த சந்தேகமும் இல்லை.

ஜாதிய பெரும்பான்மை வாதம்

ஜாதிய பெரும்பான்மை வாதம்

அதனால்தான் சனாதன சக்திகள் அதை ஊக்குவிக்கின்றன. சிறிய எண்ணிக்கைகொண்ட சாதிகள் பாதிக்கப்படும் என்ற அச்சமும் நியாயமானதே. ஏற்கனவே எண்ணிக்கை பலம் கொண்ட சாதிகள் இந்த நாட்டை ஆள்வதற்குத் தங்களுக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று கூறி வருகின்றன. நமது தேர்தல் அமைப்பு முறை எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவதாகும். அதிக எண்ணிக்கையிலான ஆதரவைப் பெறுகிறவர்கள்தான் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுகின்றனர். எனவே, பெரும்பான்மை வாதம் என்பது இங்கு எளிதில் தலைதூக்கக்கூடிய சூழல் உள்ளது. அப்படித்தான் மதப்பெரும்பான்மை வாதம் இந்திய அரசியலில் தீவிரம் பெற்றது. அதனால் ஏற்பட்ட சீரழிவுகளைக் கடந்த முப்பது ஆண்டுகளாகப் பார்த்துவருகிறோம். இப்போது சாதிப்பெரும்பான்மை வாதம் அதேபோல தலைதூக்கக் கூடிய ஆபத்து இந்த சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பினால் ஏற்படக்கூடும். மதப்பெரும்பான்மை வாதமும் சாதிப்பெரும்பான்மை வாதமும் ஜனநாயகத்தைக் கொல்லும் தூக்குக் கயிற்றின் இரண்டு சரடுகளாகும்.

English summary
VCK MP Ravikumar has Questioned cast based survey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X