சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலவரத்தை தூண்டுகின்றனர் .. ராமதாஸ் அறிக்கை

Google Oneindia Tamil News

சென்னை: பாமக போட்டியிடும் தொகுதிகளில் வாக்கு கேட்க விடாமல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தாக்குதல் நடத்துவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது: தேர்தலில் தோல்வி பயம் எதையும் செய்யத் தூண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பா.ம.க போட்டியிடும் தொகுதிகளில் அருவருக்கத்தக்க அரசியல் வன்முறைகளை விடுதலை சிறுத்தைகள் கட்சி அரங்கேற்றி வருகிறது. ஜனநாயகத்தின் அடித்தளத்தை சிதைக்கும் நோக்கம் கொண்ட இத்தகைய சட்டவிரோத செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை; தண்டிக்கத்தக்கவையும் கூட.

 VCK volunteers stir up the riots In PMK Contest constituencies - Ramadoss Statement

மீனு மீனோய்... என்ன மீனும்மா இது.. வாளை மீனா, விலாங்கு மீனா.. கையில் மீனுடன் கலகலக்க வைத்த தமிழிசைமீனு மீனோய்... என்ன மீனும்மா இது.. வாளை மீனா, விலாங்கு மீனா.. கையில் மீனுடன் கலகலக்க வைத்த தமிழிசை

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் அதிமுக தலைமையிலான வெற்றிக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் வடிவேல் இராவணனை ஆதரித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சருமான சி.வி.சண்முகம் தலைமையில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களும், நிர்வாகிகளும் வாக்கு சேகரித்து வருகின்றனர். செல்லும் இடங்களில் எல்லாம் அவர்களை மக்கள் வரவேற்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர். பட்டியலின மக்களும் தாங்கள் வாழும் பகுதிகளுக்கு வந்து வாக்கு சேகரிக்க வேண்டும் என்று அழைக்கின்றனர்.

அவர்களின் அழைப்பை ஏற்று பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளுக்கு வாக்கு கேட்பதற்காக செல்லும் போது, அவர்களை அந்த பகுதிக்குள் செல்ல விடாமல் தடுப்பது, தாக்குவது, அருவருக்கத் தக்க வகையில் திட்டுவது, வன்கொடுமைத் தடுப்பு பிரிவில் பொய்ப்புகார்களை கொடுப்பது உள்ளிட்ட செயல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபடுகின்றனர். விழுப்புரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கோலியனூர் காலனிக்கு ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் தலைமையிலான குழுவினர் வாக்கு கேட்டு சென்ற போது, அங்கு வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிலர் பரப்புரைக்காக இருசக்கர ஊர்திகளில் வந்தவர்களைத் தாக்கியதுடன், வாகனங்களையும் அடித்து சேதப்படுத்தியுள்ளனர்.

கோலியனூர் பகுதியில் உள்ள மற்றொரு குடியிருப்புக்கு சென்ற போதும், அங்கு வரிசையாக பெண்களை நிறுத்தி வைத்து அருவருக்கத்தக்க வார்த்தைகளால் பரப்புரைக் குழுவினரை திட்ட வைத்துள்ளனர். தாதம்பாளையம் என்ற இடத்தில் சட்ட அமைச்சர் சி.வி.சண்முகத்தை வரவேற்று அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை சாலையம்பாளையம் காலனியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் பிடுங்கிப் போட்டு அட்டகாசம் செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட துறவி, மூங்கில்பட்டு கிராமங்களிலும் அமைச்சர் தலைமையில் சென்ற பா.ம.க. வேட்பாளர் வடிவேல் ராவணன் உள்ளிட்ட குழுவினரை வாக்கு சேகரிக்க அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியதும் நடந்துதிருக்கிறது.

கடலூர் மக்களவைத் தொகுதியில் பண்ருட்டி சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கண்டரக்கோட்டை என்ற இடத்தில் வாக்கு கேட்பதற்காக தலித் குடியிருப்பு வழியாக தொழில்துறை அமைச்சர் சம்பத் தலைமையில் வேட்பாளர் மருத்துவர் கோவிந்தசாமி மற்றும் அதிமுக கூட்டணியினர் நேற்று சென்றனர். அப்போது அவர்களை வழிமறித்த விடுதலை சிறுத்தைகள் பா.ம.க. கொடியை அகற்றி விட்டுத் தான் செல்ல வேண்டும் என்று தகராறு செய்துள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக மற்றும் பா.ம.க. தொண்டர்களை அமைச்சர் சம்பத் முன்னிலையில் தாக்கியுள்ளனர். அதேபோல், கடலூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட தாணு நகர் என்ற இடத்திலும் விடுதலை சிறுத்தைகள் வன்முறையில் ஈடுபட்டனர். அவர்கள் நடத்திய தாக்குதலில் அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக கிளைச் செயலாளர் காயமடைந்துள்ளார்.

அரக்கோணம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள பணப் பாக்கம் காலனியிலும் வாக்கு கேட்பதற்காக வேட்பாளர் ஏ.கே. மூர்த்தி மற்றும் அதிமுக மாவட்ட செயலாளர் ரவி ஆகியோர் தலைமையில் செல்லும் போது பா.ம.க கொடியை அகற்ற வேண்டும் என்று கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தகராறு செய்தனர்; தொண்டர்களைத் தாக்கினார்கள். திருத்தணி தொகுதியில் உள்ள பள்ளிப்பட்டு பேரூராட்சியில் கீச்சலம் என்ற இடத்திலும் வி.சி.க இத்தாக்குதலை நடத்தியுள்ளது.

பட்டியலின மக்களில் பெரும்பான்மையினர் அதிமுக தலைமையிலான குழுவினர் தங்கள் பகுதிக்கும் வந்து வாக்கு கேட்க வேண்டும் என்று அழைக்கின்றனர். ஆனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தான் திட்டமிட்டு இந்த வேலைகளை செய்கின்றனர். அவர்களின் இந்த இழிவான செயல்களைத் தட்டிக் கேட்பவர்கள் மீது வன்கொடுமை சட்டத்தில் புகார் கொடுத்து சட்டவிரோதமாக வழக்குப் பதிவு செய்ய வைக்கின்றனர். வாக்கு கேட்டு வருபவர்களிடம் இவ்வாறு தகராறு செய்தால், அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு எதையாவது செய்வார்கள்; அதைப்பயன்படுத்திக் கொண்டு கலவரங்களை அரங்கேற்றலாம் என்பது தான் விடுதலை சிறுத்தைகளின் திட்டம் ஆகும். இப்போதே இப்படி செய்பவர்கள் தேர்தல் நாளில் இன்னும் மோசமான கலவரங்களை கட்டவிழ்க்கக் கூடும்.

வாக்கு சேகரிக்க விடாமல் தடுக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரைத் தாண்டி, பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் வாக்கு சேகரிப்பது அதிமுக அணியால் முடியாதது அல்ல. பட்டியலின மக்களே தங்கள் பகுதிக்கு வாக்கு கேட்க அழைக்கும் போது, அதையேற்று அவர்கள் பகுதிக்கு சென்று வாக்கு சேகரிக்க அதிமுக அணியால் முடியும். மாறாக, எந்த வன்முறைக்கும் இடம் கொடுத்து விடக்கூடாது என்பதற்காக பொறுமை காக்கின்றனர். இதே அணுகுமுறையை அதிமுக அணியினர் தொடர வேண்டும்.

தேர்தல் நேரத்தில் தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறையினரின் பணிகள் பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளன. அதேநேரத்தில் தேர்தல் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், தோல்வி பயம் காரணமாக கலவரத்தையும், வன்முறையையும் தூண்டுபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பட்டியலின மக்கள் வாழும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அனைத்து வேட்பாளர்களும் எந்தவிதமான தடையுமின்றி வாக்கு சேகரிப்பதை தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உறுதி செய்ய வேண்டும்; விடுதலை சிறுத்தைகள் அளிக்கும் பொய்யான புகார்களின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளில் வழக்குப் பதிவதையும் தேர்தல் வரை நிறுத்தி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

English summary
Ramadoss Said that VCK volunteers attacks In PMK Contest constituencies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X