வேதா நிலையம் பால்கனி... ஜெயலலிதா நின்ற அதே இடத்தில் கெத்தாக நின்று கையசைத்த தீபா
சென்னை: ஜெயலலிதா 30 ஆண்டுகாலம் ராணியாக வலம் வந்த போயஸ் கார்டன் வேதா நிலையம் வீட்டின் பால்கனியில் நின்று தனது ஆதரவாளர்களைப் பார்த்து கையசைத்துள்ளார் ஜெ. தீபா. வேதா நிலையத்தின் வாசலில் கூட விடாமல் விரட்டி விடப்பட்ட தீபா இன்றைக்கு ஜெயலலிதாவின் வாரிசு என்ற அங்கீகாரத்துடன் வேதா நிலையத்திற்குள் நுழைந்துள்ளார். ஜெயலலிதா நின்று கையசைக்கும் அதே பால்கனியில் கெத்தாக கணவருடன் நின்று உற்சாகமாக கையசைத்தார்.
தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத தலைவியாக வாழ்ந்து மறைந்த ஜெயலலிதாவின் வீடு அவர் இருந்தவரைக்கும் தமிழகத்தின் அதிகார மையமாக இருந்தது. ஜெயலலிதா தமிழக அரசியலுக்க அறிமுகமான காலம் முதல் பிரபலமானது அவருடைய போயஸ் கார்டன் வீடு. அந்த போயஸ்கார்டன் வீட்டிற்குள் அத்தனை சீக்கிரம் யாரும் நுழைந்து விட முடியாது.
அதிமுக தொண்டர்கள் கோவிலாக வணங்கும் வேதா நிலையத்தில் ஜெயலலிதா இருந்த வரைக்கும் சினிமா, அரசியல் இரண்டிலும் ஜெயித்து ராணியாகவே வாழ்ந்து மறைந்தார். வேதா நிலையத்தில்தான் அதிமுகவினரின் தலையெழுத்து தீர்மானிக்கப்படும். தன்னை பார்க்க வரும் தொண்டர்களுக்கு பால்கனியில் நின்று கையசைப்பார் ஜெயலலிதா. இப்போது அதே இடத்தில் நின்று கெத்தாக கையசைத்துள்ளார் ஜெ.தீபா.
Mi 17 ஹெலிகாப்டரின் எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்

ஜெ.தீபாவின் பாட்டி
போயஸ்கார்டனில் கடந்த 15 ஜூலை 1967ல், சென்னை, போயஸ் தோட்டத்தில் இந்த இடத்தை ஜெயலலிதாவின் தாயாரும் ஜெ.தீபாவின் பாட்டியுமான சந்தியா, தன் பெயரில் வாங்கினார். பாட்டியின் சொத்து பேரப்பிள்ளைகளுக்குத்தான் வேண்டும் என்ற உரிமையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும், மகன் தீபக்கும் இதை தங்களுக்கான சொத்து என்று உரிமை கோரினர்.

பிரம்மாண்ட பங்களா
24 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான அந்த நிலத்தில், 21 ஆயிரத்து 662 சதுர அடிக்கு, கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அந்த இடத்தின் சர்வே எண்: 15/67. வருவாய் ஆவணங்களின் அடிப்படையில், வேதாநிலையம். சென்னை, தேனாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தது. 1972ஆம் ஆண்டு மே 15ஆம் தேதி இந்த வீட்டிற்கு கிரகப்பிரவேசம் நிகழ்ந்துள்ளது. வீடு கட்டும்போது இருந்த தீபாவின் பாட்டி சந்தியா, கட்டி முடித்த பின்னர் கிரகப்பிரவேசத்திற்கு உயிரோடு இல்லை.

சொத்து மதிப்பு
இந்த பங்களாவின் மொத்த பரப்பளவு 24 ஆயிரம் சதுர அடிகள். மொத்தம் இரண்டு ஃப்ளோர்கள். கீழே பெரிய ஹால்கள் அடங்கிய ஐந்து அல்லது ஆறு அறைகள். மேலே ஐந்து அறைகள் இருக்கின்றன என்கிறார்கள். போயஸ் கார்டனுக்குள் சென்றவர்களுக்கு அந்த மாளிகையின் பிரம்மாண்டம் தெரியும் மிகப்பெரிய நீச்சல் குளம், வாசலில் மிகப்பெரிய பலா மரம், அழகிய பூந்தோட்டம், 20க்கும் மேற்பட்ட அறைகள் அவற்றில் ஒவ்வொரு அறையிலும் ஏசி என வெளித் தோற்றமே காண்போரை மிரள வைக்கும். வீட்டின் பிரதான நுழைவுக் கதவே கோயில் கதவு போலத் தான் இருக்கும். போயஸ்கார்டன் சொத்தை 1967ல் வாங்கும் போது அதன் மார்க்கெட் மதிப்பு கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்.

தீபாவிற்கு அனுமதி மறுப்பு
ஜெயலலிதாவின் விருப்பத்துக்காக பலமுறை இந்த வீட்டின் வடிவமைப்பு மாற்றியமைக்கப்பட்டு இறுதியாக தற்போது முன்பகுதியில் உள்ளது போல் கட்டப்பட்டது. 1991 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வரான பிறகு இவர் குடியிருந்த பகுதி கட்டுப்பாட்டு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. மத்திய கருப்பு பூனைப் படை இவருக்குப் பாதுகாப்பு அளிக்க வந்த பிறகு பெரிய அளவுக்கு இந்தப் பகுதிக்குள் கெடுபிடிகள் கொண்டுவரப்பட்டன. அவர் வீட்டு முன்பாக தான் அமைச்சர்கள் வரிசையாகக் காத்திருப்பார்கள். போயஸ்கார்டன் இரும்பு கதவைத் திறந்து கொண்டு உள்ளே செல்ல ஒரு சில அதிகாரிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. தீபாவிற்கும் அவரது குடும்பத்தினருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை என்பதுதான் சோகம்.

அடையாளம்
ரத்த உறவுகளிடம் இருந்து விலகியே இருந்து விட்டார் ஜெயலலிதா. ஜெயலலிதா உடன் நட்பான பின்னர் 25 ஆண்டுகளுக்கு மேல் சசிகலா இந்த வீட்டில்தான் வாழ்ந்திருக்கிறார்.
சசிகலா மட்டுமல்லாது இளவரசி, விவேக் உள்ளிட்டோருக்கும் இந்த விலாசத்தில் தான் வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் கார்டு உள்ளிட்டவை இருக்கின்றன. ஜெயலலிதாவின் ரத்த உறவுகள் என்று சொல்லும் ஜெ. தீபாவிற்கோ, தீபக்கிற்கோ இந்த விலாசத்தில் எந்த அடையாள அட்டையோ ரேஷன் கார்டோ இல்லை.

டிடிவி தினகரன்
2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் ஜெயலலிதா உயிரிழந்த பின்னர் சசிகலாவும் அவரது உறவினர்களும் வேதா நிலையத்தில் இருந்தனர். ஜெயலலிதா இறப்பிற்குப் பின் இரவில் இந்த வீட்டினுள் இருந்து அமானுஷ்ய சப்தங்கள் எழுவதாக ஒரு தகவல் பரவியது. இங்கே தங்கியிருந்த பலரும் வேதா இல்லத்தை காலி பண்ணிவிட்டு கிளம்பினர்.
சசிகலா, இளவரசி ஆகியோர் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு சென்ற பின்னர் வேதா நிலையத்தை அரசு நினைவிடமாக மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டன.

அரசுடமையாக்கப்பட்ட வேதா இல்லம்
வேதா நிலையம், நினைவு இல்லமாக மாற்றப்படும் என்று கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல்வர் பழனிசாமி அறிவித்தார். தொடர்ந்து, போயஸ் தோட்டம் இல்லத்தை நினைவு இல்லமாக அறிவித்து, நிலத்தைக் கையகப்படுத்துவதற்காக அவசரச் சட்டம் ஒன்றை தமிழக அரசு பிறப்பித்தது.
கடந்த ஜனவரி 28ஆம் தேதி அரசுடமையாக்கப்பட்ட வேதா நிலையத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

அரசுக்கு அதிகாரமில்லை
ஜெயலலிதாவின் வாரிசுகள் தாங்கள்தான் என்று ஜெ.தீபாவும் தீபக்கும் வழக்குத் தொடர்ந்து வெற்றியும் பெற்றனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா நிலையத்தை அரசுடைமை ஆக்கியது செல்லாது எனவும் வேதா நிலையத்தை தீபா, தீபக்கிடம் 3 வாரங்களில் ஒப்படைக்க உத்தரவிடுகிறோம். கீழமை நீதிமன்றத்தில் உள்ள தொகையில் வருமானவரி நிலுவை போக மீதியை தீபக், தீபாவிற்கு கொடுக்கலாம் என நீதிபதி உத்தரவிட்டார்.வேதா நிலையம் சாவியை ஜெ.தீபா, தீபக்கிடம் கொடுக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.

கெத்தாக கையசைத்த தீபா
எந்த வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுக்கப்பட்டாரோ அதே போயஸ் தோட்டத்து வீட்டிற்குள் தனது கணவருடன் நுழைந்து ஜெயலலிதாவின் படத்திற்குள் மாலை அணிவித்தார் தீபா. பால்கனியில் நின்று கெத்தாக கையசைத்தார் தீபா. அனைவரும் பார்க்கும் வகையில் வீட்டின் மாடியிலும் கணவருடன் ஏறி நின்று உற்சாகமாக கையசைத்தார் தீபா. கடைசியில் சாதித்தே விட்டார் தீபா.