• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

காட்டுப்பள்ளி துறைமுகம்.. சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது: வேல்முருகன் வார்னிங்

|

சென்னை: காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் தொடர்பான மோசடியான கருத்துக் கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்றும் அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னைக்கு அருகே காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள L&T நிறுவனத்திற்குச் சொந்தமானத் துறைமுகம் 2012ம் ஆண்டில் இருந்து இயங்கிவந்தது. இந்தத் துறைமுகத்தின் 97 விழுக்காடு பங்குகளை ரூ.1950 கோடிகள் கொடுத்து, கடந்த 2018ம் ஆண்டு அதானி குழுமம் வாங்கியுள்ளது. 330 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த துறைமுகத்தை 6100 ஏக்கர் அளவிற்கு விரிவாக்கம் செய்யவதற்காக சுற்றுசூழல் அனுமதி கோரி அதானி குழுமம் விண்ணப்பித்துள்ளது.

Velmurugan urges cancellation of consultation on kattupalli port expansion

இந்நிலையில் இத்திட்டத்திற்கான பொதுமக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தினை தமிழக அரசு வரும் 22ஆம் தேதி நடத்துவதாக அறிவித்துள்ளது. இதனை தமிழக வாழ்வுரிமைக் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. ஏனென்றால், இத்திட்டத்தை செயல்படுத்தப்பட்டால், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும்.

குறிப்பாக, இத்திட்டத்திற்கு தேவையான 6110 ஏக்கர் நிலப்பரப்பில், 2291 மக்கள் பயன்பாட்டில் உள்ள புறம்போக்கு நிலங்கள் , 1515 ஏக்கர் TIDCO உள்ளிட்ட தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தனியார் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளன. அதுமட்டுமின்றி, ஏற்கனவே துறைமுகம் அமைந்துள்ள 337 ஏக்கர் போக, சுமார் 6 கிமீ வரையிலான கடல் பகுதிகளில் மணலை கொட்டி சுமார் 1967 ஏக்கர் கடல் பரப்பையும் ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ளது அதானி குழுமம்.

இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மீன்வளம் வெகுவாகக் குறைந்து ஆப்பிரஹாம்புரம், களஞ்சி, கருங்காளி, காட்டூர், வயலூர், காட்டுப்பள்ளிகுப்பம் உள்ளிட்ட 80 தமிழக - ஆந்திர மீனவ கிராமங்களைச் சேர்ந்த 1,00,000க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்.

ஏற்கனவே, சென்னை காமராஜர் துறைமுகம் விரிவாக்கத்தினாலும், எண்ணூர் துறைமுக உருவாக்கத்தின் விளைவாகவும், கொற்றலை ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே சில கிமீ- களாக இருந்த கடற்கரை தற்பொழுது சில நூறு மீட்டர்களாக சுருங்கியுள்ளது. மழைக் காலங்களில், வெள்ள வடிகாலாகச்" செயல்பட்டு வரும் பழவேற்காடு ஏரியும், கொற்றலை ஆறும், சில நூறு மீட்டர்களாக சுருங்கும். பின்னர், சென்னை வெள்ளத்தில் மிதப்பதை யாராலும் தடுக்க முடியாது. சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 35 லட்சம் மக்கள் வெள்ள அபாயத்தில் தள்ளப்படுவார்கள்.

காமராஜர் துறைமுகம், எண்ணூர் துறைமுகங்களின் விளைவாக எண்ணூரில் பல கிராமங்கள் கடல் அரிப்பால் பாதிக்கப்பட்டிருக்கின்றன. 2012ம் ஆண்டு காட்டுப்பள்ளி துறைமுகம் வந்த பின்னர் சாத்தான்குப்பம் கிராமம் அப்புறப்படுத்தப்பட்டது. கோரைக்குப்பம், வைரவன்குப்பம் உள்ளிட்ட 13 கிராமங்கள் கடலுக்கு அருகில் வந்துவிட்டன. தற்பொழுது இருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகம் மட்டும் அறிவித்தவாறு 20 மடங்கு விரிவாக்கம் செய்யப்பட்டால், பல மீனவ கிராமங்கள் கடலுக்குள் போவதோடு பழவேற்காடு பகுதியே கடலரிப்பால் கடுமையாக பாதிக்கப்படும்.

யூடியூப் சேனல்களுக்கு சென்னை மாநகர காவல் ஆணையர் கடும் எச்சரிக்கை

காலநிலை மாற்றம், கடல்நீர்மட்ட உயர்வு, கடல்நீர் உட்புகுதல், அதிகரிக்கும் இயற்கை சீற்றங்களாலும் சென்னை தொடர்ந்து ஆபத்துகளை எதிர்கொண்டிருக்கும் நிலையில் இத்திட்டத்தினை நடைமுறைப் படுத்தினால் மேலும் சூழல் அச்சுறுத்தல்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி, அதானித் துறைமுகத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தினால், எண்ணூர்-பழவேற்காடு பகுதிகளில் வசித்து வரும் பழங்குடியினரின் வாழ்வுமுறை முற்றிலுமாக சிதைக்கப்படும்.

சாகர்மாலா திட்டத்தின் மூலம் நாடு முழுவதிலும் உள்ள துறைமுகங்கள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன, அந்த வகையில் அதானி குழுமதிற்கு முந்த்ரா, தாஹேஜ், காண்ட்லா, ஹஸிரா, தம்ரா, மர்மகோவா, விழிஞ்சம், விசாகப்பட்டினம் ஆகிய 8 துறைமுகங்கள் தாரைவார்க்கபட்டுள்ளன. இந்த நிலையில் தமிழக நிலப்பகுதியில் உள்ள துறைமுகத்தையும் அது சார்ந்த வர்த்தகத்தையும் அதானிக்கு ஒப்படைப்பதை சூழலியல் ரீதியாகவும் தமிழகத்தின் பொருளாதார நலன் அடிப்படையிலும் நாம் எதிர்க்க வேண்டும்.

அதானி குழுமத்தின் இலாபவெறிக்காக தமிழகத்தின் இயற்கை வளத்தையும், சுமார் 1,00,000 தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து , 35 லட்சம் தமிழக மக்களை வெள்ள அபாயத்தில் நிறுத்தும், இந்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்தை நாம் தடுத்து நிறுத்த வேண்டும்.

இந்த திட்டத்திற்கான மக்கள் கருத்து கேட்கும் கூட்டம் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. கொரோனா காலமாக இருப்பதால், கருத்து கேட்புக்கூட்டத்தில் பெரும்பாலான மக்கள் கலந்து கொள்ள முடியாது. இதனை பயன்படுத்தி, அதானி குழுமத்திற்கு சாதகமான முடிவுகளை அக்கூட்டத்தில் நிறைவேற்ற ஆட்சியாளர்கள் திட்டம் தீட்டுவார்கள்.

காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம் என்பதே நாசக்கார திட்டமாக இருக்கும் நிலையில், கருத்துக்கேட்பு கூட்டம் மட்டும் எப்படி சரியானதாக இருக்க முடியும். எனவே மோசடியான இந்த கருத்து கேட்பு கூட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது.

இவ்விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிட்டால், அரசியல் கட்சிகளையும், அரசியல் இயக்கங்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களையும், மனித உரிமை செயல்பாட்டாளர்களையும் ஒன்று திரட்டி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாபெரும் போராட்டத்தை முன்னெடுக்கும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்" இவ்வாறு கூறியுள்ளார்.

 
 
 
English summary
tamilaga valvurimai katchi leader Velmurugan urges cancellation of consultation on forest school port expansion
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X