தம்பி திருமா என்று உருகிய கமல்... நன்றி சொல்லி அழைப்புக்கு நச் பதில் சொன்ன திருமாவளவன்
சென்னை: தம்பி திருமாவளவனுக்கு 6 சீட் கொடுத்து ஒதுக்கி விட்டார்களே, கடைசியில் அவர் இங்குதான் வரவேண்டும் என்று உருக்கமாக பேசிய மநீம தலைவர் கமல்ஹாசனுக்கு தனது பாணியில் பதில் கூறியுள்ளார் தொல். திருமாவளவன். புதிய கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியின் தலைமையில் அமையும் கூட்டணியில் 6 இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதை சிறப்பானதாக கருதுகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் படு பரபரப்பாகவே இருக்கிறது. கூட்டணி கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை இழுபறி என நாளொரு காட்சிகள் அரங்கேறி வருகின்றன. அதிமுக, திமுக கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் தற்போது கொடுக்கும் இடங்களை பெற்றுக்கொண்டு போட்டியிட்டே ஆக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு விட்டன.
கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக்கூட்டணியை வைகோ , திருமாவளவன் அமைத்தனர். அந்த கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியினரும், தேமுதிகவும் இணைந்தனர். விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராக அறிவித்து போட்டியிட்டதில் வாக்குகள் பிரிந்தன. இந்த கூட்டணி திமுகவின் தோல்விக்கு காரணமாக அமைந்தது என்ற கருத்து திமுகவினர் மத்தியில் உள்ளது.

கிள்ளிக்கொடுக்கும் திமுக
திமுக தனது கூட்டணியில் இணைந்துள்ள கட்சியினருக்கு கிள்ளிக்கொடுக்கிறது. இரட்டை இலக்க எண்ணிக்கையில் எதிர்பார்த்த கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கு தலா 6 சீட்டுகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. மனதிற்குள் கவலை இருந்தாலும் ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டுள்ளனர் கூட்டணிக் கட்சித்தலைவர்கள்.

தம்பி திருமாவளவன்
தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய மநீம தலைவர் கமல்ஹாசன், சமூக நீதியை பேசியவர்கள்தான் என்னுடைய தம்பி திருமாவளவனுக்கு 6 தொகுதி ஒதுக்கி உள்ளனர். என் தம்பி இங்கு வர வேண்டியவர். அதனை அடுத்த தேர்தலில் பார்ப்போம் என்று அழைப்பு விடுத்துள்ளார். கமலில் உருக்கமான அழைப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

நன்றி சொன்ன திருமாவளவன்
கமல்ஹாசனின் பேச்சு குறித்து பதிலளித்துள்ள தொல் திருமாவளவன் அழைப்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். புறநகர் பகுதியிலும் கிராமத்திலும் பத்து ஏக்கர் நிலம் வாங்குவதை விட நகர் பகுதிகளில் 10 சென்ட் நிலம் வாங்குவது மதிப்பு வாய்ந்தது என்பது போலத்தான். எந்த கூட்டணியில் எத்தனை இடங்களில் போட்டியிடுவது என்பது உள்ளது. பிரபலமில்லாத கூட்டணியில் 20 தொகுதிகளில் போட்டியிடுவதை விட பிரபலமான கட்சியின் தலைமையில் கீழ் அமைந்த கூட்டணியில் 6 தொகுதிகளில் போட்டியிடுவது வெற்றி வாய்ப்பை தீர்மாணிக்கும் என்று கூறியுள்ளார் திருமாவளவன்.

மதசார்பற்ற கூட்டணி
பாஜகவை எதிர்ப்பது ஒன்றுதான் அனைவரின் குறிக்கோள் என்று கூறியுள்ள திருமாவளவன், எத்தனை தொகுதிகளில் போட்டியிடுகிறோம் என்பது முக்கியமல்ல கொள்கையில் வெற்றி பெறுவதுதான் முக்கியம் என்றும் தெரிவித்துள்ளார். மதசார்பற்ற கட்சிகள் இணைந்து பாஜகவை எதிர்க்க வேண்டும் என்றும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

2016ல் கற்ற பாடம்
2016ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் போது அதிமுக, திமுகவிற்கு மாற்றாக மக்கள் நலக்கூட்டணியை அமைக்க காரணமாக அமைந்ததே திருமாவளவன்தான். மக்கள் நலக்கூட்டணியில் விசிகவிற்கு 25 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. திருமாவளவன் சொற்ப வாக்குகள் எண்ணிக்கையில் தோல்வியடைந்தார். அவரைத்தவிர அவரது கட்சி வேட்பாளர்கள் அனைவரும் குறைவான எண்ணிக்கையிலான வாக்குகளை மட்டுமே பெற்றனர். அந்த தேர்தலில் கற்ற பாடம்தான் இப்போது திருமாவளவனை மூன்றாவது அணியின் பக்கம் செல்ல விடாமல் தடுக்கிறது என்றே அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.